Quoteநமது கலாச்சாரத்தில் சேவைதான் மகத்தான மதமாகக் கருதப்படுகிறது -பக்தி, நம்பிக்கை, வழிபாட்டை விட சேவைக்கு உயர்ந்த இடம் அளிக்கப்பட்டுள்ளது: பிரதமர்
Quoteசமுதாயத்திலும் நாட்டிலும் பெரிய பிரச்சினைகளை தீர்க்கும் திறன் சேவைக்கு உள்ளது: பிரதமர்
Quoteஜனவரியில் வளர்ச்சி அடைந்த பாரத இளம் தலைவர்கள் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்படும் - இதில் நமது இளைஞர்கள் வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கான யோசனைகளை வழங்குவார்கள்: பிரதமர்
Quoteஇந்த மகத்தான தெய்வீக விழாவிற்காக பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் ஸ்வாமி மகராஜை வாழ்த்துவதாக அவர் கூறினார்.

ஜெய் ஸ்வாமிநாராயண்!

பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் ஸ்வாமி மகராஜ் அவர்களே, மதிப்பிற்குரிய முனிவர்களே, சத்சங்க குடும்பத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களே, புகழ்பெற்ற பிரமுகர்களே, தாய்மார்களே, தாய்மார்களே!

வணக்கம்,

கார்யாகர சுவர்ண மஹோத்சவத்தின் புனித சந்தர்ப்பத்தில், நான் பகவான் சுவாமிநாராயணனின் பாதங்களில் பணிவுடன் வணங்குகிறேன். தெய்வீக குரு ஹரி பிரகத் பிரம்மத்தின் உருவமாக விளங்கிய பிரமுக் ஸ்வாமி மகராஜின் 103-வது பிறந்த நாளும் இன்று வந்துள்ளது. பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் ஸ்வாமி மகராஜின் அயராத முயற்சிகள், அர்ப்பணிப்பின் மூலம் பகவான் சுவாமிநாராயணனின் போதனைகளும் பிரமுக் ஸ்வாமி மகாராஜின் தீர்மானங்களும் இன்று நிறைவேற்றப்படுகின்றன. ஒரு லட்சம் தன்னார்வலர்கள், இளைஞர்கள், குழந்தைகள் பங்கேற்கும் இந்த அற்புதமான கலாச்சார நிகழ்வாக இது திகழ்கிறது. உங்களிடையே என்னால் நேரடியாக வர முடியாவிட்டாலும், இந்த நிகழ்வின் துடிப்பையும் ஆற்றலையும் என் இதயத்திற்குள் ஆழமாக உணர முடிகிறது. இத்தகைய மகத்தான தெய்வீக கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்த பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் ஸ்வாமி மகராஜுக்கும் அனைத்து மதிப்பிற்குரிய துறவிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆழ்ந்த மரியாதையுடன் அவர்களை வணங்குகிறேன்.

நண்பர்களே,

அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட சேவையின் 50 ஆண்டுகால பயணத்தில் கார்யாகர் சுவர்ண மகோத்சவம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, தன்னார்வலர்களை பதிவு செய்து சேவை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் முன்முயற்சி தொடங்கப்பட்டது. அந்த நேரத்தில் அது கேள்விப்படாத ஒன்று. இன்று, லட்சக்கணக்கான பிஏபிஎஸ் தன்னார்வலர்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சேவையில் ஈடுபட்டிருப்பதைக் காண்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எந்தவொரு நிறுவனத்திற்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்த சாதனைக்காக நான் உங்களை முழு மனதுடன் வாழ்த்துகிறேன். உங்கள் தொடர்ச்சியான வெற்றிக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

|

நண்பர்களே,

கார்யாகர் சுவர்ண மஹோத்சவம் என்பது பகவான் சுவாமிநாராயணனின் போதனைகளின் கொண்டாட்டமாகும். இது கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றிய பல  தன்னலமற்ற சேவைக்கு மரியாதை செலுத்துகிறது. பிஏபிஎஸ்-சின் சேவை முயற்சிகளை நெருக்கமாகக் கண்டதையும், அவர்களுடன் இணைந்திருப்பதையும் எனது பெரிய அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். பூஜ் பூகம்பத்தால் ஏற்பட்ட பேரழிவின் போது, நரநாராயண் நகர் கிராமத்தை புனரமைப்பது, கேரளாவில் வெள்ளத்தின் போது நிவாரணம் வழங்குவது, உத்தரகண்டில் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட வேதனையை நிவர்த்தி செய்வது, கொவிட் -19 போன்ற சமீபத்திய உலகளாவிய தொற்றுநோயின் சவால்களைச் சமாளிப்பது, அனைத்திலும் பிஏபிஎஸ் தன்னார்வ சேவகர்கள் எப்போதும் முன்னணியில் நிற்கிறார்கள். குடும்ப உணர்வு, ஆழ்ந்த இரக்கத்துடன், அவர்கள் தேவைப்படும் இடங்களில் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர். கொவிட்-19 நெருக்கடியின் போது பிஏபிஎஸ் கோயில்கள் சேவை மையங்களாக மாற்றப்பட்டது அவர்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு.

பரவலாக அறியப்படாத மற்றொரு ஊக்கமளிக்கும் நிகழ்வை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உக்ரைனில் போர் தீவிரமடைந்தபோது, மோதல் பகுதியில் சிக்கியுள்ள இந்தியர்களை வெளியேற்ற இந்திய அரசு உடனடியாக முடிவெடுத்தது. இந்த முயற்சியில் பிஏபிஎஸ் சேவகர்கள் அங்கு போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவைப்படுபவர்களுக்கு விலைமதிப்பற்ற உதவியை வழங்கினர்.

பிஏபிஎஸ்-சின் இந்த அசாதாரண வலிமையும் உலகளாவிய அளவில் மனிதகுலத்திற்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. ஆகையால், கார்யாகர சுவர்ண மஹோத்சவத்தை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, பிஏபிஎஸ் தன்னார்வலர்கள் தங்கள் சேவையின் மூலம் உலகளவில் வாழ்க்கையை மாற்றுகிறார்கள். எண்ணற்ற ஆத்மாக்களைத் தொடுகிறார்கள். சமூகத்தின் விளிம்பில் உள்ளவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறார்கள். அவர்கள் பலருக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறார்கள். அவர்கள் மிகுந்த மரியாதைக்குத் தகுதியானவர்கள்.

 

|

நண்பர்களே,

பிஏபிஎஸ் மேற்கொண்டுள்ள பணிகள் உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கையும் அந்தஸ்தையும் கணிசமாக வலுப்படுத்துகின்றன. 28 நாடுகளில் பகவான் சுவாமிநாராயணனின் 1,800 கோயில்கள், உலகளவில் 21,000-க்கும் மேற்பட்ட ஆன்மீக மையங்கள், ஏராளமான சேவை திட்டங்களுடன், பிஏபிஎஸ் மூலம் பாரதத்தின் ஆன்மீக பாரம்பரிய அடையாளத்தின் பிரதிபலிப்பை உலகம் காண்கிறது. இந்த கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. உலகின் பழமையான நாகரிகத்தை உள்ளடக்கிய பாரதத்தின் கலாச்சார பிரதிநிதித்துவங்களாகும். இந்த கோயில்களுடன் தொடர்பு கொள்ளும் எவரும் தவிர்க்க முடியாமல் பாரதத்தின் வளமான கலாச்சாரம், ஆன்மீகத்தால் ஈர்க்கப்படுகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பாக, அபுதாபியில் உள்ள பகவான் சுவாமிநாராயண் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த வரலாற்று நிகழ்வில் பங்கேற்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்த கோயிலும் விழாவும் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. இது பாரதத்தின் ஆன்மீக பாரம்பரியம், கலாச்சார பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது. இத்தகைய முயற்சிகள் பாரதத்தின் கலாச்சார மகத்துவத்தையும் அதன் மனித தாராள மனப்பான்மையையும் எடுத்துக்காட்டுகின்றன. இதற்காக, இந்த முயற்சிகளுக்கு பங்களித்த அனைத்து அர்ப்பணிப்பு மிக்க தோழர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இத்தகைய மகத்தான தீர்மானங்களை பிஏபிஎஸ் எளிதாக நிறைவேற்றுவது பகவான் சுவாமிநாராயணன், சகஜானந்த சுவாமிகளின் தெய்வீக தவத்திற்கு ஒரு சான்றாகும். அவரது கருணை ஒவ்வொரு உயிருக்கும் துன்பப்படும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் உண்டு. அவரது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் மனித குலத்தின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அவர் நிறுவிய மதிப்புகள் பிஏபிஎஸ் மூலம் தொடர்ந்து பிரகாசிக்கிறது. உலகளவில் ஒளியையும் நம்பிக்கையையும் பரப்புகிறது.

நண்பர்களே,

எனது குழந்தைப் பருவத்திலிருந்தே பிஏபிஎஸ்-சுடனும் பகவான் சுவாமிநாராயணனுடனும் இணைந்திருப்பதை எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். அத்தகைய உன்னதமான பாரம்பரியத்துடனான இந்த தொடர்பு என் வாழ்க்கையில் ஒரு வழிகாட்டும் சக்தியாக இருந்தது. பிரமுக் ஸ்வாமி மகராஜிடமிருந்து நான் பெற்ற அன்பும் பாசமும் என் வாழ்க்கையின் மிகப்பெரிய பொக்கிஷங்கள். அவருடனான எண்ணற்ற தனிப்பட்ட தருணங்கள் எனது பயணத்திலிருந்து பிரிக்க முடியாதவையாகிவிட்டன. நான் பொது வாழ்வில் இல்லாத காலத்திலிருந்து, நான் முதலமைச்சராக இருந்த காலத்திலும், பிரதமரான பிறகும், அவரது வழிகாட்டுதல் எனக்கு உதவியது. பொது நலனுக்கான ஒவ்வொரு முயற்சியிலும் அவரது ஆசிர்வாதம் எப்போதும் எனக்கு ஆதரவாக உள்ளது.

நண்பர்களே,

நமது கலாச்சாரத்தில் சேவையே மிக உயர்ந்த அறமாகக் கருதப்படுகிறது. பக்தி, நம்பிக்கை, வழிபாட்டை விட சேவைக்கு உயர்ந்த இடம் உண்டு. பொது சேவை என்பது தெய்வீக சேவைக்கு சமம் என்று அடிக்கடி கூறப்படுகிறது. உண்மையான சேவை என்பது சுயநலமற்றது. சொந்த ஆதாயம் அல்லது அங்கீகாரம் எதிர்பார்க்காதது.்இந்த சேவை ஒரு அமைப்பு அல்லது இயக்கத்தின் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான மக்களால் கூட்டாக மேற்கொள்ளப்படும்போது, அது அசாதாரணமான முடிவுகளை அடைகிறது. இத்தகைய நிறுவனமயமாக்கப்பட்ட சேவை சமூகத்தின், தேசத்தின் மிக முக்கியமான சவால்களை எதிர்கொள்ளும் சக்தியைக் கொண்டுள்ளது. இது எண்ணற்ற சமூகத் தீமைகளை ஒழித்து, எண்ணற்ற தனிநபர்களை ஒரு பொதுவான இலக்கை நோக்கி அணிதிரட்டி, சமூகத்திற்கும் தேசத்திற்கும் மகத்தான பலத்தை உருவாக்கும்.

 

|

இன்று, வளர்ந்த நாடாக மாறுவதற்கான தொலைநோக்கு பார்வையை நோக்கி பாரதம் முன்னேறி வரும் நிலையில், அனைத்து துறைகளிலும் ஒற்றுமையையும் கூட்டு முயற்சியின் உணர்வையும் நாம் காண்கிறோம். தூய்மை இந்தியா இயக்கமாகட்டும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதாகட்டும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வாகட்டும், பெண் குழந்தைகளின் கல்வியாகட்டும், பழங்குடியின சமூகங்களின் மேம்பாடு ஆகட்டும், தேச நிர்மாணப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் முன்னோக்கி அடியெடுத்து வைக்கிறார்கள். 


இளம் சிந்தனையாளர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில், 'வளர்ச்சி அடைந்த பாழதம் இளம் தலைவர்கள் உரையாடல்' வரும் ஜனவரியில் நடைபெறும். இந்த தளம் நமது இளைஞர்களை வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கான தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், இந்த இலக்கிற்கு அவர்களின் பங்களிப்பை எடுத்துக் காட்டவும் அனுமதிக்கும். இளம் சேவகர்களாகிய நீங்கள் அனைவரும் இந்த முயற்சியில் பங்கேற்க வேண்டும்.

நண்பர்களே,

வணக்கத்திற்குரிய பிரமுக் ஸ்வாமி மகராஜ் பாரதத்தின் குடும்பம் சார்ந்த கலாச்சாரத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்தார். கர் சபா போன்ற முயற்சிகள் மூலம், சமூகத்தில் கூட்டுக் குடும்பம் என்ற கருத்தாக்கத்தை அவர் வலுப்படுத்தினார். இந்த இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வது நமது பொறுப்பாகும். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான லட்சிய இலக்கை நோக்கி பாரதம் முன்னேறுகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் பயணம் முக்கியமானது.

பகவான் சுவாமிநாராயணனின் ஆசீர்வாதத்துடன், பிஏபிஎஸ் சேவகர்கள் தலைமையிலான இந்த சேவை இயக்கம் அதே அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தொடர்ந்து முன்னேறும் என்று நான் நம்புகிறேன். நான் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் இந்த விழாவை முன்னிட்டு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெய் ஸ்வாமிநாராயண்!

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
LIC posts 14.6% growth in June individual premium income

Media Coverage

LIC posts 14.6% growth in June individual premium income
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 10, 2025
July 10, 2025

From Gaganyaan to UPI – PM Modi’s India Redefines Global Innovation and Cooperation