மதிப்பிற்குரிய விருந்தினர்களே,
நண்பர்களே !
வணக்கம்!
இது தனிச்சிறப்பான நிகழ்ச்சி. சுவாமி சித்பவானந்தாவின் வர்ணனையுடன் கூடிய பகவத் கீதை மின்னணு பதிப்பு வெளியிடப்படுகிறது. இப்பணியில் ஈடுபட்ட அனைவரையும் நான் பாராட்டுகிறேன். பாரம்பரியத்தையும், தொழில்நுட்பத்தையும் இணைத்துள்ள இந்த முயற்சிக்கு நன்றி. இளைஞர்களிடையே மின்னணு பதிப்புகள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. ஆகையால், இந்த முயற்சி பகவத் கீதையின் உயர்ந்த சிந்தனைகளுடன் அதிக இளைஞர்களை இணைக்கும்.
நண்பர்களே,
என்றும் நிலையான பகவத் கீதை மற்றும் புகழ்பெற்ற தமிழ் கலாச்சாரத்துக்கு இடையேயான இணைப்பை இந்த மின்னணு பதிப்பு அதிகரிக்கும். இதை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எளிதில் படிக்க முடியும். பல துறைகளில் தமிழர்கள் புதிய உச்சத்துக்கு சென்றுள்ளனர். ஆனாலும், அவர்கள் தங்கள் கலாச்சாரத்தால் பெருமிதம் கொள்கின்றனர். அவர்கள் எங்கு சென்றாலும், தங்களுடன் சிறந்த தமிழ் கலாச்சாரத்தையும் கொண்டு செல்கின்றனர்.
நண்பர்களே,
நான் சவாமி சித்பவானந்தாவை வணங்குகிறேன். இந்தியாவின் மீளுருவாக்கத்துக்கு, அவர் தனது மனம், உடல், இதயம் மற்றும் ஆன்மா என தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவர் வெளிநாட்டில் படிக்க திட்டமிட்டார், ஆனால், விதி அவருக்கு வேறு பல திட்டங்களை வைத்திருந்தது. தெருவோர புத்தகக் கடையில் பார்த்த ‘சுவாமி விவேகானந்தரின் மெட்ராஸ் உரைகள்’ புத்தகம் அவரது வாழ்க்கை பாதையை மாற்றியது. எல்லாவற்றையும் விட நாடு மற்றும் மக்களுக்கு சேவை செய்வது தான் மேலானது என அந்த புத்தகம் அவரை ஊக்குவித்தது.
‘‘சிறந்த மனிதர்கள் என்ன செய்தாலும், அதை பின்பற்றும் படி பலர் ஊக்குவிக்கப்படுகின்றனர்’’ என பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். ஒரு புறம் சுவாமி சித்பவானந்தா, சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டார். மற்றொரு புறம், அவர் தனது உயர்ந்த செயல்களால், உலகை கவர்ந்தார். சுவாமி சித்பவானந்தரின் உன்னதமான பணியை, ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் ஆசிரமம் முன்னோக்கி கொண்டு செல்கிறது. சமூக சேவை, கல்வி மற்றும் சுகாதாரத்தில், அவர்கள் பாராட்டத்தக்க பணியை செய்கின்றனர். ராமகிருஷ்ண தபோவனம் ஆசிரமத்தை நான் பாராட்டுகிறேன், அதன் எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துகிறேன்.
நண்பர்களே,
பகவத் கீதையின் அழகு அதன் ஆழம், பன்முகத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மையில் உள்ளது. கீதையை தாய் என்றும், தான் தடுமாறினால் மடியில் தூக்கி வைத்துக் கொள்ளும் எனவும் ஆச்சார்ய வினோபா பவே கூறினார். மகாத்மா காந்தி, லோக்மான்ய திலகர், மகாகவி சுப்பிரமணிய பாரதி போன்ற மகான்கள் எல்லாம் பகவத் கீதையால் ஈர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள். கீதை நம்மை சிந்திக்க வைக்கிறது. நம்மை கேள்வி கேட்க வைக்கிறது. விவாதத்தை ஊக்குவிக்கிறது. கீதை, நமது மனதை திறந்திருக்க வைக்கிறது. கீதையால் ஈர்க்கப்பட்ட எவரும் எப்போதும் இரக்கமுள்ளவர்களாகவும், ஜனநாயக மனநிலையுடனும் இருப்பர்.
நண்பர்களே,
பகவத் கீதை போன்ற ஒன்று, அமைதியான மற்றும் அழகான சூழலில் வந்திருக்கும் என ஒருவர் நினைக்கலாம். ஆனால், நீங்கள் அனைவரும் அறிந்தபடி, ஒரு மோதலுக்கு இடையே தான், இந்த உலகம் ஒரு அருமையான வாழ்க்கை பாடத்தை பகவத் கீதை வடிவில் பெற்றது.
அறிவின் ஆதாரமாக கீதை உள்ளது. அதிலிருந்து நாம் அனைத்தையும் பெறலாம். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணரின் வார்த்தைகளில் இந்த அறிவு வெளிப்படுவதற்கு என்ன காரணம் என்று நீங்கள் எப்போதாவது நினைத்து பார்த்திருக்கிறீர்களா? இதற்கு சோகம் தான் காரணம். சிந்தனைகளின் பொக்கிஷம் பகவத் கீதை. அது சோகத்திலிருந்து வெற்றியின் பயணத்தை வெளிப்படுத்துகிறது. பகவத் கீதை தோன்றியபோது, மோதல் நிலவியது. சோகம் இருந்தது. தற்போது மனிதகுலம், இதே போன்ற பல மோதல்களையும், சவால்களையும் கடந்து செல்கிறது என பலர் நினைக்கலாம். வாழ்நாளில் ஒரே முறை ஏற்பட்ட உலகளாவிய தொற்றை எதிர்த்து உலகம் போராடிக் கொண்டிருக்கிறது. பொருளாதார மற்றும் சமூக தாக்கங்கள் அதிகளவில் உள்ளன. இதுபோன்ற நேரத்தில், ஸ்ரீமத் பகவத் கீதையில் காட்டப்பட்ட வழி, எப்போதும் பொருத்தமானதாக உள்ளது. மனிதகுலம் சந்திக்கும் சவால்களில் இருந்து மீண்டும் வெற்றி பெறுவதை நோக்கி செல்வதற்கான பலத்தை இது வழங்கும். இது போன்ற பல உதாரணங்களை நாம் இந்தியாவில் பார்த்தோம். கொவிட்-19-க்கு எதிரான நமது மக்களின் போராட்டம், ஊக்கம், தைரியம் ஆகிவற்றக்கு பின்னால், பகவத் கீதை தெரிவித்த விஷயங்கள் உள்ளன என கூற முடியும். தன்னலமற்ற உணர்வு இதில் உள்ளது. ஒருவருக்கு ஒருவர் உதவ நமது மக்கள் சென்றபோது நாம் இதை பார்த்தோம்.
நண்பர்களே,
ஐரோப்பாவின் ‘ஹார்ட்’ இதழில், சுவாரசியமான கட்டுரை ஒன்று கடந்தாண்டு வந்தது. இது ஆக்ஸ்போர்ட் பல்கைலக்கழகம் வெளியிடும் இதயநோய் பிரிவு ஆய்வு இதழ் ஆகும். மற்ற விஷயங்களுக்கு இடையே, இந்த கட்டுரை, கொவிட் தொற்று நேரத்தில் பகவத் கீதை எப்படி மிக பொருத்தமாக இருந்தது என்பது பற்றியும் கூறியது. நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கு சரியான வழிகாட்டி பகவத் கீதை என அதில் கூறப்பட்டிருந்தது. அந்த கட்டுரை, அர்ஜூனனை சுகாதார பணியாளர்களுடனும், மருத்துவமனைகளை வைரசுக்கு எதிரான போரின் போர்களங்களாகவும் ஒப்பிட்டிருந்தது. அச்சம் மற்றும் சவால்களை கடந்து, தங்கள் கடமையை செய்த சுகாதார பணியாளர்களை இது பாராட்டியது.
நண்பர்களே,
பகவத் கீதையின் முக்கியமான தகவல் செயல்பாடு. நம்மை செயலில் ஈடுபடும்படி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். ஏனென்றால், செயல்படாமல் இருப்பதை விட செயல்படுவது சிறந்தது.
உண்மையில், செயல்படாமல் நமது உடலை கூட நம்மால் கவனிக்க முடியாது என அவர் கூறினார். இன்று, 1.3 பில்லியன் இந்திய மக்கள், தங்கள் செயல்பாட்டை முடிவு செய்துள்ளனர். அவர்கள் இந்தியாவை தற்சார்பு இந்தியா ஆக்கப்போகிறார்கள். நீண்ட கால நன்மைக்கு, தற்சார்பு இந்தியா மட்டுமே அனைவருக்கும் நல்லது. தற்சார்பு இந்தியாவின் முக்கிய அம்சம், நமக்கு மட்டும் அல்ல, ஒட்டு மொத்த மனித இனத்துக்கும் வளத்தையும் மதிப்பையும் உருவாக்குவதுதான். தற்சார்பு இந்தியா உலகத்துக்கு நல்லது என நாம் நம்புகிறோம். சமீபத்தில், உலகத்துக்கு மருந்துகள் தேவைப்பட்டபோது, இந்தியா முடிந்தளவு வழங்கியது. நமது விஞ்ஞானிகள் விரைந்து செயல்பட்டு தடுப்பூசியை உருவாக்கினர். இந்திய தடுப்பூசி தற்போது உலகம் முழுவதும் செல்கிறது. மனித குலத்துக்கு உதவவும், நன்மை பயக்கவும் நாம் விரும்புகிறோம். இதைத்தான் கீதை நமக்கு கற்பிக்கிறது.
நண்பர்களே,
எனது இளம் நண்பர்கள், பகவத் கீதையை படிக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். அதன் போதனைகள் முற்றிலும் நடைமுறையுடன் கூடியது மற்றும் தொடர்புடையது.
வேகமான வாழ்க்கையின் நடுவில், கீதை அமைதியான சோலை மற்றும் நிம்மதியை வழங்குகிறது. இது வாழ்க்கையின் பல பரிமாணங்களுக்கான நடைமுறை வழிகாட்டி. கீதையின் பிரபலமான வசனங்களை நாம் ஒருபோதும் மறக்க கூடாது.
இது தோல்வி பயத்திலிருந்து நமது மனதை விடுவித்து, நமது செயலில் கவனம் செலுத்த வைக்கும். அறிவு யோகா பற்றிய அத்தியாயம் உண்மையான அறிவின் முக்கியத்துவத்தை விவரிக்கிறது. பக்தி யோகா, பக்தியின் முக்கியத்துவத்தை நமக்குக் கற்பிக்கிறது. நேர்மறையான மனநிலையை வளர்த்துக்கொள்ள, ஒவ்வொரு அத்தியாயத்திலும் சில விஷயங்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் ஒவ்வொருவரும், சர்வ வல்லமை மிக்க தெய்வீகத்தின் பொறி என்பதை கீதை மீண்டும் வலியுறுத்துகிறது.
இது சுவாமி விவகோனந்தர் கூறிய விஷயம் போல் உள்ளது. பல கடினமான முடிவுகளை எனது இளம் நண்பர்களும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதுபோன்ற சமயங்களில், நான் அர்ஜூனன் இடத்தில் இருந்தால், இந்த குழப்பத்தை எப்படி எதிர்கொள்வேன், என்னை ஸ்ரீ கிருஷ்ணர் என்ன செய்ய சொல்லியிருப்பார் என நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இது அருமையாக வேலை செய்யும். ஏனென்றால், நீங்கள் உங்கள் விருப்பு, வெறுப்பு சூழலிலிருந்து விடுபட்டு, பகவத் கீதையை பார்க்கத் தொடங்குவீர்கள்.
இது உங்களை சரியான இடத்துக்கு கொண்டு செல்லும் மற்றும் கடினமான முடிவெடுக்க எப்போதும் உதவும். சுவாமி சித்பவானந்தா வர்ணனையுடன் கூடிய இந்த மின்னணு பதிப்பு வெளியீட்டுக்கு நான் மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
வணக்கம்.