நமோ ராகவா!
நமோ ராகவா!
மதிப்பிற்குரிய ஜகத்குரு ஸ்ரீ ராமபத்ராச்சாரியார் அவர்கள் நம்மை ஆசீர்வதிக்க இங்கு இருக்கிறார்; மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல் அவர்களே, முதலமைச்சர் சிவராஜ் அவர்களே, இங்கு கூடியிருக்கும் அனைத்து மூத்த துறவிகளே, தாய்மார்களே!
புனித பூமியான சித்ரகூடத்திற்கு மீண்டும் ஒரு முறை வணக்கம் செலுத்துகிறேன். இன்று நாள் முழுவதும் பல்வேறு கோயில்களில் ஸ்ரீராமரை தரிசிக்கும் வாய்ப்பும், முனிவர்களின் ஆசீர்வாதமும் கிடைத்தது என் அதிருஷ்டம். ஜகத்குரு ராமபத்ராச்சாரியாரிடமிருந்து நான் பெறும் பாசம் என்னை நெகிழ வைக்கிறது. மதிப்பிற்குரிய துறவிகளே, இன்று ஜகத்குரு அவர்களின் நூல்களை இந்த புனிதத் தலத்தில் வெளியிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அஷ்டாத்யாயி பாஷ்யம், ராமானந்தாச்சாரிய சரிதம், மற்றும் 'பகவான் ஸ்ரீ கிருஷ்ணா கி ராஷ்டிரலீலா' - இந்த நூல்கள் அனைத்தும் பாரதத்தின் மகத்தான அறிவு மரபை மேலும் செழுமைப்படுத்தும். ஜகத்குரு அவர்களின் ஆசீர்வாதத்தின் மற்றொரு வடிவமாக இந்த புத்தகங்களை நான் கருதுகிறேன். இப்புத்தகங்கள் வெளியாவதற்கு உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை குடும்ப உறுப்பினர்களே,
பாரதத்தின் மொழியியல், பாரதத்தின் அறிவுத்திறன், நமது ஆராய்ச்சி, கலாச்சாரம் ஆகியவற்றின் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழைமையான நூல் அஷ்டாத்யாயி. பல்வேறு சூத்திரங்கள் இலக்கணத்தின் பரந்த விஷயத்தை எவ்வாறு கைப்பற்றுகின்றன, மொழியை எவ்வாறு 'சமஸ்கிருத அறிவியலாக' மாற்ற முடியும், பாணினி மகரிஷியின் இந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தொகுப்பு இதற்கு ஒரு சான்று. இந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் உலகில் பல மொழிகள் அழிந்துவிட்டன. பழைய மொழிகளுக்குப் பதிலாக புதிய மொழிகள். ஆனால், இன்றும் நமது சமஸ்கிருதம் அப்படியே, உறுதியாக இருக்கிறது. சமஸ்கிருதம் காலப்போக்கில் செம்மைப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் அசல் தன்மையை இழக்கவில்லை. இதற்குக் காரணம் சமஸ்கிருதத்தின் முதிர்ந்த இலக்கண விஞ்ஞானம். வெறும் 14 மகேஸ்வர சூத்திரங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இந்த மொழி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சஸ்திரம் (ஆயுதங்கள்) மற்றும் சாஸ்திரத்திற்கு (சாத்திரங்கள்) தாயாக இருந்து வருகிறது. வேதங்களின் ஸ்லோகங்கள் சமஸ்கிருத மொழியில் மட்டுமே முனிவர்களால் வழங்கப்பட்டுள்ளன. யோக அறிவியலைப் பதஞ்சலி இந்த மொழியில் வழங்கியுள்ளார். இந்த மொழியில், தன்வந்திரி, சரக் போன்ற முனிவர்கள் ஆயுர்வேதத்தின் சாராம்சத்தை எழுதியுள்ளனர். இந்த மொழியில், கிரிஷி பராசர் போன்ற நூல்கள் விவசாயத்தை உழைப்பு மற்றும் ஆராய்ச்சியுடன் இணைத்தன. இந்த மொழியில், பரதமுனியிடமிருந்து நாடகம் மற்றும் இசை அறிவியல் பரிசைப் பெற்றுள்ளோம். இம்மொழியில் காளிதாசர் போன்ற அறிஞர்கள் இலக்கிய வல்லமையால் உலகை வியக்க வைத்துள்ளனர். மேலும், விண்வெளி அறிவியல், வில்வித்தை மற்றும் தற்காப்புக் கலைகள் பற்றிய நூல்களும் இந்த மொழியில் எழுதப்பட்டுள்ளன. நான் ஒரு சில எடுத்துக்காட்டுகளை மட்டுமே கொடுத்துள்ளேன். இந்தப் பட்டியல் மிகவும் நீளமானது. ஒரு தேசமாக பாரதத்தின் வளர்ச்சியின் எந்த அம்சத்தை நீங்கள் காண்கிறீர்களோ, அதில் சமஸ்கிருதத்தின் பங்களிப்பை நீங்கள் காண்பீர்கள். இன்றும் உலகின் முக்கியப் பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் லித்துவேனியா தூதர் பாரதத்தை அறிய சமஸ்கிருத மொழியையும் கற்றுக்கொண்டதைப் பார்த்தோம். அதாவது சமஸ்கிருதத்தின் புகழ் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.
நண்பர்களே,
ஆயிரம் ஆண்டுகால காலனிய ஆட்சிக் காலத்தில் பாரதத்தை வேரறுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகளில் ஒன்று சமஸ்கிருத மொழியை முற்றிலுமாக அழித்தது. நாம் சுதந்திரம் அடைந்தோம், ஆனால் அடிமை மனப்பான்மையைக் கைவிடாத மக்கள் சமஸ்கிருதத்தின் மீது தொடர்ந்து வெறுப்பை வளர்த்துக் கொண்டிருந்தனர். இப்படிப்பட்டவர்கள் எங்கோ கிடைத்த அழிந்துபோன மொழியின் கல்வெட்டுகளைப் புகழ்கிறார்கள். ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் சமஸ்கிருதத்தை மதிப்பதில்லை. இவர்கள் தங்கள் தாய்மொழி தெரிந்த பிற நாட்டு மக்களைப் பாராட்டுவார்கள், ஆனால் சமஸ்கிருத மொழியை அறிந்திருப்பதை அவர்கள் பின்தங்கியதன் அடையாளமாகக் கருதுகிறார்கள். இத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக தோல்வியடைந்து வருகின்றனர், எதிர்காலத்திலும் வெற்றி பெற மாட்டார்கள். சம்ஸ்கிருதம் மரபுகளின் மொழி மட்டுமல்ல, அது நமது முன்னேற்றம் மற்றும் அடையாளத்தின் மொழியும் கூட. கடந்த 9 ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை வளர்க்க விரிவான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். நவீன சூழலில், இந்த முயற்சிகளை வெற்றியடையச் செய்வதில் அஷ்டாத்யாயி பாஷ்யம் போன்ற நூல்கள் பெரும் பங்கு வகிக்கும்.
எனது குடும்ப உறுப்பினர்களே,
ராமபத்ராச்சாரியார் அவர்கள் நம் நாட்டின் ஞானி, அவரது அறிவுத் தளத்தின் அடிப்படையில் மட்டுமே உலகின் பல பல்கலைக்கழகங்கள் தங்கள் ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள முடியும். சிறுவயது முதலே கண்பார்வை இல்லாவிட்டாலும், எல்லா வேதங்களையும் மனப்பாடம் செய்யும் அளவுக்கு ஞானக் கண்கள் வளர்ந்துள்ளன. நீங்கள் நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதியுள்ளீர்கள். இந்திய அறிவையும் தத்துவத்தையும் பற்றிய 'பிரஸ்தானத்ராயி' சிறந்த அறிஞர்களுக்குக் கூட கடினமாகக் கருதப்படுகிறது. ஜகத்குரு அவர்களும் நவீன மொழியில் உரை எழுதியுள்ளார். இந்த அறிவு நிலை, இந்த அறிவுத்திறன் தனிப்பட்ட நிலையுடன் நின்றுவிடவில்லை. இந்த நுண்ணறிவு ஒட்டுமொத்த தேசத்தின் பாரம்பரியம். அதனால்தான், 2015-ம் ஆண்டு சுவாமிஜிக்கு பத்ம விபூஷண் விருது வழங்கி நமது அரசு கவுரவித்தது.
நண்பர்களே,
சுவாமிகள் எந்த அளவுக்கு மதம் மற்றும் ஆன்மீகத் துறையில் தீவிரமாக இருக்கிறாரோ, அதே அளவுக்கு சமூகத்திற்காகவும், நாட்டிற்காகவும் குரல் கொடுக்கிறார். தூய்மை இந்தியா திட்டத்தின் 9 ரத்தினங்களில் ஒருவராக உங்களை நான் பரிந்துரைத்தபோது, நீங்கள் அதே பக்தியுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டீர்கள். நாட்டின் பெருமைக்காக சுவாமிஜி செய்த தீர்மானங்கள் தற்போது நிறைவேற்றப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது பாரதமும் இப்போது சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் மாறி வருகிறது. கங்கை நதியின் நீரோடையும் தூய்மையாகி வருகிறது. ஒவ்வொரு நாட்டு மனிதனின் மற்றொரு கனவை நனவாக்குவதில் ஜகத்குரு ராமபத்ராச்சாரியார் அவர்கள் பெரும் பங்காற்றியுள்ளார். நீதிமன்றம் முதல் மற்ற அம்சங்கள் வரை நீங்கள் அளப்பரிய பங்களிப்பை அளித்துள்ள ராமர் கோயிலும் தயாராக உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிலிருந்து ராம பிரான் பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு வந்தது. இதையும் என் அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.
ஜெய் சியா ராம்.