இந்த அவையின் தலைவரும், நாட்டின் துணைக் குடியரசு துணைத் தலைவருமான மதிப்பிற்குரிய திரு வெங்கையா நாயுடு அவர்களின் பதவிக் காலம் முடிவடையும் போது அவருக்கு நன்றி தெரிவிக்க நாம் இங்கு கூடியுள்ளோம். இந்த அவைக்கு இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். உங்களின் கண்ணியமான தலைமையுடன் பல வரலாற்று நிகழ்வுகள் இந்த அவையில் நடந்துள்ளன. நான் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன், ஆனால் பொது வாழ்வில் சோர்வடையவில்லை என்று பலமுறை நீங்கள் கூறியுள்ளீர்கள். எனவே, இந்த அவையை வழிநடத்தும் உங்களின் பொறுப்பு முடிவுக்கு வரலாம், ஆனால் உங்கள் அனுபவங்கள் நாட்டிற்கும் எங்களைப் போன்ற பல பொது வாழ்வு செயற்பாட்டாளர்களுக்கும் எதிர்காலத்தில் நீண்ட காலத்திற்கு நன்மை பயக்கும்.
மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே
இன்று, நாடு சுதந்திரம் பெற்ற அமிர்தப் பெருவிழாவிலிருந்து அடுத்த 25 ஆண்டுகளுக்கான புதிய பயணத்திற்குப் புறப்படும்போது, நாட்டின் தலைமையும் ஒரு வகையில் ஒரு புதிய சகாப்தத்தின் கைகளில் உள்ளது. நாட்டின் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத்தலைவர், மக்களவைத் தலைவர், பிரதமர் ஆகியோர் சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்தவர்கள் என்பதாலும், ஒவ்வொருவரும் மிக எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதாலும் இவ்வாண்டு கொண்டாடப்படும் ஆகஸ்ட் 15 சிறப்பு வாய்ந்தது என்பதை நாம் அறிவோம். இது ஒரு பெரிய குறியீட்டு மதிப்பைக் கொண்டுள்ளது மற்றும் ஒரு புதிய சகாப்தத்தின் காட்சியாகும்.
மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே
உங்களின் பல்வேறு நிலைகளில் இளைஞர்களுக்காக எப்போதும் உழைத்த நாட்டின் துணைத் தலைவர் நீங்கள். அவையில் உள்ள இளம் எம்.பி.க்களை நீங்கள் எப்போதும் ஊக்கப்படுத்தினீர்கள். இளைஞர்களுடன் தொடர்புகொள்வதற்காக நீங்கள் தொடர்ந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுக்குச் சென்று வருகிறீர்கள். புதிய தலைமுறையுடன் நீங்கள் தொடர்ந்து இணைந்திருக்கிறீர்கள், இளைஞர்கள் உங்கள் வழிகாட்டுதலைப் பெற்றிருக்கிறார்கள், அவர்கள் உங்களைச் சந்திக்க எப்போதும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த எல்லா நிறுவனங்களிலும் உங்கள் புகழ் மிகஅதிகமாக உள்ளது. குடியரசு துணைத் தலைவராக நீங்கள் அவைக்கு வெளியே ஆற்றிய உரைகளில் சுமார் 25 சதவீதம் இளைஞர்களுக்காக இருந்தவை என்று எனக்கு சொல்லப்பட்டுள்ளது. இதுவே ஒரு முக்கியமான விஷயமாகும்.
நண்பர்களே
நாம் என்ன சொல்கிறோம் என்பது முக்கியம் ஆனால் அதைவிட முக்கியமானது நாம் எப்படி சொல்கிறோம் என்பதுதான். எந்தவொரு உரையாடலின் வெற்றியின் அளவுகோல் என்னவென்றால், அது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், அதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், மேலும் நாம் சொல்வதைப் பற்றி சிந்திக்க அவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டும். அவைக்கு உள்ளேயும், வெளியேயும் வெங்கையா அவர்கள் இந்தக் கலையை திறமையுடன் வெளிப்படுத்துவதை நாட்டு மக்கள் நன்கு அறிவர். உங்கள் வெளிப்பாட்டு பாணி அசாத்தியமானது, தனித்துவமானது. உங்கள் வார்த்தைகளில் ஆழமும் தீவிரமும் இருக்கிறது. உங்கள் பேச்சில் புத்திசாலித்தனமும் கனமும் இருக்கிறது. அரவணைப்பும் ஞானமும் உண்டு. உங்களின் பேச்சு இதயத்தைத் தொடுவது, காதுகளுக்கு இனிமையானது.
மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே
நீங்கள் நிர்ணயித்த தரநிலைகளில் ஜனநாயகத்தின் முதிர்ச்சியை நான் காண்கிறேன். அவை விவாதத்தின் போது இடையூறுகள் ஏற்பட்டால், அவை நடவடிக்கைகளை ஒத்திவைப்பது வழக்கமாகக் கருதப்பட்டது. ஆனால் நீங்கள் உரையாடல், தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் அவையை நடத்தியது மட்டுமின்றி, அதைப் பயனுள்ளதாகவும் மாற்றினீர்கள். அவை நடவடிக்கைகளின் போது உறுப்பினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டால், நீங்கள் எப்போதும் ஒன்றைச் சொல்வீர்கள்: "அரசு முன்மொழியட்டும், எதிர்க்கட்சி எதிர்க்கட்டும், அவை தீர்மானிக்கட்டும். மற்றொரு அவையிலிருந்து வந்துள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவோ அல்லது மறுப்பு தெரிவிக்கவோ இந்த அவைக்கு நிச்சயமாக உரிமை உண்டு. இந்த அவை அவற்றை நிறைவேற்றலாம், நிராகரிக்கலாம் அல்லது திருத்தலாம். ஆனால் அவற்றை நிறுத்திவைப்பது அல்லது தடுத்துநிறுத்துவது என்ற கோட்பாடு நமது ஜனநாயகத்தில் இல்லை."
மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே
நம்மிடையே உடன்பாடுகள் அல்லது கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவையின் அனைத்து உறுப்பினர்களும் இன்று உங்களிடம் விடைபெற உள்ளனர். இதுதான் நமது ஜனநாயகத்தின் அழகு. இது இந்த அவையில் உங்கள் மீதுள்ள மரியாதையை எடுத்துக்காட்டுகிறது. உங்களின் முன்முயற்சிகளும் அனுபவங்களும் எதிர்காலத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் நிச்சயம் உத்வேகம் அளிக்கும் என்று நம்புகிறேன். இந்தப் பதவியை வகிப்பவர்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் வகையில், தனித்துவமான முறையில் அவையை நடத்துவதற்கு இதுபோன்ற அளவுகோல்களை நீங்கள் அமைத்துள்ளீர்கள். மாநிலங்களவை நீங்கள் நிறுவிய பாரம்பரியத்தை பின்பற்றும், நாட்டிற்கு அதன் பொறுப்புணர்வின் படி செயல்படும். இந்த நம்பிக்கையுடன், முழு அவையின் சார்பாக, உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டிற்காகவும், இந்த அவைக்காகவும் நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதற்காக அனைவரின் சார்பாகவும் நான் உங்களுக்குக் கடமைப்பட்டுள்ளேன். வாழ்த்துக்கள் பல!