பாரத் மாதா கி ஜெ!
பாரத் மாதா கி ஜெ!
பாரத் மாதா கி ஜெ!
வணக்கம்! வாழ்த்துகள்
மேடையில் உள்ள தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் திரு சர்பானந்த சோனோவால் அவர்களே, திரு ஸ்ரீபத் நாயக் அவர்களே, திரு சாந்தனு தாக்கூர் அவர்களே, திரு எல். முருகன் அவர்களே, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற பிரமுகர்களே, பொதுமக்களே, தாய்மார்களே, வணக்கம்!
இன்று தூத்துக்குடி, வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது. பல திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன அல்லது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் வளர்ந்த இந்தியாவுக்கான செயல் திட்டத்தின் முக்கிய பகுதியாகும். இந்தத் திட்டங்கள் தூத்துக்குடியில் இருக்கலாம். ஆனால் இவை இந்தியா முழுவதும் பல இடங்களில் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும்.
நண்பர்களே,
இன்று, வளர்ந்த இந்தியா என்ற லட்சியத்தை நோக்கி நாடு விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சிதம்பரனார் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் பல திட்டங்களைத் தொடங்கி வைத்தேன். அந்த நேரத்தில், இந்த துறைமுகத்தை ஒரு பெரிய கப்பல் மையமாக உயர்த்த நான் ஒரு உறுதிப்பாட்டை மேற்கொண்டேன், இன்று, அந்த உத்தரவாதம் இப்போது நிறைவேறுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 'வெளி துறைமுக கொள்கலன் முனையத்துக்கு' அடிக்கல் நாட்டு விழா வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் இன்று நடைபெற்றது. கூடுதலாக, பல்வேறு துறைமுகங்களில் சுமார் ரூ. 2500 கோடி மதிப்புள்ள 13 புதிய திட்டங்களுக்கு இங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கடல்சார் துறைக்கு புத்துயிரூட்டுவது தமிழ்நாட்டு மக்களுக்குப் பயனளிப்பது மட்டுமின்றி, இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.
நண்பர்களே
இன்று நான் தொடங்கி வைத்துள்ள இந்த திட்டங்கள் உள்ளூர் மக்களின் நீண்டகால கோரிக்கைகளாகும். தற்போது இங்கு அதிகாரத்தில் இருக்கும் நபர்கள் அந்த நேரத்தில் தில்லியில் அதிகார பதவிகளை வகித்தனர். அவர்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு பொறுப்பானவர்கள். ஆனால், தமிழகத்தின் வளர்ச்சித் தேவைகளை அவர்கள் புறக்கணித்தனர். அவர்கள் தமிழ்நாட்டின் நலனுக்காக அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இன்று, உங்கள் எளிய சேவகனாக, இந்த துடிப்பான மாநிலத்திற்கு ஒரு புதிய எதிர்காலத்தை எழுத உறுதிபூண்டு, இந்த மண்ணில் நான் நிற்கிறேன்.
நண்பர்களே,
'வ.உ.சி துறைமுகத்தில்' கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆகியவற்றின் தொடக்கம் தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டில் பசுமை ஆற்றல் மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இம்முயற்சிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தீர்வுகளுக்கான முன்னணி மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துகிறது.
நண்பர்களே,
கடல்சார் துறைக்கு மட்டுமல்லாமல், ரயில்வே மற்றும் சாலைகள் தொடர்பான பல மேம்பாட்டுத் திட்டங்களும் இன்று தொடங்கப்பட்டுள்ளன. ரயில்வே மின்மயமாக்கல் மற்றும் இரட்டை ரயில் பாதை தென் தமிழ்நாடு மற்றும் கேரளா இடையேயான போக்குவரத்தை மேம்படுத்தும். அதேபோல், தமிழ்நாட்டின் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த, 4,500 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு பெரிய திட்டங்களை இன்று தொடங்கி வைத்துள்ளேன். இந்தத் திட்டங்கள் மாநிலம் தழுவிய சாலை இணைப்பை மேம்படுத்துவதுடன், பயண நேரத்தையும் கணிசமாகக் குறைக்கும். அத்துடன் சுற்றுலா மற்றும் தொழில்துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தையும் அளிக்கும்.
நண்பர்களே,
இன்று கடல், சாலை மற்றும் ரயில்வே திட்டங்கள் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளன அல்லது முடிக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இந்த பன்முக இணைப்பு அணுகுமுறை தமிழ்நாட்டின் வளர்ச்சி வேகத்தை துரிதப்படுத்தும். இந்த குறிப்பிடத்தக்க திட்டங்களுக்காக உங்கள் அனைவரையும், தமிழ்நாட்டின் அனைத்து எனது சகோதர சகோதரிகளையும் நான் பாராட்டுகிறேன்.
நண்பர்களே,
நான் ஒருமுறை மனதின் குரல் நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் உள்ள பெரிய கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்த முடியும் என்று குறிப்பிட்டேன். இன்று, பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள 75 கலங்கரை விளக்கங்களில் மேம்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா வசதிகளைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். இது புதிய பாரதத்தின் எழுச்சியைக் குறிக்கிறது. இவை எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க சுற்றுலா தலங்களாக உருவாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நண்பர்களே,
மத்திய அரசின் முயற்சிகளால், தமிழ்நாட்டில் நவீன போக்குவரத்து இதுவரை இல்லாத உயரத்தை எட்டியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில், 1300 கிலோமீட்டர் ரயில்வே உள்கட்டமைப்பு பணிகளை நிறைவு செய்து, 2000 கிலோமீட்டர் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த ஏராளமான மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இப்போது 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், மத்திய அரசு தமிழ்நாட்டில் சாலை உள்கட்டமைப்பில் சுமார் ரூ .1.5 லட்சம் கோடியை முதலீடு செய்துள்ளது. இதன் விளைவாக கடந்த பத்து ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பில் விரைவான விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்குச் சேவை செய்வதிலும், வளர்ச்சி முயற்சிகள் தடையின்றி தொடர்வதை உறுதி செய்வதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
நண்பர்களே,
நமது நாட்டில் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டிருந்த நீர்வழிகள் மற்றும் கடல்சார் துறை, தற்போது வளர்ந்த இந்தியாவின் தூண்களாக உருவெடுத்து வருகின்றன. தமிழ்நாடு, மூன்று பெரிய துறைமுகங்கள் மற்றும் எண்ணற்ற சிறு துறைமுகங்களைக் கொண்டு, கடலோரப் பகுதிகளின் பரந்த வளத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் தனித்தன்மை வாய்ந்த நிலையில் உள்ளது. கடல்சார் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறைகளின் வளர்ச்சி தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் வளர்ச்சியுடன் நேரடியாக தொடர்புடையது. சாகர்மாலா போன்ற முயற்சிகள் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நண்பர்களே,
மத்திய அரசின் முயற்சிகள் காரணமாக, கடல்சார் மற்றும் நீர்வழித் துறைகளில் பாரதம் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில், சரக்கு போக்குவரத்து செயல்திறன் குறியீட்டில் பாரதம் பல இடங்கள் முன்னேறி 38-வது இடத்தைப் பிடித்துள்ளது. நமது துறைமுகங்களின் திறன் இரு மடங்காகவும், தேசிய நீர்வழிகள் 8 மடங்காகவும் விரிவடைந்துள்ளன. இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதிர்காலத்தில் பன்மடங்காக பெருகும். தமிழ்நாடு போன்ற கடலோர மாநிலங்களுக்கு கணிசமான நன்மைகள் கிடைப்பதுடன், இளைஞர்களுக்கு எண்ணற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தமிழகம் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து வேகமாக முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மூன்றாவது முறையாக பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்போது, இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்களை முடிப்பதற்கான எங்களது முயற்சிகளை இரட்டிப்பாக்குவோம் என்று நான் உறுதியளிக்கிறேன். இதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு மோடி அளிக்கும் உத்தரவாதம்.
நண்பர்களே,
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றி வருகிறேன். தமிழ்நாட்டு மக்களுக்குள் பொங்கி வழிந்தோடும் அன்பையும், உற்சாகத்தையும் கண்டு நெகிழ்ந்து போனேன். உறுதியான வளர்ச்சி முயற்சிகள் மூலம் உங்கள் அன்பையும் ஆசீர்வாதங்களையும் பன்மடங்கு அதிகரிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.
பாரத் மாதா கி - ஜெ!
பாரத் மாதா கி - ஜெ!
பாரத் மாதா கி - ஜெ!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
மிக்க நன்றி!