எனது அமைச்சரவை சகாக்களான திரு கிஷன் ரெட்டி அவர்களே, திரு அர்ஜுன் ராம் மெக்வால் அவர்களே, திருமதி மீனாட்சி லேகி அவர்களே, திரு அஜய் பட் அவர்களே, பிரிகேடியர் திரு ஆர்.எஸ்.சிகாரா அவர்களே, நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய லெப்டினன்ட் ஆர். மாதவன் அவர்களே, எனதருமை நாட்டு மக்களே!
பராக்கிரம தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ஆஸாத் ஹிந்த் ராணுவப் புரட்சியாளர்களின் வலிமையைக் கண்ட செங்கோட்டை, இன்று மீண்டும் ஒருமுறை புதிய சக்தியுடன் நிரம்பி வழிகிறது. நேற்றுதான் பாரதத்தின் கலாச்சார உணர்வில் ஒரு வரலாற்று மைல்கல்லை ஒட்டுமொத்த உலகமும் கண்டது. பிரம்மாண்டமான ராமர் கோயிலின் 'பிராண பிரதிஷ்டை'யுடன் தொடர்புடைய ஆற்றலையும், உணர்ச்சிகளையும் ஒட்டுமொத்த உலகமும், மனிதகுலமும் அனுபவித்தன. மாபெரும் தலைவர் திரு சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை இன்று நாம் கொண்டாடுகிறோம். கடந்த சில ஆண்டுகளாக ஜனவரி மாதம் 23-ம் தேதி பராக்கிரம தினமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து, குடியரசு தினத்தின் மகத்துவம் வாய்ந்த விழா, ஜனவரி 23-ம் தேதி தொடங்கி, மகாத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30-ம் தேதி வரை தொடர்கிறது. இப்போது, ஜனவரி மாதம் 22-ம் தேதியன்று பிரம்மாண்டமான ஆன்மிகக் கொண்டாட்டமும் இந்தக் குடியரசு தினக் கொண்டாட்டத்தோடு இணைந்திருக்கிறது. ஜனவரி மாதத்தின் இந்தக் கடைசி சில நாட்கள் நமது ஆன்மீக, கலாச்சார உணர்வுக்கும், நமது ஜனநாயகம், தேசபக்திக்கும் மிகவும் உத்வேகம் அளிக்கின்றன. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
நண்பர்களே,
இன்று நேதாஜியின் வாழ்க்கையை சித்தரிக்கும் கண்காட்சி நடக்கிறது. நேதாஜியின் வாழ்க்கைச் சித்திரத்தை மிகச்சிறப்பாக ஓவியர்கள் வரைந்துள்ளனர். இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைத்துக் கலைஞர்களையும் நான் பாராட்டுகிறேன். சிறிது நேரத்திற்கு முன், குழந்தைகளுக்கான தேசிய விருது பெற்ற எனது இளம் நண்பர்களுடன் நான் உரையாடினேன். இவ்வளவு சிறிய வயதில் அவர்களின் துணிச்சல், திறமை வியக்க வைக்கிறது. ஒவ்வொரு முறையும் பாரதத்தின் இளைஞர்களை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, வளர்ந்த பாரதம் குறித்த எனது நம்பிக்கை வலுப்பெறுகிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நாட்டின் இந்த திறமையான 'அமிர்தத்' தலைமுறைக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
நண்பர்களே,
இன்று, பராக்கிரம தினத்தை முன்னிட்டு செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து பாரத விழா நிகழ்ச்சி தொடங்குகிறது. அடுத்த ஒன்பது நாட்களில், இந்த பாரத விழாவில் குடியரசு தின அலங்கார ஊர்திகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் நாட்டின் பன்முகத்தன்மை வெளிப்படுத்தப்படும். பாரத விழா சுபாஷ் சந்திர போஸின் கொள்கைகளைப் பிரதிபலிக்கிறது. இது 'உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு' என்ற தலைப்பில் கொண்டாடப்படும் திருவிழாவாகும். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்த விழா நடத்தப்படுகிறது. இது பன்முகத்தன்மைக்கு மரியாதை அளிக்கும் கொண்டாட்டமாகும். மேலும் 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்பதைப் புதிய உயரத்திற்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுமாறு ஒவ்வொருவரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
நண்பர்களே,
எதிர்வரும் 25 ஆண்டுகள் பாரதத்திற்கும், அதன் மக்களுக்கும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த 'அமிர்தகாலத்தின்' ஒவ்வொரு தருணத்தையும் நாட்டின் நலனுக்காக நாம் அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வளர்ந்த இந்தியாவை உருவாக்க கடின உழைப்பும், துணிச்சலும் அவசியம். 'பராக்கிரம தினம்’ ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தீர்மானத்தை நமக்கு நினைவூட்டும். மீண்டும் ஒருமுறை நாடு முழுமைக்கும் பராக்கிரம தினத்தை முன்னிட்டு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அவர்களின் பண்புகளை நினைவுகூர்ந்து, நான் மரியாதையுடன் அஞ்சலி செலுத்துகிறேன். நான் தற்போது சொல்வதை என்னுடன் இணைந்து கூறுங்கள்:
பாரத் மாதா கீ ஜே!
பாரத் மாதா கீ ஜே!
பாரத் மாதா கீ ஜே!
மிகவும் நன்றி!