மும்பை மற்றும் மும்பை பெருநகரப் பகுதியில் பெருந்திரளாகக் கூடியிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மும்பை மற்றும் மகாராஷ்டிராவுடன் இணைந்து 'வளர்ச்சி அடைந்த இந்தியா' தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான மிக முக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள், இன்று. இந்த முன்னேற்றக் கொண்டாட்டம், மும்பையில் நடந்தாலும், அதன் தாக்கம் நாடு முழுவதும் காணப்படுகிறது. இன்று, உலகின் மிகப்பெரிய கடல் பாலங்களில் ஒன்றான அடல் சேது, நாட்டில் உள்ளது. பாரதத்தின் வளர்ச்சிக்காக கடல்களையும் எதிர்கொண்டு அலைகளை வெல்ல முடியும் என்ற நமது உறுதிக்கு இதுவே சான்று. மன உறுதியால் பிறந்த வெற்றிக்கு இன்றைய நிகழ்வு சான்று. எங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு திட்டமும் பாரதத்தின் 'நவநிர்மாண்' வழிமுறையாகும். ஒவ்வொரு செங்கலையும் கொண்டு உயரமான கட்டிடம் கட்டப்படுவது போல, ஒவ்வொரு திட்டத்திலும் வளமான பாரதத்தின் பிரமாண்டமான கட்டமைப்பு கட்டப்படுகிறது.
நண்பர்களே,
இன்று, நாடு, மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் வளர்ச்சியுடன் தொடர்புடைய 33,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் தொடக்க விழாவும் நடைபெற்றுள்ளது. இந்த திட்டங்கள் சாலைகள், ரயில்வே, மெட்ரோ மற்றும் தண்ணீர் போன்ற வசதிகளுடன் தொடர்புடையவை. இன்று, மும்பைக்கு நவீன 'பாரத ரத்னம்' மற்றும் 'நெஸ்ட் 1' கட்டிடங்களும் கிடைத்துள்ளன, இது வணிக உலகை வலுப்படுத்தும். இந்த திட்டங்களில் பெரும்பாலானவை மகாராஷ்டிராவில் முதல் முறையாக இரட்டை என்ஜின் அரசு அமைக்கப்பட்டபோது தொடங்கப்பட்டன.
தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் வழியில் உள்ள ஒவ்வொரு தடையையும் அகற்றி, அவர்களின் வாழ்க்கையை எளிதாக்க எங்கள் அரசு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமையல் எரிவாயு வழங்கும் உஜ்வாலா திட்டம், ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை வசதி, மக்கள் நிதி வங்கிக் கணக்குகள், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் உறுதியான வீடுகள், பெண்களின் பெயரில் சொத்து பதிவேடு, கர்ப்பிணிப் பெண்களின் வங்கிக் கணக்கில் 6,000 ரூபாய் வைப்பு, பணிபுரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் 26 வார விடுப்பு வழங்குதல், சுகன்யா சம்ரிதி கணக்குகள் மூலம் அதிக வட்டி வழங்குதல் என பெண்களின் நலனில் எங்கள் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
என் குடும்ப உறுப்பினர்களே,
கடந்த சில நாட்களாக, அடல் சேது குறித்து நாடு முழுவதும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அடல் சேதுவைப் பார்க்கும் எவருக்கும், அதன் படங்களைப் பார்க்கும் எவருக்கும் பெருமிதம் ஏற்படுகிறது. அதில் பயன்படுத்தப்படும் கம்பியின் அளவைக் கொண்டு, ஒருவர் பூமியை இரண்டு முறை சுற்றி வர முடியும். இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படும் இரும்பு மற்றும் எஃகு அளவைக் கொண்டு, 4 ஹவுரா பாலங்கள் மற்றும் 6 சுதந்திர சிலைகளை கட்ட முடியும். மும்பைக்கும் ராய்கட் நகருக்கும் இடையிலான தூரம் குறைந்துள்ளதால் சிலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மணிக்கணக்கில் இருந்த பயணத்தை இப்போது சில நிமிடங்களில் முடிக்க முடியும். இது புனே மற்றும் கோவாவை மும்பைக்கு நெருக்கமாக கொண்டு வரும். இந்தப் பாலம் கட்டுவதற்கு ஜப்பான் அரசு செய்த உதவிக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இன்று, எனது அன்பான நண்பர், மறைந்த ஷின்சோ அபேவை நான் நினைவு கூர்கிறேன். இந்தப் பாலத்தின் கட்டுமானத்தை விரைந்து முடிக்க நாங்கள் இருவரும் முடிவு செய்தோம்.
அடல் சேது என்பது 'வளர்ச்சி அடைந்த இந்தியாவின்' பிம்பம். ' வளர்ச்சி அடைந்த இந்தியா' எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு பார்வையை இது வழங்குகிறது. 'வளர்ச்சி அடைந்த இந்தியாவில்' வேகமும் முன்னேற்றமும், அனைவருக்கும் வசதிகளும், செழிப்பும் இருக்கும். தொலைவுகள் சுருங்கி, நாட்டின் ஒவ்வொரு மூலையும் 'வளர்ச்சி அடைந்த இந்தியா' திட்டத்தில் இணைக்கப்படும். வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வாழ்வாதாரமாக இருந்தாலும் சரி, எல்லாமே தடையின்றி தொடர்ந்து முன்னேறும். இதுதான் அடல் சேதுவின் செய்தி.
என் குடும்ப உறுப்பினர்களே,
கடந்த 10 ஆண்டுகளில், பாரதம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது, இது விவாதத்திற்குரியது. ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்த பாரதத்தை நினைவு கூரும் போது மாற்றமடைந்த பாரதத்தின் பிம்பம் தெளிவாகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, பல்லாயிரக்கணக்கான கோடிகள் சம்பந்தப்பட்ட மெகா ஊழல்களைச் சுற்றி விவாதங்கள் நடந்தன. இன்று, உரையாடல்கள் பல பில்லியன் ரூபாய் மதிப்புள்ள மெகா திட்டங்களை முடிப்பதில் கவனம் செலுத்துகின்றன. நல்லாட்சிக்கான அர்ப்பணிப்பு நாடு முழுவதும் தெளிவாகத் தெரிகிறது.
இன்று அடிக்கல் ஆட்டப்பட்ட மற்றும் துவக்கி வைக்கப்பட்ட புதிய திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வந்திருந்து எங்களை ஆசீர்வதித்த தாய்மார்களுக்கும் சகோதரிகளையும் நான் வணங்குகிறேன்.
மிகவும் நன்றி.