வணக்கம்! தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! டாக்டர் பி.சி.ராயின் நினைவைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் இந்த தினம், நமது மருத்துவ சமுதாயத்தினரின் உயரிய கொள்கைகளைக் குறிக்கும் சின்னமாக அமைந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டாக, நாட்டு மக்களுக்கு நீங்கள் ஆற்றி வரும் சேவை இதன் உதாரணமாகத் திகழ்கிறது. நாட்டின் அனைத்து மருத்துவர்களுக்கும் 130 கோடி இந்திய மக்களின் சார்பாக, எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, மருத்துவர்கள் கடவுளின் மற்றொரு வடிவம் என்று காரணம் இல்லாமல் கூறப்படுவதில்லை. நோய்களாலோ, விபத்தாலோ அபாயக்கட்டத்தில் உள்ள பலரது உயிரைக் காப்பாற்றும் தேவதைகளாக செயல்பட்டு நமக்கு மருத்துவர்கள் புதிய வாழ்வைத் தருகின்றனர்.
நண்பர்களே, இன்று கொரோனாவுக்கு எதிராக நாடு மிகப் பெரிய போரை நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், மருத்துவர்கள் இரவு, பகலாகப் பாடுபட்டு லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர். இந்த அரிய பணியில், நாட்டின் பல மருத்துவர்கள் தங்கள் இன்னுயிர்களை இழந்துள்ளனர். உயிர்த்தியாகம் புரிந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நான் எனது பணிவான மரியாதையைச் செலுத்துவதுடன், அவர்களது குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, கொரோனாவுக்கு எதிரான போரில் எத்தனை சவால்களை எதிர்கொண்ட போதிலும், நமது விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் பல தீர்வுகளைக் கண்டறிந்து, செயல்திறன் மிக்க மருந்துகளை உருவாக்கியுள்ளனர். இந்தப்புதிய தொற்று, இப்போது உருமாறி வருகிறது. ஆனால், நமது மருத்துவர்கள் தங்களது அறிவு மற்றும் அனுபவத்தின் மூலம், அவற்றின் அபாயத்தை சந்தித்து வருகின்றனர். பல பத்தாண்டுகளாக, நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பு எந்த அளவில் இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். முந்தைய காலங்களில் மருத்துவ கட்டமைப்புகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டு வந்தன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நமது நாட்டின் மக்கள் தொகை அழுத்தம் இந்தச் சவாலை மேலும் சிரமமாக்கி விட்டது. இதற்கிடையிலும், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், தொற்று பாதிப்பு விகிதம் இந்தியாவில் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஒருவரது அகால மரணம் மிகுந்த கவலை அளிக்கும் விஷயம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால், இந்தியாவில் லட்சக்கணக்கானோரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இதன் முழு பாராட்டும் நமது மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் கடின உழைப்பையே சாரும்.
நண்பர்களே, நமது அரசு சுகாதார நடவடிக்கைகளில் முழுக்கவனம் செலுத்தி வருகிறது.கடந்த முதல் அலையின் போது, நாம் ரூ.15,000 கோடியை மருத்துவத்துக்காக ஒதுக்கினோம். இந்த ஆண்டு, சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகி இருமடங்காகியுள்ளது. இப்போது, சுகாதார வசதிகள் குறைவாக உள்ள இடங்களில் அவற்றை வலுப்படுத்துவதற்காக, ரூ.50,000 கோடிக்கு கடன் உத்தரவாத திட்டத்தை அறிவித்துள்ளோம். குழந்தைகளுக்கான சுகாதாரத் திட்டங்களை வலுப்படுத்த ரூ.22,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று, நாட்டில் பல்வேறு பகுதிகளில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளும், மருத்துவக் கல்லூரிகளும் உருவாக்கப்பட்டு வருவதுடன், நவீன சுகாதாரக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 2014-ம் ஆண்டு வரை நாட்டில் ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன. புதிதாக 15 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் கடந்த ஏழு ஆண்டுகளில் தொடங்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் ஒன்றரை மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மருத்துவ மாணவர்கள் இடங்கள் அதிகரித்துள்ளன. இதன் மூலம், தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் மருத்துவர்கள் ஆகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அவர்களது திறமை மற்றும் கனவுகளுக்கு புதிய வடிவம் கிடைக்கவுள்ளது. இந்த மாற்றங்களுக்கு இடையில், மருத்துவர்களின் பாதுகாப்புக்கு அரசு உறுதி பூண்டுள்ளது. மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் வகையில், கடந்த ஆண்டுகூட கடுமையான சட்ட விதிகளை அரசு கொண்டு வந்துள்ளது. இதனுடன், நமது கொவிட் முன்கள வீரர்களுக்கு இலவச காப்பீட்டுத் திட்டத்தையும் நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.
நண்பர்களே, கொரோனாவுக்கு எதிரான நாட்டின் போராட்டமாக இருந்தாலும், சுகாதார உள்கட்டமைப்புகளை பெருக்கி, மருத்துவத்துறையை முன்னேற்றுவதாக இருந்தாலும், அதில் நீங்கள் அனைவரும் முக்கிய பங்காற்ற வேண்டும். உதாரணமாக, முதல் கட்டத்தில் நீங்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்கள். தடுப்பூசி போட்டுக் கொள்வதில் நாட்டில் பெரும் ஆதரவும், உற்சாகமும் பல மடங்கு அதிகரித்து காணப்படுகிறது. இதுபோல, மக்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளவும், சரியான நடத்தை விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவும், தொடர்ந்து நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
யோகா பயிற்சிகளை பரப்பி அவை குறித்து மருத்துவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது பாராட்டுதலுக்குரியது. சுதந்திரத்துக்குப் பின்பு கடந்த நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய யோகாவை ஊக்குவிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கொரோனா காலத்தில், யோகா-பிராணாயாமம் சிறப்பான பயனை அளித்து வருகிறது.
நண்பர்களே, உங்களுக்கு மருத்துவ அறிவியல் தெரியும். அதில் நிபுணத்துவம் பெற்றுள்ள இந்தியர்களாகிய உங்களுக்கு யோகாவைப் புரிந்து கொள்வது இயல்பாகவே எளிதாகும். யோகா பற்றி நீங்கள் ஆராய்ச்சி செய்யும்போது, உலகம் முழுவதும் உங்களைக் கவனிக்கும். கொவிட் தொற்றுக்குப் பின்னர் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதில், யோகாவின் பயன்கள் பற்றி ஆதாரப்பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ள நேரம் ஒதுக்கி செயல்படுவது பாராட்டுக்குரியது. இந்த ஆய்வுகளை சர்வதேச சஞ்சிகைகளில் வெளியிட வாய்ப்பும் உள்ளது.
நண்பர்களே, கடின உழைப்பு, திறமை ஆகியவற்றில் உங்களை யாரும் மிஞ்சமுடியாது. உங்களது அனுபவங்களை நீங்கள் ஆவணப்படுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன். உங்களது அனுபவங்களுடன் நோயின் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் ஆகியவையும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். பல்வேறு மருந்துகள் மற்றும் சிகிச்சைகளின் விளைவால் ஏற்படும் பலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் துறைகள், இதனை ஆராய்ச்சியாகவும் மேற்கொள்ளலாம். நமது மருத்துவர்கள் தொண்டாற்றும் நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்து அவர்கள் உலக அளவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுபோன்ற அறிவியல் ஆய்வுகளின் பலனை உலக நாடுகள் பெறுவதற்கு இதுவே உரிய தருணமாகும். கொவிட் பெருந்தொற்று இதற்கு ஆரம்பப் புள்ளியாக அமையக்கூடும். தடுப்பூசிகள் நமக்கு எவ்வாறு பயன்படுகின்றன, முன்கூட்டியே நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது எப்படி என்பது குறித்து தீவிரமான ஆய்வுகளை மேற்கொள்ள முடியுமா எனப் பார்க்க வேண்டும். கடந்த நூற்றாண்டின் பெருந்தொற்று பற்றிய எந்த ஆவணமும் நம்மிடம் இல்லை. ஆனால், தற்போது, நம்மிடையே தொழில்நுட்பம் உள்ளதால், கொவிட் தொற்றை நாம் எப்படி எதிர்கொண்டோம் என்பதை ஆவணப்படுத்த வேண்டும். இது மனித குலத்திற்கு பேருதவியாக அமையும். அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற நமது உறுதிப்பாட்டை, உங்களது சேவையும், முயற்சிகளும் நிச்சயம் ஏற்படுத்தும். நம் நாடு கொரோனாவிலிருந்து மீண்டு வெற்றி பெறும். வளர்ச்சியின் புதிய பரிமாணத்தை நாம் அடைவோம். இந்த சிறந்த வாழ்த்துக்களுடன் எனது உரையை நிறைவு செய்கிறேன். மிக்க நன்றி !