டிவி 9 நேயர்களுக்கும், இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.
பாரதத்தின் பன்முகத்தன்மையைப் பற்றி நான் அடிக்கடி பேசுகிறேன். டிவி 9, பல்வேறு இந்திய மொழிகளில் ஊடக தளங்களைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் துடிப்பான ஜனநாயகத்திற்கு ஒரு சான்றாக செயல்படுகிறது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் மொழிகளில் பணிபுரியும் டிவி 9 பத்திரிகையாளர்களுக்கும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்று, இந்த உச்சிமாநாட்டிற்கு டிவி 9, ஒரு அழுத்தமான கருப்பொருளைத் தேர்ந்தெடுத்துள்ளது. "இந்தியா: அடுத்த பெரிய முன்னேற்றத்துக்குத் தயாராக உள்ளது" என்பதே அது. நாம் உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் இருந்தால் மட்டுமே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடியும். விரக்தியடைந்த ஒரு நாடோ அல்லது தனிநபரோ அந்த பெரிய முன்னேற்றத்திற்கு ஆசைப்பட முடியாது. இந்த கருப்பொருள் தேர்வு தற்கால பாரதத்தின் நம்பிக்கையையும் விருப்பங்களையும் பிரதிபலிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் நிறுவப்பட்ட ஒரு வலுவான அடித்தளம் அதற்கு ஆதரவாக உள்ளது.
நண்பர்களே,
தோற்கடிக்கப்பட்ட மனநிலையுடன் வெற்றியை அடைவது மிகவும் சவாலானது. எனவே, கடந்த பத்தாண்டுகளில் மனநிலையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றமும், நாம் அடைந்துள்ள முன்னேற்றங்களும் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை. முன்பு ஆட்சி செய்தவர்களுக்கு இந்தியாவின் வலிமையில் நம்பிக்கை இல்லை. அவர்கள் இந்தியர்களின் திறன்களை குறைத்து மதிப்பிட்டனர். ஒரு நாட்டின் தலைமை விரக்தியில் மூழ்கியிருக்கும்போது, அதன் மக்களிடையே நம்பிக்கையை வளர்ப்பது சவாலானதாகும். மேலும், ஊழல்கள், கொள்கை முடக்கம் மற்றும் குடும்ப ஆட்சி ஆகியவை நாட்டின் அடித்தளங்களை அரித்துவிட்டன.
கடந்த பத்து ஆண்டுகளில், அந்த மோசமான சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுத்து, இன்று இந்த நல்ல நிலைக்கு நாட்டைக் கொண்டு வந்துள்ளோம். வெறும் 10 ஆண்டுகளுக்குள், உலக அளவில் முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உயர்ந்துள்ளது. தற்போது, நாட்டில் முக்கியமான கொள்கைகள் விரைவாக வகுக்கப்பட்டு, விரைவான முடிவெடுக்கப்படுகின்றன. மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் குறிப்பிடத்தக்க பலன்களை அளித்துள்ளது. இப்போது நாங்கள் எந்த முயற்சியை மேற்கொண்டாலும், மிகச் சிறந்ததாகவும், மகத்தானதாகவும் இருக்கப் பாடுபடுகிறோம். முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், முந்தைய 10 ஆண்டுகளில் இந்தியா 300 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்தது. இதற்கு நேர்மாறாக, எங்கள் நிர்வாகத்தின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் 640 பில்லியன் டாலர் மதிப்புள்ள அந்நிய நேரடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அரசின் மீது இந்திய மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
நண்பர்களே,
மனநிலை மற்றும் நம்பிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்திற்கான முதன்மை கிரியா ஊக்கியாக அரசு பேணி வளர்த்த பணிக் கலாச்சாரம் மற்றும் ஆளுமை அமைந்துள்ளது. அரசு அலுவலகங்கள் இப்போது மக்கள் எளிதில் அணுகும் இடங்களாக உள்ளன. இந்த முன்னுதாரணம் வரும் ஆண்டுகளில் ஆளுகைக்கான புதிய அளவுகோல்களை அமைக்கும்.
நண்பர்களே,
பாரதத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல முந்தைய செயல்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். முந்தைய அரசுகளின் கீழ் பாரதம் எவ்வாறு பின்னோக்கிச் சென்றது என்பதை விளக்குகிறேன். உத்தரப்பிரதேசத்தில் உள்ள சரயு கால்வாய் திட்டத்திற்கு 1980-களில் அடிக்கல் நாட்டப்பட்டாலும், 40 ஆண்டுகளாக அது தேக்கநிலையில் இருந்தது. 2014-ல் எங்கள் அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அதை முடிப்பதை நாங்கள் விரைவுபடுத்தினோம். அதேபோல, 1960களில் பண்டித நேருவால் தொடங்கப்பட்ட சர்தார் சரோவர் திட்டம், 2017-ம் ஆண்டு வரை 60 ஆண்டுகள் செயலிழந்து கிடந்தது. 1980களில் தொடங்கப்பட்ட மகாராஷ்டிராவின் கிருஷ்ணா கொய்னா திட்டமும் 2014 வரை முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. இது போல் பல திட்டங்களைக் கூற முடியும்.
நண்பர்களே,
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பிரதமர் அலுவலகத்தில் நவீன அமைப்பான பிரகதி தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். மாதாந்திர, அடிப்படையில் நான் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு திட்டக் கோப்பையும் ஆராய்கிறேன். இணையதளம் மூலம் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் அரசு செயலாளர்கள் கலந்து கொண்டு, விரிவான பகுப்பாய்வில் பங்கேற்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில், ரூ .17 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள திட்டங்களை நான் ஆய்வு செய்துள்ளேன். இந்தக் கடுமையான செயல்முறையின் மூலம்தான் திட்டங்கள் முடிக்கப்பட்டன.
முந்தைய நிர்வாகங்கள் மந்தமான வேகத்தில் செயல்பட்ட ஒரு நாட்டில், நாம் பெரிய வேகத்துடன் செயல்பட்டோம். நமது அரசு அந்த பழைய மந்தமான அணுகுமுறையிலிருந்து மாறியது. நாட்டின் மிகப்பெரிய கடல் பாலமான மும்பையின் அடல் சேதுவுக்கு 2016 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. அண்மையில் அது திறக்கப்பட்டது. புதிய நாடாளுமன்ற கட்டடம் 2020-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த வாரம் பிப்ரவரி 20-ம் தேதி திறக்கப்பட்டது. இதேபோல், 2020-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்ட ராஜ்கோட் எய்ம்ஸ் நேற்று தொடங்கப்பட்டது. திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம், 2019-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டது. வாரணாசியில் பனாஸ் பால் பண்ணைக்கு 2021-ல் அடிக்கல் நாட்டப்பட்டு, சில நாட்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது.
மோடியின் உத்தரவாதம் என்று நான் அடிக்கடி குறிப்பிடுவதை இவை எடுத்துக்காட்டுகின்றன. பணிகளில் வேகம், வரி செலுத்துவோரின் பணத்திற்கு மரியாதை ஆகியவை இருக்கும்போது, நாடு முன்னேறுகிறது. அது ஒரு பெரிய முன்னேற்றத்திற்குத் தயாராக உள்ளது.
நண்பர்களே,
இன்று பாரதத்தில் நடந்து கொண்டிருக்கும் பணிகளின் அளவு முன்னெப்போதும் இல்லாதது, கற்பனைக்கு அப்பாற்பட்டது. பிப்ரவரி 20 அன்று, ஒரே நேரத்தில் நாடு முழுவதும் ஏராளமான உயர் கல்வி நிறுவனங்களை நான் தொடங்கி வைத்தேன். பிப்ரவரி 24 அன்று, ராஜ்கோட்டில் இருந்து ஒரே நேரத்தில் நாடு முழுவதும் ஐந்து எய்ம்ஸ் மருத்துவமனைகளை நான் தொடங்கி வைத்தேன். இன்று காலை, 27 மாநிலங்களில் 500-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களின் மறுமேம்பாட்டுப் பணிகளுக்கும், 1500-க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளின் பணிகளைத் தொடங்குவதற்கும் நான் அடிக்கல் நாட்டினேன். நாளை காலை, நான் கேரளா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறேன். இந்த இடங்களில் விண்வெளி, குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள், துறைமுகங்கள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் விவசாயிகள் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அத்தகைய அளவில் செயல்படுவதன் மூலம் மட்டுமே பாரதம் ஒரு பெரிய முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல முடியும். முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது தொழில் புரட்சிகளில் பின்தங்கிய நாம், நான்காவது தொழில் புரட்சியில் உலகை வழிநடத்த வேண்டியது அவசியம்.
நண்பர்களே,
இந்தியாவில் நுகர்வு குறித்த சமீபத்திய அறிக்கை ஒரு புதிய தகவலை வெளிப்படுத்தியுள்ளது. நாட்டில் வறுமை இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது, முந்தைய 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கடந்த 10 ஆண்டுகளில் நுகர்வு 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியர்களிடையே செலவிடும் திறன் அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் நுகர்வு மிக விரைவான வேகத்தில் அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. இது கிராமப்புற மக்களிடையே பொருளாதார சக்தி அதிகரித்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது. இந்த மாற்றம் இயல்பாக நடந்தது அல்ல. கிராமங்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளை இலக்காகக் கொண்ட எங்களது முயற்சிகளின் விளைவாகவே இது நடந்துள்ளது. 2014 முதல், எங்கள் அரசு ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து, கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையே போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பெண்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகளை வகுத்துள்ளது.
நண்பர்களே,
முந்தைய அரசுகள் மக்களை வறுமையில் வைத்திருந்தன. தேர்தல்களின் போது ஏழைகளுக்கு சலுகைகளை வழங்குவது போல சிலவற்றைச் செய்தனர். இந்த அணுகுமுறை வாக்கு வங்கி அரசியல் ஆகும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில், பாரதம் இதில் இருந்து மாறியுள்ளது. ஊழலைக் கட்டுப்படுத்தி, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி சமமாக விநியோகிப்பதை இந்த அரசு உறுதி செய்துள்ளது.
பயனாளிகள் உரிய பலன்களைப் பெறுவதை உறுதி செய்ய அரசே வீடு வீடாகச் சென்று மக்களை அணுகி வருகிறது. மோடியின் உத்தரவாத வாகனம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அரசு அதிகாரிகள் தங்கள் வாகனங்களில் கிராமம் கிராமமாகச் சென்று, மக்கள், அரசுத் திட்டங்களின் பலன்களைப் பெற்றிருக்கிறார்களா என்று விசாரிப்பது நாட்டில் இதற்கு முன்பு நடந்ததில்லை. தற்போது, எங்கள் அரசு மக்களின் வீடுகளுக்கே சென்று திட்டப் பயன்களை வழங்குகிறது. அரசியலை விட தேச நலனுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம்.
நண்பர்களே
நீண்டகால சவால்களை எதிர்கொண்டு, தேச நலன் கருதி முடிவுகளை எடுத்தோம். 370 வது பிரிவை ரத்து செய்வது, ராமர் கோயிலை நிறுவியது, முத்தலாக்கை முடிவுக்குக் கொண்டுவந்தது, பெண்களுக்கான இடஒதுக்கீட்டை ஊக்குவிப்பது, போன்றவற்றில் 'தேசமே முதன்மையானது என்ற நோக்கத்துடன் செயல்பட்டுள்ளோம்.
நண்பர்களே,
இன்றைய 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு இந்தியாவை நாம் தயார்படுத்த வேண்டும். எனவே, விண்வெளி முதல் குறைக்கடத்திகள் வரை, டிஜிட்டல்மயமாக்கல் முதல் ட்ரோன்கள் வரை, செயற்கை நுண்ணறிவு முதல் தூய எரிசக்தி வரை, 5 ஜி முதல் நிதித் தொழில்நுட்பம் வரை பாரதம் எதிர்காலத் திட்டங்களில் விரைவாக முன்னேறி வருகிறது. பாரதம் இப்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் உலகிலேயே முன்னணியில் உள்ளது. 5 ஜி கட்டமைப்பு விரிவாக்கத்தில் ஐரோப்பாவை விட முன்னணியில் உள்ளது.
வரவிருக்கும் ஐந்தாண்டுகள் இந்தியாவின் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டமாகும். அசைக்க முடியாத நம்பிக்கையோடு, பாரதத்தின் 'மாபெரும் முன்னேற்றம்' தொடரும் என்பதில் ஐயமில்லை.
மிக்க நன்றி!