மத்திய அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களே, இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் பாய் ஜெய்ராம் தாக்குர் அவர்களே, மத்திய அமைச்சரும், இமாச்சலப் பிரதேசத்தின் இளவயது மகனுமான பாய் அனுராக் தாக்குர் அவர்களே, இமாச்சலப் பிரதேச அரசின் அமைச்சர்களே, உள்ளூர் பிரதிநிதிகளே, லஹவுல் – ஸ்பிட்டியைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே.
நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் மத்தியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அட்டல் குகைப் பாதை திறக்கப்பட்டதற்காக உங்கள் அனைவருக்கும் ஏராளமான பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது அட்டல் ஜியின் பரிசாக உள்ளது.
நண்பர்களே,
பல ஆண்டுகளுக்கு முன்பு, இயக்கவாதியாக உங்களை நான் சந்தித்த சமயங்களில், ரோஹ்டாங்கில் இருந்து நீண்ட தூர பயணம் வருவேன். பனிக்காலங்களில் ரோஹ்டாங் மலைப் பாதை மூடப்படுவதால் மருத்துவம், கல்வி, வருமானத்துக்கான பல வாய்ப்புகள் எந்த அளவுக்குப் பாதிக்கப்படும் என்பதை அப்போது நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.. அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் செயலாற்றிக் கொண்டிருந்த என் நண்பர்கள் இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில நண்பர்கள் மறைந்துவிட்டார்கள்.
கின்னாவூரைச் சேர்ந்த தாக்குர் சென் நெகி ஜி உடன் நான் நிறைய விஷயங்களைப் பேசி, நிறைய விஷயங்களைக் கற்றிருக்கிறேன். நெகி ஜி அதிகாரியாகவும், மக்கள் பிரதிநிதியாகவும் இமாச்சலப் பிரதேசத்துக்கு சேவையாற்றியுள்ளார். அநேகமாக அவர் 100 ஆண்டுகள் வரை வாழ்ந்திருப்பாரா? ஆனால், கடைசிக் காலம் வரையில் அவர் துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவருடைய ஆளுமை மற்றவர்களுக்கு சக்தி ஊட்டுவதாகவும், உத்வேகம் தருவதாகவும் இருந்தது. அவரிடம் பல விஷயங்களை நான் கேட்டிருக்கிறேன். அவர் பல விஷயங்களைக் கூறியிருக்கிறார். நீண்ட வரலாற்றின் சாட்சியாக அவர் இருந்தார். இந்தப் பகுதி முழுக்க எப்படிப்பட்டது என்பதை நான் புரிந்து கொள்ள அவர் எனக்கு நிறைய உதவிகரமாக இருந்துள்ளார்.
நண்பர்களே,
இந்தப் பிராந்தியத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் அட்டல்ஜியும் நன்றாக அறிந்திருந்தார். இந்த மலைப் பகுதிகள் எப்போதும் அட்டல்ஜிக்கு பிடித்தமானவையாக இருந்தன. உங்களுடைய சிரமங்களைக் குறைப்பதற்காக, இந்த குகைப் பாதை அமைக்கும் திட்டத்தை, 2000வது ஆண்டில் அவர் கீலாங் வந்த போது அறிவித்தார். அந்த சமயத்தில் அந்தப் பகுதியில் இருந்த திருவிழா போன்ற சூழ்நிலை இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. மகத்தான மக்கள் சேவகரும், மதிப்புமிக்க மைந்தருமாக இருந்த டாஷி டாவாவின் சேவைகளும் நினைவுகூரப்பட்டது. அவருடைய மற்றும் அவருடைய பல நண்பர்களின் ஆசிகளுடன் தான் இத் திட்டம் சாத்தியமாகியுள்ளது.
நண்பர்களே,
அட்டல் குகைப்பாதை என்பது லஹவுல் மக்களுக்குப் புதிய விடியலாக இருப்பது மட்டுமின்றி, பாங்கி பகுதி மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். 9 கிலோ மீட்டர் நீளம் உள்ள இந்த குகைப்பாதை அமைக்கப்பட்டதால், இந்த நகரங்களுக்கு இடையிலான பயண தூரம் 45 – 46 கிலோ மீட்டர் அளவுக்குக் குறைந்துள்ளது. இதுபோன்ற வாய்ப்பு தங்கள் வாழ்நாளில் ஏற்படும் என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த பல நண்பர்கள் கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். பனிக்காலங்களில் பயண வசதிக்காக நோயாளிகள் காத்திருப்பதை மக்கள் பார்த்து, அவர்களுடைய வலியை உணர்ந்திருப்பார்கள். இன்றைக்கு தங்களின் பிள்ளைகள் – மகன்களும் மகள்களும் – அதுபோன்ற துன்பமான சூழ்நிலைகளுக்கு ஆட்பட வேண்டியிராது என்பதில் அவர்கள் திருப்தி அடைந்திருக்கிறார்கள்.
நண்பர்களே,
லஹவுல்-ஸ்பிட்டி மற்றும் பாங்கி பகுதி விவசாயிகளாக இருந்தாலும், பழத் தோட்டப் பண்ணைகள் தொழில் தொடர்புள்ளவர்கள், கால்நடை மந்தைகள் வளர்ப்பவர்கள், மாணவர்கள், சேவைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் அட்டல் குகைப்பாதை மூலமாகப் பயன் பெறுவார்கள். லஹவுல் பகுதி விவசாயிகள் விளைவிக்கும் காலிபிளவர், உருளைக்கிழங்கு மற்றும் கொட்டை வகைகள் கெட்டுப் போகாது, அவை விரைவாக மார்க்கெட்களைச் சென்றடையும்.
லஹவுல் பகுதியின் அடையாளமாக இருக்கும் சந்திரமுகி உருளைக்கிழங்கை நான் சாப்பிட்டிருக்கிறேன். அவை புதிய மார்க்கெட்களுக்கு இனி செல்லும், புதிய வியாபாரிகள் அவற்றை வாங்குவார்கள். இப்போது, புதிய காய்கறிகள் மற்றும் புதிய பயிர்களைப் போல, இந்தத் துறையின் வாய்ப்புகளும் வேகமாக அதிகரிக்கும்.
லஹவுல் – ஸ்பிட்டி பகுதி மூலிகைகள் வளர்ப்புக்கும் பெயர் பெற்றது. கருஞ்சீரகம், பெருங்காயம், குங்குமப்பூ, போன்ற மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் உற்பத்தி அதிகமாக இருக்கும். உலக அளவில் இந்தியாவுக்கும், இமாச்சலப் பிரதேசத்துக்கும் இந்தப் பொருட்கள் லஹவுல்-ஸ்பிட்டியின் அடையாளமாக இருக்கும்.
மாணவர்கள் கல்விக்காக வெளியூர் சென்று தங்க வேண்டியிருக்காது என்பதும் அட்டல் குகைப் பாதையால் கிடைக்கும் மற்றொரு ஆதாயமாக இருக்கும். பயண தூரத்தை இந்தப் பாதை குறைப்பதாக மட்டுமின்றி, மாணவர்களின் வாழ்வை எளிதாக்குவதாகவும் அமைந்துள்ளது.
நண்பர்களே,
இந்தப் பகுதியில் சுற்றுலா அம்சங்களை மேம்படுத்த நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் இயற்கையின் அழகு நிறைந்திருக்கிறது. ஆன்மிக மற்றும் மதம் சார்ந்த சுற்றுலாவுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. சந்திரட்டால் செல்வது இனி சுற்றுலாப் பயணிகளுக்கு கஷ்டமாக இருக்காது. ஸ்பிட்டி பள்ளத்தாக்கு வருவதற்கும் சிரமமாக இருக்காது. டுப்சிலிங் கோம்பா அல்லது திரிலோகிநாத் என எதுவாக இருந்தாலும் தேவதர்ஷன் மற்றும் பவுத்த தத்துவங்கள் ஒன்று சேரும் இடமாக லஹவுல்-ஸ்பிட்டி இருக்கும். சொல்லப்போனால், இந்த வழியாகத்தான் திபேத் மற்றும் பிற நாடுகளுக்கு புத்தரின் தத்துவம் பரவியுள்ளது.
ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள, டாபோ மடாலயம் உலக மக்கள் எளிதில் செல்லக் கூடிய பகுதியாக மாறும். நாட்டில் பவுத்த கல்வியின் முக்கிய மையமாக இந்த மடாலயம் உள்ளது. ஒரு வகையில் கிழக்கு ஆசியா உள்ளிட்ட, உலகில் பல நாடுகளில் உள்ள புத்த மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்தப் பகுதி முக்கியமான ஒரு மையமாக மாறும்.
இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும் இந்த குகைப்பாதை வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. சிலர், தங்குமிடங்கள், விருந்தினர் விடுதிகள், தாபா, கடை போன்ற தொழில்களில் ஈடுபடுவார்கள். பலருக்கும் வழிகாட்டியாக உருவாவார்கள். கைவினைப் பொருட்கள், பழங்கள், மருந்துகள் உள்பட எல்லாமே எளிதாகக் கிடைக்கும். அவற்றின் வியாபாரம் மேம்படும்.
நண்பர்களே,
வளர்ச்சியின் பயன்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும், அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையிலும் அட்டல் குகைப்பாதை அமைந்துள்ளது. முன்னர் இருந்த நிலைமையை நீங்கள் நினைவுபடுத்திப் பாருங்கள்.
லஹவுல்-ஸ்பிட்டி போன்ற பல பகுதிகள் இந்த நாட்டில் உள்ளன. தங்கள் பிரச்சினைகளுடனேயே வாழும் நிலைமை அந்தப் பகுதிகளில் இருந்தது. சிலருடைய அரசியல் ஆதாயங்களுக்கு உதவாத பகுதிகளாக இருந்ததால், இவற்றை புறக்கணித்து வந்தனர்.
நண்பர்களே,
கடந்த சில ஆண்டுகளில், புதிய அணுகுமுறையில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. எல்லோரும், எல்லோருடனும் சேர்ந்து, எல்லோரின் நம்பிக்கையுடன் வளர்ந்து வருகிறார்கள். அரசின் செயல்பாட்டில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது அந்தப் பகுதியில் உள்ள வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் திட்டங்கள் உருவாக்கப் படுவதில்லை. எந்தவொரு இந்தியரும் விடுபட்டுப் போய்விடக் கூடாது என்ற அடிப்படையில் முயற்சிகள் எடுக்கப் படுகின்றன.
இந்த மாற்றத்திற்கு மிகப் பெரிய உதாரணமாக லஹவுல் – ஸ்பிட்டி உள்ளது. நாட்டில் எல்லா வீடுகளுக்கும் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வசதி செய்யப்பட்ட முதலாவது மாவட்டங்களில் ஒன்றாக இது உள்ளது. மக்களின் வாழ்க்கையை ஜல்ஜீவன் திட்டம் எந்த அளவுக்கு எளிதாக்குகிறது என்பதன் அடையாளமாக இந்த மாவட்டம் உள்ளது.
நண்பர்களே,
ஒடுக்கப்பட்ட, சுரண்டலுக்கு ஆளான மற்றும் மலைவாழ் மக்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்ற உறுதியுடன் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது நாட்டில் 15 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்குக் குழாய் இணைப்பு மூலம் சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான பெரிய திட்டம் அமல்படுத்தப் படுகிறது.
சுதந்திரம் பெற்று இவ்வளவு ஆண்டுகளாகிவிட்ட பிறகும், நாட்டில் 18 ஆயிரம் கிராமங்கள் இருளில் வாழ்ந்து கொண்டிருந்தன. இன்றைக்கு அந்தக் கிராமங்களுக்கு மின்சார வசதி செய்யப் பட்டுள்ளது.
சுதந்திரம் பெற்று இத்தனை தசாப்தங்கள் முடிந்த நிலையில், இப்போதுதான் இந்தப் பகுதிகளில் கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, சமையலுக்கு எல்.பி.ஜி. இணைப்புகளும் தரப்பட்டுள்ளன.
நாட்டில் எளிதில் அணுக முடியாத, தொலைதூரப் பகுதிகளுக்கு நல்ல வசதிகளை உருவாக்கித் தருவதற்கு முயற்சிகள் எடுக்கப் படுகின்றன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கும் ரூ.5 லட்சம் வரையில் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு இந்த வசதி அளிக்கப் பட்டுள்ளது. இந்த வசதிகள் காரணமாக, தொலைதூரத்தில் உள்ள இதுபோன்ற பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புகள் ஏராளமாக உருவாக்கப் பட்டுள்ளன. இதனால் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.
நண்பர்களே,
அட்டல் குகைப்பாதை திட்டத்துக்காக லஹவுல்-ஸ்பிட்டி மற்றும் பாங்கி பள்ளத்தாக்குப் பகுதிகளின் சகோதர சகோதரிகளுக்கு மீண்டும் ஒரு முறை நான் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சிக்கான புதிய கதவுகளைத் திறப்பதாக இது இருக்கும். கொரோனா பாதித்த இந்த சிரமமான காலத்தில் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் எல்லோரும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அனைத்து குடிமக்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன். முகக் கவச உறை பயன்படுத்துங்கள், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதில் சிறப்புக் கவனம் செலுத்துங்கள்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் நான் பங்கெடுக்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்த அனைவருக்கும் முழு மனதுடன் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.