வணக்கம்!
முதலமைச்சர் திரு.சிவ்ராஜ் சிங் சௌகான் அவர்களே, மத்திய அமைச்சரவையின் எனது சகாக்களே, மத்தியப்பிரதேச அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்றத்தின் எனது சகாக்களே, மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, மத்தியப்பிரதேசத்தின் எனதருமை சகோதர, சகோதரிகளே!
இன்று மத்தியப்பிரதேசத்தின் 5.25 லட்சம் ஏழை குடும்பங்கள் தங்களின் கனவு இல்லமான கல் வீடுகளைப் பெற்றுள்ளனர். ஒரு சில நாட்களில் புத்தாண்டான விக்ரம் சம்வாத் 2079 தொடங்கவிருக்கிறது. புத்தாண்டு வரவிருக்கும் நிலையில், புதுமனைப் புகுவிழா நடத்துவதே வாழ்க்கையின் மதிப்புமிக்க தருணமாகும். உங்கள் அனைவருக்கும் நான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
நமது நாட்டின் சில அரசியல் கட்சிகள் வறுமையை ஒழிக்க பல முழக்கங்களை எழுப்பின. ஆனால் ஏழைகளுக்கு வாழ்வளிக்க அவ்வளவாக எதையும் செய்யவில்லை. ஏழைகளுக்கு அதிகாரமளிக்கப்பட்டால் அவர்கள் வறுமையை எதிர்த்துப் போராடும் துணிவைப் பெறுவார்கள் என்பது எனது நம்பிக்கை. நேர்மையான அரசின் முயற்சிகளும் அதிகாரமளிக்கப்பட்ட ஏழைகளும் ஒன்று சேரும்போது வறுமை ஒழியும். எனவே மத்தியில் உள்ள பிஜேபி அரசாக இருந்தாலும், மாநிலங்களில் பிஜேபி அரசுகளாக இருந்தாலும் ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்’ என்ற மந்திரத்தைப் பின்பற்றி ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. இன்றைய நிகழ்ச்சி இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாகும். இந்த 5.25 லட்சம் வீடுகள் வெறும் எண்ணிக்கை அல்ல. நாட்டின் ஏழை மக்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதன் முத்திரையாகும். கிராமங்களில் ஏழைப் பெண்களை லட்சாதிபதியாக்கும் இயக்கத்தை இந்த வீடுகள் பிரதிபலிக்கின்றன. இந்த வீடுகள் மத்தியப்பிரதேசத்தின் தொலை தூர கிராமங்கள் மற்றும் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளை பெறும் மத்தியப்பிரதேச மக்களை நான் வாழ்த்துகிறேன்.
ஏழைகளுக்குக் கல் வீடுகள் வழங்கும் இயக்கம் வெறும் அரசு திட்டமல்ல. இது கிராமங்களுக்கும், ஏழைகளுக்கும் நம்பிக்கையை உறுதிபடுத்துவதாகும். வறுமையிலிருந்து ஏழைகளை வெளியேற்றி வறுமையை எதிர்த்துப் போராட அவர்களை ஊக்கப்படுத்தும் முதல்கட்டமாகும். ஏழைகள் தங்களின் தலைக்கு மேல் உறுதியான கூரையைப் பெறும்போது அவர்கள் தங்களின் குழந்தைகளுக்கான கல்வியிலும், மற்ற வேலையிலும் முழு கவனம் செலுத்த முடியும். ஏழைகள் வீடுகளை பெறும்போது அவர்களின் வாழ்க்கையில் நிலைத்தன்மை வருகிறது. இந்த சிந்தனையோடு எங்களின் அரசு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு உயர் முன்னுரிமை அளிக்கிறது. நான் பொறுப்பேற்றதற்கு முன்பு இருந்த அரசும் ஒரு சில லட்சம் வீடுகளை கட்டியுள்ளன. ஆனால் எங்களின் அரசு ஏழைகளுக்கு 2.5 கோடி வீடுகளை வழங்கியுள்ளது. இவற்றிலும் இரண்டு கோடி வீடுகள் கிராமங்களில் கட்டப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா சவால்கள் இருந்தபோதும், இந்தப் பணி மந்தமடையவில்லை. மத்தியப்பிரதேசத்திலும் கூட அனுமதிக்கப்பட்ட 30.5 லட்சம் வீடுகளில் 24 லட்சம் வீடுகளின் பணிகள் முடிவடைந்துள்ளன.
சுதந்திரத்திற்குப் பின் பல அரசுகளை நமது நாடு தந்துள்ளது. ஆனால் முதன் முறையாக நாட்டு மக்களின் தோளோடு தோள் சேர்ந்து அவர்களின் இன்பத்திலும், துன்பத்திலும் இணையாக செயல்படுகின்ற அரசை இப்போதுதான் மக்கள் பார்க்கிறார்கள். கொரோனா நெருக்கடி காலத்தில் ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி அல்லது ஏழைகளுக்கு இலவச ரேஷன் என பிஜேபி அரசு ஏழைகளுக்கு எவ்வாறு உணர்வுபூர்வமாக பணியாற்றி உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பற்றி சற்று முன் சிவ்ராஜ் அவர்கள் விவரித்தார். பிரதமரின் வறியோர் நல உணவுத் திட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு தொடர்வது என இரண்டு நாட்களுக்கு முன் முடிவு செய்யப்பட்டது. இதனால் ஏழைகளின் வீட்டு அடுப்பு எரியும்.
நண்பர்களே,
சிவ்ராஜ் அவர்களின் அரசை மற்றொரு சிறப்புக்காக இன்று நான் பாராட்ட விரும்புகிறேன். உணவு தானிய கொள்முதலில் நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி மத்தியப்பிரதேசம் புதிய சாதனைப் படைத்துள்ளது. ஏற்கனவே இருந்ததை விட அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு கூடுதல் தொகை வங்கிகளில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் விவசாயி கௌரவிப்பு நிதி சிறு விவசாயிகளுக்கு பயனளித்துள்ளது. மத்தியப்பிரதேசத்தின் 90லட்சம் சிறு விவசாயிகளின் செலவுகளுக்காக ரூ.13,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான நேரம் இதுவாகும். இந்தியாவில் பிரகாசமான எதிர்காலம் என்பது ஏழை மக்களின் பிரகாசமான எதிர்காலத்தால் மட்டுமே சாத்தியமாகும். இந்தப் புதிய வீடுகள் உங்கள் குடும்பங்களுக்கு புதிய வழியை திறக்கட்டும். புதிய இலக்குகளை நோக்கி முன்னேற உங்களுக்கு பலமளிக்கட்டும். உங்களின் குழந்தைகளுக்கு ஞானத்தையும், திறனையும், நம்பிக்கையையும் அளியுங்கள். புதுமனைப் புகுவிழா பயனாளிகள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்.
நன்றி!