அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, எனது அமைச்சரவை சகா திரு அனுராக் தாக்கூர் அவர்களே, அசாம் அரசின் அமைச்சர்களே, சிறப்பு விருந்தினர்களே, நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள திறமையான இளம் விளையாட்டு வீரர்களே,
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் உங்கள் அனைவருடனும் இணைவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விளையாட்டுப் போட்டிகள் வடகிழக்கின் ஏழு மாநிலங்களில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெறுகின்றன. வண்ணத்துப்பூச்சியாக சித்தரிக்கப்படும் அஷ்டலட்சுமி இந்த விளையாட்டுகளின் சின்னம், வடகிழக்கு மாநிலங்களின் துடிப்பான உணர்வின் அடையாளமாகத் திகழ்கிறது. கடினமாக விளையாடுங்கள், வெற்றிக்காக பாடுபடுங்கள், தோல்வியில் கூட, கற்றுக்கொள்ள மதிப்புமிக்க பாடங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நண்பர்களே,
வடக்கு முதல் தெற்கு வரையிலும், கிழக்கு முதல் மேற்கு வரையிலும் நாடு முழுவதிலும் விளையாட்டு தொடர்பான நிகழ்வுகள் அதிகரித்து வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று, இங்கே வடகிழக்கில் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளை நாம் காண்கிறோம். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் அசாம் அரசு மற்றும் பிற மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்று விளையாட்டு குறித்த சமூக அணுகுமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒருவருக்கு அறிமுகப்படுத்தும்போது விளையாட்டில் அவர்களின் சாதனைகளை முன்னிலைப்படுத்த பெரும்பாலும் தயங்கினர். விளையாட்டுச் சாதனைகளை வலியுறுத்துவது கல்வியில் கவனம் செலுத்தாததைக் குறிக்கும் என்ற கவலை இருந்தது. இருப்பினும், இந்த முன்னோக்கு சாதகமாக மாறி வருகிறது. இப்போதெல்லாம், பெற்றோர்கள் தங்கள் குழந்தை மாநில அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றபோது அல்லது சர்வதேச அளவில் பதக்கம் வென்றபோது பெருமையுடன் குறிப்பிடுகிறார்கள்.
நண்பர்களே,
விளையாட்டை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், அதைக் கொண்டாடவும் வேண்டியது அவசியம். இந்தப் பொறுப்பு விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்துக்கும் உள்ளது. கல்வியில் சாதனை படைத்தவர்கள் மதிக்கப்படுவது போல, விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களும் மதிக்கப்பட வேண்டும்.
நண்பர்களே,
பயிற்சி முதல் கல்வி உதவித்தொகை வரை, நமது நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விளையாட்டுக்கு ரூ.3500 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. 2019-ம் ஆண்டில், நாம் 4 பதக்கங்களை வென்றோம். இருப்பினும், 2023-ல், நமது இளைஞர்கள் பெருமையுடன் 26 பதக்கங்களை வென்றனர்.
நண்பர்களே,
கல்வி நம்மை இந்த உலகிற்கு தயார்படுத்தும் அதே வேளையில், விளையாட்டு அதன் சவால்களை எதிர்கொள்ளும் தைரியத்தை ஏற்படுத்துகிறது என்பதும் உண்மை.
நண்பர்களே,
இந்த நிகழ்வில் நீங்கள் பெறும் அனுபவம் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாததாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையுடன், உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகவும் நன்றி.