இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் எனது அமைச்சரவை தோழர்கள் திரு ஹர்தீப் சிங் பூரி, திரு கஜேந்திர சிங் செகாவத், திரு பிரகலாத் சிங் பட்டேல், திரு கவுசல் கிஷோர், திர் பிஸ்வேஸ்வர், மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மேயர்கள், தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள், தூய்மை இந்தியா மற்றும் அம்ருத் இயக்க பணியாளர்கள், பெரியோர்கள் மற்றும் தாய்மார்கள் அனைவருக்கும் வணக்கம்.
தூய்மை இந்தியா மற்றும் அம்ருத் திட்டங்களின் அடுத்த கட்டத்திற்கு நாடு நகர்ந்திருப்பது குறித்து நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். 2014-ல், இந்தியாவை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக மாற்றுவோம் என்று மக்கள் உறுதி எடுத்துக் கொண்டனர். 10 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகளைக் கட்டி இந்த உறுதிமொழியை அவர்கள் நிறைவேற்றியுள்ளனர். தற்போது, நகர்ப்புற தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் நோக்கம், குப்பைகள் இல்லாத நகரங்களை உருவாக்குவதாகும். அம்ருத் இயக்கம் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் அதிகமாக உதவவுள்ளது.நகரங்களில் 100 சதவீதம் குடிநீர் பெறுதல் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் பராமரிப்பை நாம் முன்னெடுத்துச் செல்கிறோம். அம்ருத் இயக்கத்தின் அடுத்த கட்டத்தில், நகரங்களில் கழிவு நீர் அகற்றுதலைப் பராமரித்து, எந்த நகரத்திலும் கழிவுகள் ஆறுகளில் கலக்காத நிலையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
நண்பர்களே, தூய்மை இந்தியா மற்றும் அம்ருத் இயக்கங்களின் பயணம் இதுவரை நாட்டுமக்களை உண்மையிலேயே பெருமிதம் கொள்ளச் செய்துள்ளது. இது மரியாதையான, ககண்ணியமான, லட்சியம் நிறைந்த தாய் நாட்டை உருவாக்குவதைக் கொண்டுள்ளது. தூய்மை இந்தியா இயக்கம் நாட்டு மக்கள் அனைவருக்கும் தங்கள் கடமை உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு குடிமக்களின் கடின உழைப்பு, பங்களிப்பால் இந்த இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. நமது தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளின் நாற்றத்தையும் பொருட்படுத்தாமல், உண்மையான அர்ப்பணிப்புடன் சாலைகளைப் பெருக்கி சுத்தப்படுத்தி வருகின்றனர். கொரோனா நெருக்கடிக்கு இடையிலும் நாடு அவர்களது பங்களிப்பைக் கண்டது.
இந்த சாதனைக்காக ஒவ்வொரு இந்தியரையும் வாழ்த்தும் அதே வேளையில், நகர்ப்புற தூய்மை இந்தியா 2.0 மற்றும் அம்ருத் 2.0 ஆகியவற்றுக்கு வாழ்த்துக்களைத் தெரிவுத்துக் கொள்கிறேன். காந்தி ஜெயந்திக்கு முதல் நாளில் இந்த தொடக்கம் நடைபெறுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. நமது மகாத்மாவிடமிருந்து பெற்ற உத்வேகமே இந்த இயக்கத்துக்கு அடிப்படையாகும். தூய்மை என்பது நமது தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் எந்த அளவுக்கு வசதியாக உள்ளது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். கழிப்பறை வசதி இல்லாததால், நமது தாய்மார்கள் வீட்டை விட்டு வெளியேறவோ, வேலைகளுக்கு செல்லவோ முடியாத நிலை இருந்தது. பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாததால் பல சகோதரிகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே விடும் நிலை இருந்தது. இப்போது, நிலைமை மாறியுள்ளது. 75-வது சுதந்திர ஆண்டில், இந்த வெற்றியை பாபுவின் கால்களில் சம்ர்ப்பிக்கிறேன்.
நண்பர்களே, பாபாசாகிப் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த சர்வதேச மையத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது அதிர்ஷ்டவசமாகும். சமத்துவம் இல்லாத நிலையை அகற்ற நகர்ப்புற வளர்ச்சி அவசியம் என பாபாசாகிப் நம்பினார். சிறந்த வாழ்க்கையை எதிர்பார்த்து ஏராளமான மக்கள் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு நகரங்களில் வேலை கிடைத்த போதிலும், அவர்களது வாழ்க்கை கிராமங்களில் இருந்ததைப் போன்றே உள்ளது. தங்களது கிராமத்திலிருந்து தொலைவில் உள்ளது, வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாதது என இரட்டை அவல நிலையில் அவர்களது வாழ்க்கை உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பது பாபாசாகிப்பின் விருப்பமாக இருந்தது. தூய்மை இந்தியா மற்றும் அம்ருத் இயக்கங்களின் அடுத்த கட்டம் பாபாசாகிப்பின் கனவை நனவாக்கும்.
நண்பர்களே, நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, வளர்ச்சிக்கு சுற்றுலாவை ஆதாரமாக கொள்வது பற்றிய வாய்ப்புகள் ஆராயப்பட்டன. இதில் அனைவரையும் இணைக்க தூய்மையில் மிகப் பெரிய கவனம் செலுத்தப்பட்டது. நிர்மல் குஜராத் இயக்கம் மக்கள் இயக்கமாக மாறிய போது, அதனால் பெரும் பயன்கள் விளைந்தன. இது குஜராத்துக்கு புதிய அடையாளத்தை அளித்ததுடன், மாநிலத்தில் சுற்றுலா துறை பெரும் முன்னேற்றம் கண்டது.
சகோதர, சகோதரிகளே, தூய்மை இந்தியா இயக்க வெற்றியின் சாரம் அது மக்கள் இயக்கமாக உருவானதில் அடங்கியுள்ளது. முன்பெல்லாம், நகரங்களின் தெருக்களில் குப்பைகள் சிதறிக் கிடக்கும். இப்போது, வீடுகளுக்கு வந்து கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. பல வீடுகளில் குப்பைகளைத் தரம் பிரிக்கும் பெட்டிகளை வைத்துள்ளனர். அவற்றை அவர்களே பிரித்தெடுத்து அதில் போடுகின்றனர். தூய்மை, சுகாதாரம், ஆரோக்கியம் ஆகிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தூய்மை இயக்கத்தை இப்பதைய தலைமுறையினர் முன்னெடுப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிட்டாய் கவர்கள் இப்போது தரையில் கிடப்பதில்லை. அவற்றை பாக்கெட்டுகளில் போட்டு, குப்பைக்கூடைகளில் போடுகின்றர். குழந்தைகள் தங்களது தாத்தா, பாட்டிகளுக்கு தூய்மை குறித்து கூறுகின்றனர். நகரங்களில் உள்ள இளைஞர்கள் தூய்மைப் பணிகளுக்கு பல வழிகளில் உதவுகின்றனர். சிலர் குப்பைகளில் இருந்து வருமானம் ஈட்டுகின்றனர். வேறு சிலர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் உதவுகின்றனர்.
தூய்மை இந்தியா தரவரிசையில் தங்கள் நகரத்தை கொண்டு வருவதற்கு இப்போது போட்டி நிலவுகிறது. இதில் சுணக்கம் இருந்தால், நமது நகரம் பின்தங்கி விடும் என்று மக்கள் உணர்ந்துள்ளனர். இந்தூரில் இருந்து தொலைக்காட்சியில் இதைப் பார்க்கும் நண்பர்கள் இதை உணர்வார்கள். இந்தூர் மக்களின் கூட்டு முயற்சியால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
இந்த தூய்மை இயக்கத்தில் ஈடுபடுமாறு அனைத்து மாநிலங்கள், உள்ளாட்சி அமைப்புகள், நகரங்களின் மேயர்களை நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். கொரோனா காலத்தில் சில மந்தநிலை இருந்திருக்கலாம். இப்போது, புதிய ஆற்றலுடன் நாம் முன்னேறிச் செல்ல வேண்டிய நிலை வந்துள்ளது. தூய்மை என்பது, ஒரு நாளுடன், அல்லது இரு வாரத்துடன், ஒரு ஆண்டுடன் முடிந்து விடுவதல்ல என்பதுடன், சிலரது பொறுப்பு மட்டும் அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தூய்மை என்பது அனைவருக்குமான, ஒவ்வொரு நாளுக்குமான, ஒவ்வொரு ஆண்டுக்குமான, தலைமுறை, தலைமுறைக்குமான இயக்கமாகும். தூய்மை என்பது வாழ்க்கை முறை, அது வாழ்க்கையின் தாரக மந்திரம்.
காலையில் எழுந்தவுடன் நமது பற்களை சுத்தப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது போல, தூய்மையை நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக கொள்ள வேண்டும். நான் தனிநபர் தூய்மையை மட்டும் வலியுறுத்தவில்லை, சமூக தூய்மை பற்றி கூறுகிறேன். அரசு எடுக்கும் முயற்சிக்கு மக்களின் ஒத்துழைப்பு இருந்தால், எதுவும் சாத்தியம் என்பதை ரயில் பெட்டிகள் இப்போது உணர்த்துகின்றன.
நண்பர்களே, நகர்ப்புற ஏழைகள் மற்றும் நடுத்தரப் பிரிவு மக்களின் சிரமமற்ற எளிதான வாழ்க்கைக்கு நமது அரசு சாதனை அளவில் அதிக முதலீடு செய்துள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்துக்கு சுமார் 1.25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்போதுரூ.4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று இந்தியாவில் ஒரு லட்சம் டன் கழிவுகள் நாள் தோறும் கையாளப்பட்டு வருகிறது. 2014-ல் இந்த இயக்கம் தொடங்கிய போது, 20 சதவீதத்துக்கும் குறைவான கழிவுகளே மேலாண்மை செய்யப்பட்டது. இன்று தினந்தோறும், 70 சதவீத கழிவுகள் மேலாண்மை செய்யப்படுகின்றன.இதனை 100% ஆக்க வேண்டும். இதை குப்பைகளை அகற்றுவதால் மட்டும் செய்து விடமுடியாது. அவற்றை செல்வமாக மாற்றுவதில் தான் இச்சாதனையை எட்ட முடியும்.
நண்பர்களே, இந்த நிகழ்ச்சியில், நகரங்களின் முக்கிய துணைவர்களாக விளங்குபவர்கள் பற்றி நான் பேச விரும்புகிறேன். அவர்கள் தெருவோர வியாபாரிகள். பிரதமர் ஸ்வநிதி திட்டம் அந்த மக்களுக்கு நம்பிக்கை ஒளியாக உள்ளது. சுதந்திரத்துகுப் பின்பு பல பத்தாண்டுகளாக அவர்களைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. யாரோ ஒருவரிடம் வாங்கும் கடனுக்கு அதிக வட்டியை அவர்கள் கட்ட வேண்டியிருந்தது. அவர்களால் கடன் சுமையிலிருந்து மீளமுடியாத நிலை இருந்து வந்தது. அவர்களிடம் உத்தரவாதம் இல்லாததால் வங்கிகளும் உதவ முன்வரவில்லை.
பிரதமர் ஸ்வநிதி முடியாததை முடித்துக் காட்டியுள்ளது. இன்று, 46 லட்ச்சுக்கும் அதிகமான தெரு வியாபாரிகள் இந்தத் திட்டத்தின் பயனை அடைய முன்வந்துள்ளனர். இதில், 25 லட்சம் பேருக்கு 2500 கோடி ரூபாய் கடன் அளிக்கப்பட்டிருப்பது சிறிய விஷயமல்ல. அவர்கள் தற்போது டிஜிடல் பரிவர்த்தனை மூலம் தங்களது கடனை வங்கிகளுக்கு திருப்பி செலுத்தி வருகின்றனர். குறுகிய காலத்தில் இவர்கள் ஏழு கோடி பரிவர்த்தனைகளை செய்துள்ளனர். இது படித்தவர்களையும் வியப்படைய வைத்துள்ளது.
நண்பர்களே, கர்மாவின் பயணத்தை நீங்கள் கடக்கும் போது, உங்களது வெற்றியும் எளிதாகும் என வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. நீங்கள் தூங்கினால், வெற்றியும் தூங்கி விடும். நீங்கள் விழித்தெழுந்தால், வெற்றியடைவீர்கள். உங்களது முன்னேற்றத்தைப் பொறுத்து வெற்றி இருக்கும். எனவே, நாம் தொடர்ந்து முன்னேறி செல்ல வேண்டும். இந்த மந்திரத்துடன், உங்கள் நகரம் அனைத்து பிரச்சினைகளிலும் இருந்து விடுபட நீங்கள் முன்முயற்சி எடுக்க வேண்டும். தூய்மையான, முன்னேற்றமான இந்தியாவை உருவாக்கி, நீடித்த வாழ்க்கையை நோக்கி உலகை இட்டுச் செல்ல வேண்டும்.
அனைவரது முயற்சியிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. நாடு நிச்சயம் இந்த கனவை நனவாக்கும். இந்த வாழ்த்துக்களுடன் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அநேக வாழ்த்துக்கள்!