மத்திய அமைச்சரவையில் உள்ள எனது நண்பர்களே, சரக்குப் போக்குவரத்து மற்றும் தொழில்துறைகளின் பிரதிநிதிகளே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!
விடுதலையின் அமிர்த காலத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான முக்கிய நடவடிக்கை இன்று எடுக்கப்பட்டுள்ளது. கடைக்கோடி பகுதி வரை விரைவான விநியோகத்தை உறுதி செய்வது, போக்குவரத்து சம்பந்தமான சவால்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, நேரத்தை சேமிப்பது, உற்பத்தியாளர்களின் செலவை குறைப்பது மற்றும் வேளாண் பொருட்கள் வீணாவதை தடுப்பதற்கு ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுபோன்ற நடவடிக்கைகளுள் ஒன்றுதான் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை. இன்று நாம் உலக அளவில் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கிறோம். நாடு வேகமாக மாறி வருகிறது. இன்று சிறுத்தைகளை நாம் விடுவிக்கிறோம். அவற்றின் வேகத்தைப் போலவே சரக்குகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறோம். அதே வேகத்தில் நாடும் முன்னேற விழைகிறது.
நண்பர்களே,
இந்தியாவில் உற்பத்தி மற்றும் தற்சார்பு இந்தியா என்ற எதிரொலி இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கூட ஒலிக்கிறது. மிகப்பெரிய ஏற்றுமதி இலக்குகளை இந்தியா நிர்ணயிப்பதோடு, அவற்றை நிறைவேற்றியும் வருகிறது. உற்பத்தி மையமாக இந்தியா வளர்ச்சி பெறுவது என்பது உலக நாடுகளின் மத்தியில் நிலைத்தன்மையை ஏற்படுத்தி வருகிறது. உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தை நாம் ஆய்வு செய்தால், உலக நாடுகள் அதனை ஏற்றுக் கொள்வதை நம்மால் அறிய முடியும். இதுபோன்ற சூழலில் தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை அனைத்துத் துறைகளிலும் புதிய வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நண்பர்களே,
கொள்கை என்பது மட்டுமே இறுதி முடிவு அல்ல. சொல்லப்போனால் அது வெறும் தொடக்கம் தான். கொள்கையும் செயல்திறனும் இணையும்போது தான் முன்னேற்றம் ஏற்படும். எனவே கொள்கை இறுதி செய்யப்படும்போது அரசு மற்றும் இந்த துறையில் ஈடுபட்டுள்ள ஜாம்பவான்களின் செயல்முறையும் பன்மடங்கு அதிகரிக்கிறது. எனினும் கொள்கை என்பது ஒரு வழிகாட்டியை போன்ற உந்து சக்தி. அதனால் இந்த கொள்கையை அரசின் ஆவணமாக மட்டுமே பார்க்கக் கூடாது. தனது கொள்கைகளை வடிவமைத்து, அமல்படுத்துவதற்கு முன்பு களப் பணிகளை இந்தியா தயார் செய்கிறது. அதனால் மட்டுமே அந்தக் கொள்கை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு, முன்னேற்றத்திற்கான சாத்திய கூறுகள் ஏற்படுகின்றன. அந்த வரிசையில் தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையும் திடீரென அறிமுகப்படுத்தப்படவில்லை. எட்டு ஆண்டுகள் கடின உழைப்பின் பலனாக அது அமைந்துள்ளது.
உள்கட்டமைப்பு மேம்பாடு, வர்த்தகத்தின் விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கு தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையில் அபரிமிதமான வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்புகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயன்படுத்த வேண்டும். இந்த உறுதிப்பாட்டுடன் மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.