ஜெய் ஜெகன்நாத்!
மக்களவை உறுப்பினர் மட்டுமல்லாமல் ஓர் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் தமது கடமைகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டாகவும் விளங்கும் என்னுடன் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள திரு பர்த்ருஹாரி மஹ்தப் அவர்களே, திரு தர்மேந்திர பிரதான் அவர்களே, இதர மூத்த பிரமுகர்களே, மகளிரே, ஆடவர்களே! ‘உத்கல் கேசரி’ ஹரே கிருஷ்ணா மஹ்தப் அவர்களுடன் சம்பந்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ‘உத்கல் கேசரி’ ஹரே கிருஷ்ணா மஹ்தப் அவர்களின் 120வது பிறந்த தினத்தை மிக சிறப்பாக நாம் அனைவரும் கொண்டாடினோம். இன்று அவரது மிக பிரபலமான புத்தகமான ஒடிசா இதிகாசத்தின் (வரலாறு) இந்தி பதிப்பை நாம் வெளியிடுகிறோம். ஒடிசாவின் மிக பிரம்மாண்ட மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த வரலாறு, நாட்டு மக்களைச் சென்றடைவது மிகவும் முக்கியம். ஒடியா மற்றும் ஆங்கிலத்தைத் தொடர்ந்து, இந்தி பதிப்பை வெளியிடுவதன் வாயிலாக இந்த அத்தியாவசிய தேவையை நீங்கள் நிறைவேற்றி உள்ளீர்கள்.
நண்பர்களே,
சுதந்திரத்தின் அம்ருத் மகோத்சவத்தை நாடு கொண்டாடிவரும் வருடத்தில் இந்த புத்தகம் வெளியாகியுள்ளது. ஹரே கிருஷ்ணா மஹ்தாப் அவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்து, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதன் நூறாவது ஆண்டையும் இந்த வருடம் குறிக்கிறது. உப்பு சத்தியாகிரகத்திற்காக தண்டி யாத்திரையை மகாத்மா காந்தி அவர்கள் தொடங்கியபோது, அந்த இயக்கத்தை ஒடிசாவில் ஹரே கிருஷ்ணா அவர்கள் வழி நடத்தினார். 2023 ஆம் ஆண்டு ஒடிசா இதிகாச வெளியீடு, தனது 75 ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது என்பதும் எதேச்சையானது.
நண்பர்களே,
மஹ்தாப் அவர்கள், சுதந்திர போராட்டத்திற்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்தார். அவரது வாழ்க்கையையே சிறையில் கழித்தார். எனினும், சுதந்திரப் போராட்டத்துடன் சமுதாயத்திற்காகவும் அவர் போராடினார் என்பது இதில் முக்கியமான விஷயம்.
சாதி வாதம் மற்றும் தீண்டாமைக்கு எதிரான இயக்கத்தில் தமது மூதாதையரின் ஆலயத்தையும் அனைத்து சாதியினருக்காக அவர் திறந்தார். சுதந்திரத்திற்குப் பிறகு ஒடிசா மாநிலத்தின் முதல்வராக ஒடிசாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்காக பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். நகரங்கள், துறைமுகங்கள், எஃகு ஆலைகள் போன்றவற்றின் நவீனமயமாக்கலில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
நண்பர்களே,
அவர் பதவியில் இருந்த போதும், தம்மை எப்போதும் ஓர் சுதந்திரப் போராட்ட வீரராகவே கருதிக்கொண்டு, தமது எஞ்சிய வாழ்நாளிலும் சுதந்திரப் போராட்ட வீரராகவே செயல்பட்டார். எந்தக் கட்சியின் கீழ் அவர் முதலமைச்சரானாரோ, அவசர காலத்தின்போது அந்தக் கட்சியையே எதிர்த்து அவர் சிறைக்குச் சென்றது, இன்றைய மக்கள் பிரதிநிதிகளை ஆச்சரியமடையச் செய்யலாம்.
நண்பர்களே,
முதலமைச்சராக ஒடிசாவின் எதிர்காலம் குறித்து கவலை கொண்டிருந்த வேளையிலும், மாநிலத்தின் வரலாற்றால், ஹரே கிருஷ்ணா அவர்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டதை நாம் அறிவோம். இந்திய வரலாற்றுக் கூட்டமைப்பிலும், ஒடிசாவின் வரலாற்றை தேசிய தளத்திற்கு எடுத்துச் சென்றதிலும் அவர் முக்கிய பங்காற்றினார்.
மஹ்தாப் அவர்களின் வரலாற்று தொலைநோக்குப் பார்வை மற்றும் பங்களிப்பினால், ஒடிசாவில் அருங்காட்சியகங்கள், ஆவணக் காப்பகங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சிப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன.
நண்பர்களே,
மஹ்தாப் அவர்களின் ஒடிசா இதிகாசத்தை நீங்கள் படித்திருந்தால், ஒடிசா பற்றிய அனைத்து விவரங்களும் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று அறிஞர்கள் பலர் கூறுவதை நான் கேட்டுள்ளேன். அது உண்மையும் கூட. வரலாறு என்பது, கடந்த காலத்தின் ஓர் அத்தியாயம் மட்டுமல்ல எதிர்காலத்தின் கண்ணாடியும் ஆகும்.
இதை மனதில் கொண்டு, அம்ருத் மகோத்சவத்தில் சுதந்திரத்தின் வரலாற்றிற்கு நாடு உயிரூட்டி வருகிறது. நம் நாட்டு இளைஞர்கள் தெரிந்துகொள்வதற்காக மட்டுமல்லாமல் அதனை அனுபவித்து புதிய தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, புதிய தீர்மானங்களை வகுத்துக்கொண்டு ஏதேனும் காரியத்தை செய்ய வேண்டும் என்ற இலக்கோடு செயல்படுவார்கள் என்ற நோக்கத்தோடு நமது சுதந்திர போராட்ட வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் பற்றிய கதைகளுக்கு நாங்கள் உயிரூட்டுகிறோம்.
சுதந்திரப் போராட்டம் சம்பந்தமான ஏராளமான கதைகள், உண்மையான வடிவில் மக்களிடையே எடுத்துச் செல்லப்படவில்லை. இந்திய வரலாறு என்பது அரசர்களின் வரலாறு மட்டுமல்ல. அரச பரம்பரைகளைச் சுற்றிய நிகழ்வுகளே வரலாறு என்பதை ஏற்றுக்கொண்டது வெளிநாட்டு சிந்தனையாகும். நாம் அதுபோன்ற மக்கள் அல்ல. ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் 80%, சாமானிய மனிதனோடு தொடர்புடையதாக இருப்பதை நீங்கள் காணலாம். இதன் மூலம் நமது வாழ்க்கையின் மையக்கருவாக பொதுமக்கள் இருந்து வருகின்றனர் என்பது தெளிவாகிறது.
நண்பர்களே,
ஒடிசா பற்றிய புரிதலில் புதிய பரிமாணங்களையும் ஆராய்ச்சிகளையும் உருவாக்கும் வகையில் சுதந்திரப் போராட்டத்தின் பல்வேறு அத்தியாயங்களை திரு ஹரே கிருஷ்ணா அவர்கள் நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். பைக் போராட்டம், கஞ்சம் இயக்கம் மற்றும் லர்ஜால் கோல்ஹா இயக்கம் முதல் சம்பல்பூர் போராட்டம் வரை அந்நிய ஆட்சிக்கு எதிரான புரட்சிக்கு ஒடிசா எப்போதுமே புதிய சக்தியைக் கொடுத்தது.
ஆங்கிலேயர்களால் ஏராளமான வீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர், பல்வேறு தியாகங்கள் செய்யப்பட்டன! எனினும் விடுதலை பெறுவதற்கான ஆர்வம் சிறிதும் குறையவில்லை. சம்பல்பூர் போரின் துணிச்சல் மிக்க புரட்சி வீரரான திரு சுரேந்திர சாய் இன்றும் நமக்கு ஊக்கம் அளிக்கிறார். மகாத்மா காந்தியின் தலைமையில் அடிமைத்தனத்திற்கு எதிராக நாட்டில் போராட்டம் துவங்கியபோது ஒடிசாவும், அம்மாநில மக்களும் அதில் மிகப்பெரிய பங்கு வகித்தனர்.
ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், உப்பு சத்தியாக்கிரகம் உள்ளிட்ட போராட்டங்களை ஒடிசாவில் பண்டித கோபபந்து, ஆச்சாரியா ஹரிஹர், ஹரே கிருஷ்ணா மஹ்தப் ஆகியோர் முன்னெடுத்துச் சென்றனர். ரமா தேவி, மால்தி தேவி, கோகிலா தேவி மற்றும் ராணி பாக்கியவதி போன்ற ஏராளமான தாய்மார்களும், சகோதரிகளும் சுதந்திரப் போராட்டத்திற்கு புதிய பாதையை வகுத்துத் தந்தனர்.
அதேபோல் ஒடிசாவின் பழங்குடி சமூகத்தின் பங்களிப்பையும் எவரும் மறக்க முடியுமா..? தங்களது நாட்டுப்பற்று மற்றும் வீரத்தின் மூலம், ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்வதற்கு நமது பழங்குடியினர் என்றும் அனுமதித்ததில்லை. பழங்குடி சமூகம் பற்றிய இந்த விஷயங்களை அடுத்தத் தலைமுறையினரோடு பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியம். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மிகச்சிறந்த பழங்குடி வீரரான லக்ஷ்மன் நாயக் அவர்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நண்பர்களே,
சுதந்திர வரலாற்றுடன், அம்ருத் மகோத்சவத்தின் மற்றுமொரு முக்கிய பரிமாணம், இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார உடமைகள் ஆகும். நமது கலாச்சார பன்முகத் தன்மையின் முழு வடிவமாக ஒடிசா திகழ்கிறது. இங்கு உள்ள கலை, ஆன்மீகம் மற்றும் பழங்குடி கலாச்சாரம் தான் ஒட்டுமொத்த நாட்டின் பாரம்பரியமாக உள்ளது.
நண்பர்களே,
ஒடிசாவின் கடந்த காலத்தை நீங்கள் கூர்ந்து கவனித்தால், ஒடிசா மற்றும் இந்தியாவின் வரலாற்று வலிமையை நீங்கள் காணலாம். வரலாற்றில் பிரதிபலிக்கும் இந்த வலிமையானது, தற்போதைய மற்றும் எதிர்கால சாத்தியக்கூறுகளுடன் இணைந்து, நமக்கான வழிகாட்டியாக உள்ளது.
ஒடிசாவின் மிகப்பெரிய கடல்சார் எல்லை, ஒரு காலத்தில், இந்தியாவின் மிகப் பெரிய துறைமுகங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக முனையமாக இருந்தது. நம் நாட்டிலிருந்து இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, மியான்மார் மற்றும் இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், ஒடிசா மற்றும் இந்தியாவின் வளமைக்கு முக்கிய காரணியாக இருந்தது.
நண்பர்களே,
அந்த காலத்தில் இயற்கையால் வழங்கப்பட்ட வளங்கள், இன்றும் நமக்குக் கிடைக்கின்றன. இன்றும் நம்மிடையே பரந்த கடல் சார் எல்லை, மனிதவளம், வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. அதேவேளையில் நவீன அறிவியலின் சக்தியும் இன்று நம்மிடையே இருக்கிறது. இதுபோன்ற புராதன அனுபவங்கள் மற்றும் நவீன சாத்தியக்கூறுகளை ஒன்றிணைத்தால், ஒடிசா மாநிலம் வளர்ச்சியின் புதிய உச்சத்தை அடையலாம்.
இந்தப் பாதையில், நாடு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நண்பர்களே,
வர்த்தகம் மற்றும் தொழில்களின் முதல் தேவை உள்கட்டமைப்பு. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கடலோர நெடுஞ்சாலைகள் ஒடிசாவில் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் துறைமுகங்கள் இணைக்கப்படும். கடந்த 6-7 ஆண்டுகளில் புதிதாக நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவிற்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.சாகர் மாலா திட்டத்திற்காக கோடிக்கணக்கான தொகை செலவிடப்பட்டு வருகிறது. ஒடிசாவில் உள்ள பிரம்மாண்ட எண்ணெய் மற்றும் எரிவாயு சாத்தியக்கூறுகளை அடைவதற்காக கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் எஃகு தொழில் துறையின் சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருகின்றன. கடல்சார் வளங்களில் இருந்து ஒடிசாவிற்கு அபரிமிதமான வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நீல புரட்சியின் வாயிலாக ஒடிசாவின் வளர்ச்சிக்கு இந்த வளங்களைப் பயன்படுத்துவதில் நாடு உறுதிப்பூண்டுள்ளது.
நண்பர்களே,
இந்த விரிவான சாத்தியக்கூறுகளில் வரும் காலங்களில் திறன்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. ஒடிசாவின் இளைஞர்கள் வளர்ச்சியின் இந்த பயன்களைப் பெறுவதற்காக இந்திய தொழில்நுட்பக் கழகம் புவனேஸ்வர், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பெர்ஹாம்பூர் மற்றும் இந்திய திறன் நிறுவனம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளன. கடந்த ஜனவரி மாதம், சம்பல்பூரில் இந்திய மேலாண்மை கழகத்திற்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பையும் நான் பெற்றேன்.
நண்பர்களே,
ஒடிசாவின் வரலாறு, கலாச்சாரம், பிரம்மாண்ட கட்டிடக் கலையை நாடு முழுவதும் மற்றும் உலகெங்கும் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். சுதந்திரத்தின் அம்ருத் மகோத்சவத்தில் நாம் இணைந்து, அதனை மக்கள் இயக்கமாக மாற்றுவோம். சுதந்திர போராட்டத்தின் போது திரு ஹரி கிருஷ்ணா மஹ்தாப் அவர்களிடையே காணப்பட்ட அதே உற்சாகம் இந்த பிரச்சாரத்திலும் ஏற்படும் என்பதில் நான் நம்பிக்கை கொள்கிறேன்.
மிக்க நன்றி!