வணக்கம்!
மேதகு வங்கதேச அதிபர்
அப்துல் ஹமீத் அவர்களே,
பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களே
இதர விருந்தினர்களே
வங்கதேசத்தின் எனது அருமை நண்பர்களே,
உங்களின் அன்பு எனது வாழ்வில் விலைமதிப்பற்ற அனுபவங்களில் ஒன்று. வங்கதேச வளர்ச்சி பயணத்தில் நீங்கள் என்னையும் ஒரு பகுதியாக ஆக்கியுள்ளதற்கு மகிழ்ச்சி. இன்று வங்கதேச தேசிய தினம் மற்றும் 50வது சுதந்திர தினம்.
இந்தாண்டு நாம் இந்தியா-வங்கதேச உறவின் 50வது ஆண்டையும் கொண்டாடுகிறோம். வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு பிறந்த தினமும் இந்தாண்டு கொண்டாடப்படுகிறது. இது இரு நாட்டின் உறவை வலுப்படுத்துகிறது.
வங்கதேச அதிபர் அப்துல் ஹமீத், பிரதமர் ஷேக் ஷசீனா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பெருமையான தருணத்தில், இந்த விழாவில் பங்கேற்க, நீங்கள் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தீர்கள். வங்கதேச மக்களுக்கு இந்தியர்கள் சார்பாக எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வங்கதேச மக்களுக்காக, தனது வாழ்வை அர்ப்பணித்த வங்கதேசத் தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானுக்கு மரியாதை செலுத்துகிறேன்.
நண்பர்களே,
வங்கதேச விடுதலையின் போது வங்கதேச மக்களுக்கு துணைநின்ற இந்திய ராணுவத்தின் வீரர்களை இந்நாளில் நான் வணங்குகிறேன். பீல்டு மார்ஷல் சாம் மானேக்ஷா, ஜெனரல் அரோரா போன்றோரின் தலைமை பண்பு கதைகள் நம்மை ஊக்குவிக்கின்றன. இவர்களின் நினைவாக ஒரு போர் நினைவுச் சின்னத்தை அசுகன்ச் பகுதியில் வங்கதேச அரசு ஏற்படுத்தியுள்ளது. இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வங்கதேச சகோதர, சகோதரிகளுக்கு நான் ஒன்றை பெருமையுடன் நினைவுபடுத்த விரும்புகிறேன். வங்கதேச சுதந்திர போராட்டம் தான், நான் பங்கேற்ற முதல் போராட்ட இயக்கம். அப்போது எனக்கு 20-22 வயது இருக்கும். வங்கதேச மக்களின் சுதந்திரத்துக்கான சத்தியாகிரகத்தில் நானும் எனது நண்பர்களும் பங்கேற்றோம்.
வங்கதேச சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதற்காக, நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். பாகிஸ்தான் ராணுவத்தினர் செய்த அராஜகத்தின் படங்களை பார்த்து எங்களால் தூங்க முடியவில்லை. வங்கதேச விடுதலைக்காக பாடுபட்டவர்களை நாங்கள் மறக்க மாட்டோம்.
நண்பர்களே,
வங்கதேசத் தந்தை ஷேக் முஜிபூர், வங்கதேச மக்களுக்கும், இந்தியர்களுக்கும் நம்பிக்கை ரேகையாக விளங்கினார். அவருடைய தலைமையும், தைரியமும், வங்கதேசத்தை எந்த சக்தியாலும் அடிமைப்படுத்த முடியாது என்பதை உறுதி செய்தது. வங்கதேச சுதந்திர போராட்டத்துக்கு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
அப்போதைய இந்திய பிரதமர் திருமதி இந்திராகாந்தி மேற்கொண்ட முயற்சிகள், மற்றும் அவர் ஆற்றிய முக்கிய பங்கு ஆகியவை அனைவரும் நன்கு அறிந்தது. அதே நேரத்தில் 1971ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அன்று அடல் பிஹாரி வாஜ்பாய், ‘‘ வங்கதேச சுதந்திர போராட்டத்துக்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர்களுடன் மட்டும் நாம் போராடவில்லை, வரலாற்றுக்கு, புதிய வழியை காட்டவும் நாங்கள் முயற்சிக்கிறோம்’’ என்றார்.
எங்களின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஷேக் முஜிபூர் ரகுமானை, அயராத அரசியல்வாதி என அழைப்பார். அவரது வாழ்க்கை, பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் சுய கட்டுப்பாடு ஆகியவற்றின் அடையாளம்.
நண்பர்களே,
வங்கதேசத்தின் 50வது ஆண்டு சுதந்திரமும், இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திரமும் ஒன்றாக கொண்டாப்படுவது தற்செயலாக நடக்கும் சம்பவம். நமது இரு நாடுகளுக்கும், அடுத்த 25ஆண்டுகளின் பயணம் மிக முக்கியமானது. நமது பாரம்பரியம், வளர்ச்சி, இலக்குகள், சவால்கள் ஆகியவை பகிரப்படுகின்றன.
வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் நமக்கு ஒரே மாதிரியான வாய்ப்புகள் இருப்பதுபோல், தீவிரவாத அச்சுறுத்தல்களும் இருக்கின்றன. இதற்கு எதிராக நாம் கவனமாக செயல்பட வேண்டும். இருநாடுகளிலும் ஜனநாயக சக்தி உள்ளது மற்றும் முன்னோக்கி செல்லும் தொலைநோக்கு உள்ளது.
இந்தியாவும், வங்கதேசமும் ஒன்றாக முன்னேறட்டும். இப்பகுதியின் வளர்ச்சிக்கு இது முக்கியம். கொரோனா காலத்திலும், இரு நாடுகள் இடையே நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது.
சார்க் கொவிட் நிதி உருவாக்குவதற்கும், நாம் ஆதரவு தெரிவித்துள்ளோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசி வங்கதேச மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பது இந்தியாவுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. இந்தாண்டு இந்திய குடியரசு தின அணிவகுப்பில், வங்கதேச படையினரின் பங்கேற்ற காட்சி என் நினைவில் நிற்கிறது.
நண்பர்களே,
காஜி நஸ்ருல் இஸ்லாம் மற்றும் குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரிடம் இருந்து நாம் பொதுவான உத்வேகத்தை பெறுகிறோம்.
இழப்பதற்கு, நமக்கு நேரம் இல்லை. மாற்றத்துக்கு நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். தற்போது நாம் ஒருபோதும் தாமதிக்க கூடாது என குருதேவ் கூறினார்.
இது இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இருநாடுகளுக்கும் பொருந்தும்.
கோடிக்கணக்கான மக்களுக்கு, அவர்களின் எதிர்காலத்துக்கு, வறுமை, தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிரான நமது போராட்டத்துக்கு, நமது இலக்குகள் ஒன்றுதான். ஆகையால், நமது முயற்சிகள் ஒன்றிணைய வேண்டும். இந்தியாவும், வங்கதேசமும் விரைவில் முன்னேறும் என்று நான் நம்பிக்கையுடன் உள்ளேன்.
இந்த புனிதமான நிகழ்வில், வங்கதேச மக்களுக்கு நான் மீண்டும், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.
இந்தியா-வங்கதேச நட்பு வாழ்க
இந்த வாழ்த்துகளுடன், எனது உரையை முடித்துக் கொள்கிறேன்.
ஜெய் வங்காளம்!
ஜெய்ஹிந்த்!
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: