புந்தேல்கண்ட் மண்ணின் மற்றொரு மைந்தரான மேஜர் தியான் சந்த் அல்லது தாதா தியான் சந்த்தை நினைவு கூர்ந்தார்
முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான மக்களின், குறிப்பாக பெண்களின் வாழ்வை உஜ்வாலா திட்டம் ஒளிமயமாக்கியுள்ளது: பிரதமர்
சகோதரிகளின் சுகாதாரம், வசதி மற்றும் அதிகாரமளித்தலுக்கு பிரதமரின் உஜ்வாலா திட்டம் பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளது: பிரதமர்
வீடு, மின்சாரம், தண்ணீர், கழிவறை, எரிவாயு, சாலைகள், மருத்துவம் மற்றும் பள்ளி போன்ற அடிப்படைத் தேவைகள் பல தசாப்தங்களுக்கு முன்னரே வழங்கப்பட்டிருக்கலாம்: பிரதமர்
லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உஜ்வாலா 2.0 திட்டம் அதிகபட்சப் பயனை அளிக்கும்: பிரதமர்
எரிபொருளில் தன்னிறைவு அடைவதற்கும், நாடு வளர்ச்சி பெறுவதற்கும், கிராமங்கள் மேம்படுவதற்குமான ஆதாரமாக உயிரி எரிபொருள் விளங்குகிறது: பிரதமர்
திறமை வாய்ந்த இந்தியாவின் உறுதியை அடைவதில் சகோதரிகள் சிறப்பான பங்களிப்பை வழங்கவிருக்கிறார்கள்: பிரதமர்

வணக்கம்! ரக்‌ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்னையர்கள் மற்றும் சகோதரிகளுடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்றமைக்காக நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்தத் திருநாளையொட்டி, முன்கூட்டியே அன்னையர்கள் மற்றும் சகோதரிகளின் ஆசியை நான் பெற்றுள்ளேன். இன்று, ஏழைகள், தலித், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்களின் கோடிக்கணக்கான சகோதரிகளுக்கு மற்றுமொரு பரிசை வழங்கும் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். உஜ்வாலா திட்டத்தின் அடுத்த கட்டமாக ஏராளமான சகோதரிகள் இலவச எரிவாயு இணைப்புகளையும், அடுப்புகளையும் இன்று பெறுகின்றனர். அனைத்து பயனாளிகளையும் நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.

மகோபாவாவில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் எனது அமைச்சரவை தோழர் ஹர்தீப் சிங் பூரி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், எனது மற்றொரு அமைச்சரவை தோழர் ராமேஷ்வர் தெலி, துணை முதலமைச்சர்கள் கேசவ் பிரசாத் மவுர்யா, டாக்டர் தினேஷ் சர்மா  மற்றும் அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்!

உஜ்வாலா திட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெருமளவிலான மக்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை ஒளிமயமாக்கியுள்ளது. இந்தத் திட்டம் 2016-ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியான மங்கள் பாண்டேயின் பூமியான பல்லியாவில் தொடங்கப்பட்டது. இன்று திட்டத்தின் இரண்டாவது கட்டமும் உத்தரப்பிரதேசத்தில் தொடங்கப்படுகிறது. விடுதலைப் போராட்டத்தின் புண்ணிய பூமிகளாக புந்தேல்காண்ட், மகோபா ஆகியவை திகழ்கின்றன. ராணி லட்சுமிபாய், ராணி துர்காவதி, மகாராஜா சாத்ராசால், வீர் அல்கா, உடால் போன்ற எண்ணற்ற வீரர்களின் தீரத்தால் இந்த மண் மணம் வீசி பரிணமிக்கிறது. இந்திய விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் அந்த ஆளுமைகளை நாம் நினைவுக்கூருகிறோம்.

நண்பர்களே, இன்று புந்தேல்காண்டின் மற்றொரு பெரும் மேதையான நமது தாதா தயான்சந்த் என்கிற மேஜர் தயான்சந்தையும் நாம் நினைவுக் கூர்வோம். நாட்டின் உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா விருதுக்கு, தற்போது மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தாதாவின் பெயர் கேல் ரத்னா விருதுக்கு சூட்டப்பட்டுள்ளதானது, நமது இளம் ஒலிம்பிக் வீரர்கள் பல விளாயாட்டுக்களில், தங்கள் திறனை அபாரமாக வெளிப்படுத்தியுள்ள இந்தத் தருணத்தில்,  லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் ஊக்குவிப்பாக அமையும்.

சகோதர, சகோதரிகளே, நாம் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் உற்சாகத்தில் உள்ளோம். ஆனால், கடந்த 75 ஆண்டுகால முன்னேற்றத்தை நாம் பார்த்தோமானால், பல பத்தாண்டுகளுக்கு முன்பே சில நிலைமைகளை மாற்றியிருக்க வேண்டும் என்ற உணர்வை நாம் அடைகிறோம். நம்நாட்டு மக்கள், வீடு, மின்சாரம், குடிநீர், கழிப்பறை, சமையல் எரிவாயு, சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற அடிப்படை வசதிகளுக்காக பல பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும். இந்த துன்பங்களால், நமது அன்னையர்களும், சகோதரிகளும் பெரும் அவதிக்கு ஆளாகினர். குறிப்பாக ஏழை தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர். ஒழுகிய குடிசை, மின்சாரம் இல்லாத வீடு, மாசடைந்த தண்ணீர் என பல அவலங்களை நமது தாய்மார்கள் சந்தித்து வந்தனர். அசுத்தமான தண்ணீரால் குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டாலும் பாதிக்கப்படுவது தாய்மார்கள்தான். கழிப்பறைகள் இல்லாததால், நமது தாய்மார்களும், சகோதரிகளும் இருட்டு வரும் வரை காத்திருக்க வேண்டிய அவலநிலை நிலவியது. பள்ளிகளில் தனி கழிப்பறைகள் இல்லாமல் நமது சகோதரிகள் திண்டாட வேண்டியிருந்தது. கொளுத்தும் வெயிலில், விறகு அடுப்புகளில் கண்களைக் கசக்கிக் கொண்டே நமது தாய்மார்கள் துன்பப்படுவதை நம்மைப்போன்ற தலைமுறையினர் பார்த்திருக்கிறோம்.  

 

நண்பர்களே, இந்த நிலையிலேயே நாம் நூறாவது சுதந்திர தினத்திற்கு நம்மால் நகரமுடியுமா? அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்வதிலேயே நமது சக்தியை நாம் செலவழிக்க வேண்டுமா? அடிப்படை வசதிகளுக்காக மட்டும் போராடிக் கொண்டிருந்தால் நமது குடும்பமும், சமுதாயமும் எவ்வாறு பெரும் கனவுகளை நனவாக்க முடியும்? நம்பிக்கையைப் பெறாமல் எப்படி கனவுகள் மெய்ப்படும்? தன்னம்பிக்கை இல்லாமல் எப்படி ஒரு நாடு தன்னிறைவு அடையமுடியும்?  

சகோதர, சகோதரிகளே, நாடு எங்களுக்கு சேவை புரிவதற்கான வாய்ப்பை 2014-ல் வழங்கிய போது, இந்தக் கேள்விகளை எங்களுக்கு நாங்களே கேட்டுக்கொண்டோம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்று தெளிவாகத் தெரிந்து கொண்டோம். வீட்டிலும், சமையலறையிலும் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டால்தான், நமது பெண் மக்கள் வீடுகளில் இருந்தும், சமையலறைகளில் இருந்தும் வெளியே வந்து நாட்டு நிர்மாணத்தில் பெரும் பங்கு ஏற்க முடியும். அதனால், கடந்த 6-7 ஆண்டுகளில் தீவிரமாகச் செயல்பட்டு தீர்வுகளைக் கண்டுள்ளோம். தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், கோடிக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ், ஏழை குடும்பங்களுக்கு 2 கோடிக்கும் அதிகமான உறுதியான வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. இந்த வீடுகளின் பெரும்பாலான உரிமையாளர்கள் நமது சகோதரிகள்தான். ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைத்துள்ளோம். சௌபாக்யா திட்டத்தின் கீழ், சுமார் 3 கோடி குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் 50 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை வசதியை அளித்துள்ளது. மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசிகள் வழங்கவும், ஊட்டச்சத்து வழங்கவும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஜன்தன் திட்டத்தின் கீழ், கோடிக்கணக்கான சகோதரிகளுக்கு வங்கி கணக்குகள் திறக்கப்பட்டு, அவற்றில் கொரோனா காலத்தில் ரூ. 30,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. தற்போது ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் நமது ஏழை தாய்மார்களின் வீட்டுக் குழாய்களில் சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

நண்பர்களே, பெண்களுக்கு சுகாதாரத்தை உறுதி செய்து, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, அவர்களை அதிகாரப்படுத்த உஜ்வாலா திட்டம் பெரும் முக்கியத்துவத்தை அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில், எட்டு கோடி ஏழைகள், தலித், ஒடுக்கப்பட்ட பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் இதன் பயனை நாம் கண்கூடாகப் பார்த்தோம். தொழில்கள் இல்லாமல், முடங்கியிருந்த காலத்தில் கோடிக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கு இலவச எரிவாயு உருளைகள் பல மாதங்களுக்கு வழங்கப்பட்டன. உஜ்வாலா திட்டம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் ஏழை சகோதரிகளின் நிலை என்னவாகியிருக்கும் என்பதை  கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.

உஜ்வாலா திட்டத்தின் மற்றொரு பயனாக, எல்பிஜி சார்ந்த உள்கட்டமைப்புகள் நாட்டில் பல மடங்கு அதிகரித்தன. கடந்த 6-7 ஆண்டுகளில், நாடு முழுவதும் 11,000-க்கும் அதிகமான புதிய எல்பிஜி விநியோக மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 2014-ம் ஆண்டு 2000-க்கும் குறைவாக இருந்த எல்பிஜி விநியோக மையங்கள் தற்போது 4,000-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளன. இதன்மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டியுள்ளது. இரண்டாவதாக, முன்பு எரிவாயு இணைப்புகள் இல்லாமல் இருந்த குடும்பங்கள் இன்று இணைப்பைப் பெற்றுள்ளன. இதன் காரணமாக, இன்று எரிவாயு பயன்பாடு இந்தியாவில் 100% என்ற அளவை நெருங்கியுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்டதை விட கடந்த ஏழு ஆண்டுகளில் அதிகமாக இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

சகோதர, சகோதரிகளே, ஏற்கனவே உள்ள உஜ்வாலா திட்டத்தின் வசதிகளுடன், மற்றுமொரு வசதி தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. புந்தேல்காண்ட் உள்ளிட்ட உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நமது தோழர்களும், மற்ற மாநிலங்களின் கிராமங்களைச் சேர்ந்தவர்களும் வெகுதாரத்தில் உள்ள இடங்களுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர். இதனால், அவர்கள் முகவரி நிரூபணப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இத்தகைய லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு இரண்டாவது கட்ட உஜ்வாலா திட்டம் பெரும் நிவாரணத்தை வழங்கவுள்ளது. இப்போது நமது தொழிலாள நண்பர்கள் இதற்காக அலையவேண்டியதில்லை. உங்கள் நேர்மை மீது அரசு முழுநம்பிக்கை வைத்துள்ளது. எழுத்து மூலம் நீங்கள் உங்கள் முகவரி பற்றிய சுய உறுதி அளித்தால், உங்களுக்கு எரிவாயு இணைப்பு கிடைக்கும்.  

தற்போது, தண்ணீரைப் போல, குழாய் இணைப்பு மூலம் எரிவாயு வழங்கும் திட்டத்தை நோக்கி அரசு பணியாற்றி வருகிறது. இது உருளை வாயுவை விட விலை குறைவாக இருக்கும். உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட கிழக்கு இந்தியாவில் பல மாவட்டங்களில் இந்தப்பணி வேகமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டத்தில், உ.பி.யின் 50 மாவட்டங்களைச் சேர்ந்த 21 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.    

சகோதர, சகோதரிகளே, நமது கனவுகள் பெரிதாக இருக்கும் போது, அதை அடைவதற்கான முயற்சிகளும் அதே அளவில் பெரிதாகத்தான் இருக்க வேண்டும். இன்று, உலக உயிரி எரிபொருள் தினத்தையொட்டி, நாம் நமது இலக்குகளை மீண்டும் நினைவுக் கூரவேண்டும். உயிரி எரிபொருள் என்பது சுத்தமானது மட்டுமல்லாமல், எரிபொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கான வழியாகவும் திகழ்கிறது. வீட்டு கழிவுகள், பண்ணைக்கழிவுகள், தாவரங்கள், அழுகிய உணவுதானியங்கள் ஆகியவற்றிலிருந்து உயிரி எரிபொருளை தயாரிக்க முடியும். உயிரி எரிபொருள் எத்தனால் இலக்குகளை அடைய அரசு முயற்சித்து வருகிறது. கடந்த 6-7 ஆண்டுகளில் பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலக்கும் இலக்கை நாம் வெகுவாக நெருங்கியுள்ளோம். அடுத்த 4 -5 ஆண்டுகளில், நாம் 20 சதவீத கலப்பை நோக்கி நகர்ந்து வருகிறோம். நாட்டில் 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே, தற்போது நாடு அடிப்படை வசதிகளை அடைவதன் மூலம் மிகச்சிறந்த வாழ்க்கையை எட்டும் கனவை நிறைவேற்றுவதை நோக்கி நடைபோட்டு வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்த ஆற்றலை பலமடங்கு அதிகரிக்க வேண்டும். திறன்மிக்க இந்தியாவை உருவாக்குவதில் சகோதரிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரக்‌ஷா பந்தன் புனித பண்டிகையையொட்டி, எனது தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் இந்த சேவையை வழங்கும் வாய்ப்பு மூலம் ஆசிர்வதிக்கப்பட்டதாக நான் உணருகிறேன். ஏழை, எளிய கிராமப்புற மக்கள், விவசாயிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட 130 கோடி இந்தியர்களுக்கு புதிய ஆற்றலுடன் தொண்டாற்ற உங்களது ஆசிகள் எனக்கு எப்போதும் இருக்கும் என்ற உணர்வுடன் உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 21, 2024
November 21, 2024

PM Modi's International Accolades: A Reflection of India's Growing Influence on the World Stage