People engaged in pisciculture will benefit largely from Pradhan Mantri Matsya Sampada Yojana: PM
It is our aim that in the next 3-4 years we double our production and give fisheries sector a boost: PM Modi
PMMSY will pave the path for a renewed White revolution (dairy sector) and Sweet revolution (apiculture sector), says PM

பிரதமர் திரு. நரேந்திர மோடி, பிரதமர் சம்பாத யோஜனா, இ-கோபாலா செயலி மற்றும் பீகாரில் மீன் உற்பத்தி, பால் பண்ணை, கால்நடை பராமரிப்பு, விவசாயம் ஆகியவை தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பல்வேறு முன்முயற்சிகளை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்த அனைத்து திட்டங்களின் பின்னணியில் உள்ள நோக்கம், நமது கிராமங்களை அதிகாரமயமாக்குவதுடன், 21-ம் நூற்றாண்டில் இந்தியாவை தன்னிறைவு பெற்றதாக (தற்சார்பு இந்தியா) மாற்றுவதுதான் என்று கூறினார்.

இதே நோக்கத்துடன்தான் மத்ஸ்ய சம்பாத யோஜனாவும் (மத்திய வளத்திட்டம்) தொடங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். ரூ. 20,000 கோடி முதலீட்டில் இந்தத் திட்டம், நாட்டின் 21 மாநிலங்களில் தொடங்கப்படுவதாகத் தெரிவித்தார். இது,  அடுத்த  4 – 5 ஆண்டுகளில் செலவழிக்கப்படும். இதில், ரூ. 1700 கோடி மதிப்பிலான திட்டங்கள் இன்று துவங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்தத் திட்டத்தின் கீழ், பாட்னா, சிதாமர்கி, மாதேபுரா, கிஷன்கஞ்ச், சமஸ்திபூர் ஆகிய இடங்களில் ஏராளமான வசதிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மீன் உற்பத்தியாளர்களுக்கு புதிய சந்தைகள் அணுக்கம், புதிய உள்கட்டமைப்புகள், நவீன உபகரணங்கள் ஆகியவற்றை, பண்ணைத் தொழில் மற்றும் இதர வழிகளில் வாய்ப்புகளை அதிகரிக்கும் வசதிகளுடன் இத்திட்டம் அளிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

சுதந்திரத்திற்குப் பின்பு முதன்முறையாக, நாட்டில் மீன் வளத்துறைக்கு என இத்தகைய மிகப்பெரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இத்துறையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, மீன்வளம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக தனி அமைச்சகம் ஒன்றை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது என்று திரு. மோடி தெரிவித்தார். நமது மீனவர்கள் மற்றும் மீன் விற்பனையில் ஈடுபட்டுள்ள மற்றவர்களுக்கும் இது உதவிகரமாக இருக்கும்.

வரும் 3 – 4 ஆண்டுகளில் மீன் ஏற்றுமதியை இருமடங்காக்குவது இதன் குறிக்கோள் ஆகும். மீன் வளத்துறையில் மட்டும் இந்த முயற்சி லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்தத்துறையில் சம்பந்தப்பட்ட நமது நண்பர்களுடன் இன்று கலந்துரையாடிய பின்னர், தமது நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

மீன் பண்ணைகளில் பெரும்பாலானவை தெளிந்த நீரைச் சார்ந்துள்ளது என்று கூறிய பிரதமர், கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டம் இதற்கு மேலும் உதவும் என்றார். கங்கை நதியைச் சுற்றிலும் நடைபெற்று வரும் நதிநீர் போக்குவரத்துப் பணிகள் மீன்வளத்துறைக்கு மேலும் பயனளிக்கும் என்று அவர் கூறினார். இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று அறிவிக்கப்பட்ட டால்பின் இயக்கமும் மீன் வளத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக  பீகார் அரசு மேற்கொண்டுள்ள பணிகளைப் பிரதமர் பாராட்டினார். 4 – 5 ஆண்டுகளுக்கு முன்பாக பீகாரில், 2% வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தன என்று கூறிய அவர், தற்போது, 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பீகார் அரசின் முயற்சிகள், இந்திய அரசின் ஜல்ஜீவன் இயக்கத்துக்கு மேலும் ஒத்துழைப்பை அளித்துள்ளதாக பிரதமர்  குறிப்பிட்டார்.  

இந்த கொரோனா காலத்திலும், பீகாரில் சுமார் 60 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்திருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய சாதனை என்று அவர் கூறினார்.  நாட்டில் அனைத்தும் முடங்கியிருந்த இந்தச் சிக்கலான நேரத்திலும், நமது கிராமங்களில் எவ்வாறு பணிகள் நடந்திருக்கின்றன என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் குறிப்பிட்டார். கொரோனா பரவல் சமயத்திலும், உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பால் ஆகியவை மண்டிகளுக்கும், பால் பண்ணைகளுக்கும் தொடர்ந்து எந்தவிதப் பற்றாக்குறையும் இன்றி வந்து கொண்டிருந்தது, நமது கிராமங்களின் வலிமையாகும் என்று அவர் கூறினார்.

இது மட்டுமல்லாமல், இந்த நெருக்கடியான நிலையிலும், பால் பண்ணைத் தொழிலில், சாதனை அளவாக கொள்முதல் செயப்பட்டுள்ளது. பிரதமர் கிசான் சம்மான் நிதி மூலம், நாட்டில் 10 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இதில் 75 லட்சம் விவசாயிகள் பீகாரைச் சேர்ந்தவர்கள்.

கொரோனாவுடன், வெள்ளத்தையும் பீகார் துணிச்சலுடன் எதிர்கொண்ட பணிகள்  பாராட்டத்தக்கவை என அவர் கூறினார். மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து நிவாரணப் பணிகளை துரிதமாக நிறைவு செய்ய முயற்சிகளை எடுத்ததாக அவர் கூறினார்.

இலவச ரேசன் திட்டம், பிரதமர் கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் ஆகியவற்றின் பலன்கள் பீகாரில் ஏழை, எளிய மக்கள், வெளி மாநிலங்களிருந்து திரும்பிய தொழிலாளர் குடும்பங்கள் என தேவைப்பட்ட ஒவ்வொருவருக்கும் சென்றடைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். எனவே, ஜூன் மாதத்திற்குப் பின்னரும், தீபாவளி, சாத் பூஜா ஆகியவற்றுக்கும் இலவச ரேசன் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நகரங்களில் இருந்து திரும்பிய ஏராளமான தொழிலாளர்கள் தற்போது கால்நடை பராமரிப்பை நோக்கி நகர்ந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். மத்திய அரசு மற்றும் பீகார் மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் அவர்கள் பலனடைந்து வருகின்றனர். நாட்டின் பால்பண்ணைத் தொழிலை, புதிய உற்பத்தி பொருட்கள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுடன் விரிவுபடுத்த அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறிய அவர், இதன் மூலம் விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் அதிக வருமானம் பெற முடியும் என்றார். இதனுடன், நாட்டின் கால்நடைகளின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பண்ணைகளில் தூய்மையையும், சுகாதாரத்தையும்  பராமரிப்பது, சத்து மிக்க உணவுகளை வழங்குவது ஆகியவை இதில் அடங்கும். இந்தக் குறிகோளுடன், கால்நடைகளின் வாய் மற்றும் கால் நோய்களில் இருந்து 50 கோடிக்கும் மேற்பட்ட கால்நடைகளைப் பாதுகாக்க இலவச தடுப்பூசி வழங்கும் இயக்கம் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். விலங்குகளுக்கு சிறந்த தீவனங்களை வழங்குவதற்கு பல்வேறு திட்டங்களின் கீழ் வசதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் சிறந்த உள்நாட்டு ரக கால்நடைகளை உருவாக்கும் கோகுல் இயக்கம் பரிசீலனையில் உள்ளதாக அவர் தெரிவித்தார். ஓராண்டுக்கு முன்பு நாடு முழுவதும் தொடங்கப்பட்ட செயற்கை கருவூட்டல் திட்டத்தின் முதல் கட்டம் முடிவடைந்துள்ளது.

தரமான உள்நாட்டு கால்நடை ரகங்களை உருவாக்குவதற்கான பெரிய மையமாக பீகார் மாறியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். தேசிய கோகுல் இயக்கத்தின் கீழ், புர்ணியா, பாட்னா, பாராவுனி ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள நவீன வசதிகள் காரணமாக, பீகார் மாநிலம் தனது பால் பண்ணைத்துறையை வலுப்படுத்தப்போகிறது.  புர்ணியாவில் உருவாக்கப்பட்டுள்ள மையம் இந்தியாவிலேயே உள்ள மிகப்பெரிய மையங்களில் ஒன்றாகும். இது பீகாருக்கு மட்டுமல்லாமல், கிழக்கு இந்தியாவின் பெரும் பகுதிகளுக்கு பெரும் பலனை அளிக்கும். பச்சாவுர், ரெட் புர்ணியா போன்ற பீகாரின் உள்நாட்டு கால்நடை ரகங்களை பாதுகாத்து மேம்படுத்த இந்த மையம் பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று அவர் கூறினார்.

பொதுவாக ஒரு பசு ஆண்டுக்கு ஒரு கன்றை ஈனுவது வழக்கம் என்று கூறிய பிரதமர், ஐவிஎப் தொழில்நுட்பத்தின் உதவியுடன், ஓராண்டில் பல கன்றுகளை பிரசவிக்க முடியும் என்றார். இந்தத் தொழில்நுட்பத்தை ஒவ்வொரு கிராமத்துக்கும் கொண்டு சேர்ப்பதே நமது லட்சியம். நல்ல தரமான விலங்குகளை உருவாக்குவதுடன், அவற்றைக் கவனித்து வளர்ப்பதும் இணையான முக்கியத்துவத்தை கொண்டதாகும் என அவர் குறிப்பிட்டார். இன்று தொடங்கப்பட்டுள்ள இ- கோபாலா செயலி, விவசாயிகள் சிறந்த தரமான கால்நடைகளைத் தேர்வு செய்வதற்கு ஏற்ற ஆன்லைன் டிஜிடல் தளமாக இருக்கும். இது இடைத்தரகர்களிடமிருந்து அவர்களை விடுவிக்கும். உற்பத்தியிலிருந்து, கால்நடைகளின் சுகாதாரம், உணவு உள்ளிட்ட கால்நடைப் பராமரிப்பு வரையிலான  அனைத்து தகவல்களையும் இந்தச் செயலி அளிக்கும். இந்தப் பணி நிறைவடைந்ததும், விலங்கு ஆதார் எண்ணை இ-கோபாலா செயலியுடன் இணைக்கும் பணி நடைபெறும். இதன் மூலம் அந்த விலங்கு பற்றிய முழுமையான தகவலை எளிதாகப் பெற முடியும். இதனால், கால்நடைகளை எளிதில் விற்கவும், வாங்கவும் முடியும்.

விவசாயம், கால்நடை பராமரிப்பு மீன்வளம் ஆகியவற்றில்  வேகமான வளர்ச்சிக்கு கிராமங்களில் நவீன உள்கட்டமைப்புகளை உருவக்குவதுடன், அறிவியல் முறைகளைப் பின்பற்றுவது அவசியம் என பிரதமர் வலியுறுத்தினார். விவசாய கல்வி மற்றும் ஆராய்ச்சியில் பீகார் முக்கியமான மையமாக உள்ளது.

தில்லியில் உள்ள புசா நிறுவனம், பீகாரில் உள்ள சமஸ்திபூருக்கு அருகில் உள்ள புசா நகரத்தைக் குறிக்கும் என்பதை வெகு சிலரே அறிவார்கள் என்று அவர் கூறினார். காலனி ஆதிக்க காலத்திலேயே, சமஸ்திபூரில் உள்ள புசா என்னுமிடத்தில், தேசிய அளவிலான விவசாய ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜனநாயக் கர்ப்பூரி தாகூர் போன்ற தலைவர்களின் தொலைநோக்கை அவர் புகழ்ந்துரைத்தார்.

இந்த முயற்சிகளில் இருந்து பெற்ற ஊக்கத்தின் பலனாக, 2016-ல் டாக்டர் ராஜேந்திர பிரசாத் விவசாயப் பல்கலைக் கழகம் மத்திய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டது என்று பிரதமர் தெரிவித்தார். இதன் பின்னர், பல்கலைக் கழகத்திலும், அதன் உறுப்பு கல்லூரிகளிலும் பல்வேறு படிப்புகள் விரிவுபடுத்தப்பட்டன. மேலும், விவசாய வணிகம், ஊரக மேலாண்மை கல்வி நிலையத்துக்கான புதிய கட்டிடம் தொடங்கப்பட்டதாகக் கூறிய அவர், புதிய விடுதிகள், விளையாட்டு அரங்கங்கள், விருந்தினர் மாளிகைகள் ஆகியவையும் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

விவசாயத்துறையில், நவீனத் தேவைகளின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, நாட்டில் 3 மத்திய விவசாய பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட்டுள்ளன. 5-6 ஆண்டுகளுக்கு முன்பு, வெறும் ஒரு பல்கலைக் கழகம் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. பீகாரில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் வெள்ளத்திலிருந்து, விவசாயத்தைப் பாதுகாக்க பீகாரில், மகாத்மா காந்தி ஆராய்ச்சி மையம் தொடங்கப்படுள்ளது. இதேபோல, மோத்திப்பூரில் மீன் வளத்துக்கான மண்டல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், மோத்திகரியில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள மேம்பாட்டு மையம் மற்றும் இதுபோன்ற பல நிறுவனங்கள், விவசாயத்தை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைப்பதற்காகத் தொடங்கப்பட்டுள்ளன.

கிராமங்களுக்கு அருகே உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களின் தொகுப்புகளை உருவாக்குவது அவசியம் என பிரதமர் வலியுறுத்தினார். இவற்றின் மூலம், நாம் ஜெய் கிசான் ஜெய் விஞ்ஞான்  ஜெய்  அனுசந்தன் என்ற குறிக்கோளை எட்ட முடியும் என்று அவர் கூறினார்.

சிறப்பு உள்கட்டமைப்புகளை உருவாக்கவும், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள் சேமிப்பு கிடங்குகள், பதப்படுத்தும் நிலையங்கள் மற்றும் இதர வசதிகளை உருவாக்க ஆதரவளிக்கவும், மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

மகளிர் சுய உதவிக்குழுக்களும் சிறந்த ஆதரவை பெற்று வருகின்றன. இந்த உதவி கடந்த ஆறு ஆண்டுகளில் 32 மடங்காக அதிகரித்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களையும், வளர்ச்சி எந்திரமாக மாற்றும் வகையில் ஒருங்கிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திரு. நரேந்திர மோடி தெரிவித்தார். இது இந்தியாவை தன்னிறைவு பெற்றதாக மாற்றும் என்று அவர் கூறினார்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Indian economy ends 2024 with strong growth as PMI hits 60.7 in December

Media Coverage

Indian economy ends 2024 with strong growth as PMI hits 60.7 in December
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 17, 2024
December 17, 2024

Unstoppable Progress: India Continues to Grow Across Diverse Sectors with the Modi Government