மதிப்பிற்குரிய மகா சபை உறுப்பினர்கள், நேபாளம் மற்றும் இலங்கையின் பிரதமர்கள், எனது சக அமைச்சர்களான திரு பிரகலாத் சிங் மற்றும் திரு கிரண் ரிஜிஜு, சர்வதேச புத்த கூட்டமைப்பின் பொதுச்செயலாளர், மதிப்பிற்குரிய மருத்துவர் திரு தம்மபியா அவர்கள், மதிப்பிற்குரிய அறிஞர்கள், தர்மத்தை பின்பற்றுபவர்கள், உலகம் முழுவதிலுமிருந்து கலந்துகொண்டுள்ள சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்.
வேசக் என்னும் சிறப்பு தருணத்தில் உங்களுடன் உரையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பகவான் புத்தரின் வாழ்வைக் கொண்டாடும் தினமாக வேசக் அமைகிறது. நமது பூமியின் மேம்பாட்டிற்கான அவரது உயரிய கொள்கைகள் மற்றும் தியாகங்களை பிரதிபலிக்கும் தினமாகவும் இது விளங்குகிறது.
நண்பர்களே,
கடந்த வருடமும் வேசக் தின நிகழ்ச்சியில் நான் உரையாற்றினேன். கொவிட்- 19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் அந்த நிகழ்ச்சி அர்ப்பணிக்கப்பட்டது. ஒரு வருட காலத்திற்குப் பிறகு, அதன் தொடர்ச்சி மற்றும் மாற்றத்தின் கலவையை நாம் காண்கிறோம். கொவிட் பெருந்தொற்று நம்மை விட்டு நீங்கவில்லை. இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகள் இரண்டாவது அலையை எதிர்கொள்கின்றன. பல்வேறு தசாப்தங்களில் மனித சமூகம் சந்திக்கும் மிக மோசமான நெருக்கடி, இது. ஒரு நூற்றாண்டில் இதுபோன்ற பெருந்தொற்றை நாம் சந்திக்கவில்லை. வாழ்வில் ஒரு முறை நிகழும் இந்த பெருந்தொற்று, ஏராளமான மக்களுக்கு இன்னல்களையும், துயரத்தையும் அளித்துள்ளது.
பெருந்தொற்று, ஒவ்வொரு நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார பாதிப்பும் மிக அதிகம். கொவிட்-19 தொற்றுக்குப் பிறகு, நமது பூமி அதேபோல இருக்காது. வரும் காலங்களில், கொவிட் தொற்றுக்கு முந்தைய, கொவிட் தொற்றுக்குப் பிந்தைய என்று நிகழ்வுகளை நாம் நினைவில் கொள்வோம். எனினும் கடந்த ஒரு வருடத்தில் பல்வேறு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பெருந்தொற்று பற்றிய புரிதல் மேம்பட்டிருப்பதால், அதனை எதிர்த்துப் போராடும் நமது உத்திகள் வலுவடைந்துள்ளன. மிக முக்கியமாக, பெருந்தொற்றை வெல்லவும், உயிர்களை பாதுகாக்கவும் மிக அவசியமான தடுப்பூசி நம்மிடையே இருக்கிறது. பெருந்தொற்று ஏற்பட்ட ஒரு வருடத்திற்குள் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது, மனிதாபிமான உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சியின் ஆற்றலை இது எடுத்துக்காட்டுகிறது. கொவிட்-19 தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்ட நமது விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை அடைகிறது.
இந்த மன்றத்தின் வாயிலாக, பிறருக்கு சேவை புரிவதற்காக தன்னலம் பார்க்காமல் தங்களது உயிரையும் பொருட்படுத்தாத தடுப்பூசி ஆய்வில் கலந்து கொண்டவர்கள், முன்கள சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்களை நான் மீண்டும் வணங்குகிறேன். இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்டோர் மற்றும் தங்களது அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது துன்பத்தில் பங்கேற்கிறேன்.
நண்பர்களே,
பகவான் புத்தரின் வாழ்க்கையைப் பற்றி படிக்கும் பொழுது நான்கு முக்கிய கொள்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நான்கு முக்கிய கொள்கைகள், மனித சமூகத்தின் துன்பங்களை பகவான் புத்தரிடம் நேருக்கு நேராகக் கொண்டு சென்றன. அதேவேளையில் மனித இடர்பாடுகளைக் குறைப்பதற்காக, தமது வாழ்நாளை அவர் அர்ப்பணிக்கவும் அவை முக்கிய காரணியாக இருந்தன.
அனைவருக்கும் ஆசீர்வாதங்கள், கருணை மற்றும் நல்வாழ்வு என்பதை பகவான் புத்தர் நமக்குக் கற்றுத்தந்தார். கடந்த ஆண்டில் ஏராளமான தனிநபர்களும் நிறுவனங்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ததை நாம் அறிவோம்.
புத்த அமைப்புகள், உலகம் முழுவதும் உள்ள புத்த தர்மத்தை பின்பற்றுபவர்கள் ஆகியோர் உபகரணங்களையும் பொருட்களையும், நன்கொடையாக அளித்ததையும் நான் அறிகிறேன். இந்தச் செயலின் மக்கள் தொகை மற்றும் புவியியல் பரவல் அளவு மிகவும் அதிகம். சக மனிதர்களிடம் இருந்து அளிக்கப்பட்ட அபரிமிதமான நன்கொடை மற்றும் ஆதரவினால் மனிதநேயம் பணிவு கொள்கிறது. இந்த செயல்கள் பகவான் புத்தரின் போதனைகளுக்கு இணங்க அமைந்துள்ளன. அது अप्प दीपो भव: என்ற உயரிய மந்திரத்தை எடுத்துரைக்கிறது.
நண்பர்களே,
கொவிட்-19, நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாகும். அதனை எதிர்ப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொண்டு வரும் வேளையிலும், மனித சமூகம் சந்திக்கும் இதர சவால்களை நாம் மறக்கக்கூடாது. பருவநிலை மாற்றம் மிகப்பெரிய சவால்களுள் ஒன்று. தற்போதைய தலைமுறையினரின் பொறுப்பற்ற வாழ்க்கை முறை வருங்கால சந்ததியினரை அச்சுறுத்துகிறது. வானிலை அமைப்புகள் மாறுகின்றன. பனிப் பாறைகள் உருகுகின்றன. ஆறுகளும் காடுகளும் ஆபத்தில் உள்ளன. நமது பூமி சேதாரமடைய நாம் விடக்கூடாது. இயற்கை அன்னைக்கு முன்னுரிமையும் மரியாதையும் வழங்கும் வகையிலான வாழ்வை பகவான் புத்தர் வலியுறுத்தினார்.
பாரிஸ் இலக்குகளை அடையும் பாதையை நோக்கி பயணிக்கும் ஒரு சில மிகப்பெரும் பொருளாதாரங்களுள் இந்தியாவும் ஒன்று என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நம்மைப் பொறுத்தவரையில் நிலையான வாழ்வு என்பது சரியான வார்த்தைகளை பற்றியது மட்டுமல்ல. சரியான செயல்களையும் குறிப்பதாகும்.
நண்பர்களே,
கௌதம புத்தரின் வாழ்வு அமைதி, இணக்கம், ஒற்றுமை ஆகியவற்றால் நிறைந்தது. எனினும் வன்மம், தீவிரவாதம் மற்றும் பொறுப்பற்ற வன்முறையைப் பரப்புவதை அடிப்படையாகக்கொண்டு சில சக்திகள் இன்றும் இயங்குகின்றன. இது போன்ற சக்திகள், தாராளமயமான ஜனநாயகக் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதவை. எனவே மனித நேயத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் பயங்கரவாதம் மற்றும் தீவிரமயமாக்கலை வீழ்த்துவதற்காக ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.
அதற்கு, பகவான் புத்தர் காட்டிய பாதை மிகவும் ஏற்புடையது. பகவான் புத்தரின் போதனைகளும் சமூக நீதிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமும் சர்வதேச ஒருங்கிணைப்பு சக்தியாக உருவாகக்கூடும்.
அமைதியை விட வேறு பேரின்பம் எதுவும் இல்லை என்று அவர் சரியாகக் கூறினார்.
நண்பர்களே,
பகவான் புத்தர், ஒட்டுமொத்த உலகிற்கு புத்திசாலித்தனத்தின் களஞ்சியமாக விளங்கினார். அவரிடமிருந்து அவ்வப்போது ஒளியைப் பெற்று, இரக்கம், உலகளாவிய பொறுப்புணர்ச்சி மற்றும் நல்வாழ்வின் பாதையில் பயணிக்கலாம். “உண்மை மற்றும் அன்பின் வெற்றியில் நம்பிக்கைக் கொண்டு வெளிப்புற தோற்றத்தைப் புறம்தள்ள புத்தர் கற்றுக்கொடுத்தார்”, என்ற மகாத்மா காந்தி கௌதம புத்தரைப் பற்றி சரியாக எடுத்துரைத்தார்.
புத்த பூர்ணிமா தினமான இன்று, பகவான் புத்தரின் கொள்கைகளுக்கேற்ப செயல்பட அனைவரும் நமது உறுதித்தன்மையை புதுப்பித்துக் கொள்வோம்.
உலகளாவிய கொவிட்-19 என்ற சோதனையான தருணத்திலிருந்து நிவாரணம் அளிக்குமாறு உங்களுடன் இணைந்து மூன்று ரத்தினங்களையும் நான் வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி.
மிக்க நன்றி.