மேன்மை தங்கிய வெளியுறவுத்துறை அமைச்சர்களே, சர்வதேச அமைப்புகளின் தலைவர்களே,
ஜி.20 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ள உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். இந்தியா தனது ஜி20 தலைமைத்துவத்துக்கு தேர்வு செய்துள்ள கருப்பொருள், ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பதாகும். இது நோக்கத்துக்கான ஒற்றுமை மற்றும் செயல்பாட்டுக்கான ஒற்றுமை என்பதை அடையாளப்படுத்துகிறது. இந்தக் கூட்டம் ஒன்று சேர்ந்து பொதுவான, உறுதியான நோக்கங்களை எட்டுவதற்கான உணர்வை பிரதிபலிக்கும் என நான் நம்புகிறேன்.
மேதகு தலைவர்களே,
பன்முகத்தன்மை இன்று சிக்கலில் உள்ளது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு நோக்கங்களுக்காக இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலக நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. முதலாவதாக எதிர்காலத்தில் போர்களைத் தடுப்பது, இரண்டாவதாக பொதுவான விஷயங்களில் சர்வதேச ஒத்துழைப்பை அதிகரிப்பது. நிதி நெருக்கடிகள், பருவநிலை மாற்றம், பெருந்தொற்று, பயங்கரவாதம், போர்கள் போன்ற கடந்த சில ஆண்டுகளின் அனுபவம், இந்த இரண்டு விஷயங்களிலும் உலக நிர்வாகம் தோல்வியடைந்து விட்டது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இந்த தோல்வியின் சோகமான பின்விளைவுகள், நம்மைப் போன்ற வளரும் நாடுகளைத்தான் பாதிக்கின்றன என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். சில ஆண்டுகள் முன்னேற்றத்திற்குப் பின்னர், நீடித்த வளர்ச்சி இலக்குகளை நோக்கி நாங்கள் நடைபோட்டு வருகிறோம். பல வளரும் நாடுகள் தங்களது மக்களுக்கு உணவு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சி மேற்கொள்ளும்போது, கடன்களில் சிக்கி தவித்து வருகின்றன. வளர்ந்த நாடுகளால் ஏற்பட்ட உலக வெப்பமயமாதலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால்தான் உலகின் தெற்குப் பிராந்தியத்திற்கான குரலை இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் எழுப்ப முயன்று வருகிறது. வளர்ந்த நாடுகளின் முடிவுகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் குரலை கேட்காமல் உலகத் தலைமை என்பதை எந்தக் குழுவும் எழுப்ப முடியாது.
மேதகு தலைவர்களே,
உலகளவில் நாடுகள் பல பிரிவுகளாக பிரிந்துள்ள சூழலில் நீங்கள் கூடியுள்ளீர்கள். வெளியுறவு அமைச்சர்கள் என்ற வகையில், தற்போதைய புவிசார் அரசியல் பதற்றங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உங்களது விவாதம் அமைவது இயல்பானதே. இந்த பதற்றங்கள் எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என்பது குறித்தே நம் அனைவரின் நிலைப்பாடுகளும், கண்ணோட்டங்களும் உள்ளன. இருப்பினும் உலகப் பொருளாதாரத்தின் முக்கிய நாடுகளாகிய நமக்கு இந்த அறையில் இல்லாதவர்களுக்காகவும் குரலெழுப்பும் பொறுப்பு உள்ளது. வளர்ச்சி, மேம்பாடு, பொருளாதார விரிதிறன், பேரிடர் பரவல், நிதி நிலைத்தன்மை, எல்லைக் கடந்த குற்றங்கள், ஊழல், பயங்கரவாதம், உணவு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு ஆகிய சவால்களை கட்டுப்படுத்துவது குறித்து உலகம் ஜி20-ஐ உற்று நோக்குகிறது. இவை அனைத்திலும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தவும், உறுதியான முடிவுகளை மேற்கொள்ளவும் ஜி20 அமைப்புக்கு திறன் உள்ளது. நாம் ஒன்றிணைந்து தீர்க்க முடியாத பிரச்சனைகளை நமது வழியில் குறுக்கிட அனுமதிக்கக் கூடாது. மகாத்மா காந்தி, புத்தர் ஆகியோரின் பூமியில் நீங்கள் கூடியிருப்பதால், நம்மைப் பிரிக்கும் விஷயங்கள் குறித்து கவலைப்படாமல் நம்மை ஒன்றுப்படுத்தும் இந்தியாவின் கலாச்சார மாண்புகளிலிருந்து நீங்கள் ஊக்கம் பெற வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.
அண்மைக்காலங்களில், நூற்றாண்டில் கண்டிராத மிக மோசமான பெருந்தொற்றை நாம் கண்டோம். இயற்கை பேரிடர்களில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியானதை நாம் பார்த்தோம். இந்த நெருக்கடியான காலங்களில் உலக விநியோகச் சங்கிலி முறிந்ததையும் நாம் கண்டோம். நிலையான பொருளாதாரங்கள் திடீரென அபரிமிதமான கடன்கள் மற்றும் நிதிச் சிக்கலால் நிலைகுலைந்ததையும் நாம் பார்த்தோம். இந்த அனுபவங்கள் நமது சமுதாயத்தில், நமது பொருளாதாரத்தில், நமது சுகாதார நடைமுறைகளில், நமது உள்கட்டமைப்பில் மீள்தன்மை அவசியம் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. வளர்ச்சிக்கும், திறமைக்கும் இடையிலான சரியான சமன்பாட்டை கண்டறியும் முக்கியமான பொறுப்பும், பங்கும் ஜி20 அமைப்புக்கு உள்ளது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த சமன்பாட்டை எளிதாக அடைய முடியும். எனவே உங்களது இந்தக் கூட்டம் மிகவும் முக்கியமானதாகும். உங்களது கூட்டு ஞானம் மற்றும் திறனில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இன்றைய கூட்டம், முக்கிய நோக்கத்துடன் அனைவரையும் உள்ளடக்கிய செயல்திறன் சார்ந்ததாக இருக்கும் என நான் நம்புகிறேன். வேறுபாடுகளை களைந்து நாம் முன்னேறுவோம்.
இந்தக் கூட்டம் ஆக்கப்பூர்வமானதாக அமைய அனைவருக்கும் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.