ஹர ஹர மகாதேவா! ஹர ஹர மகாதேவா!
உடனிருக்கும் உத்தரப் பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல் அவர்களே, துடிப்பான மற்றும் புகழ்பெற்ற முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, இந்தியாவிற்கான ஜப்பான் தூதர் திரு சுசுகி சதோஷி அவர்களே, எனது நண்பர் திரு ராதா மோகன் சிங் அவர்களே, காசி நகரத்தின் அறிவார்ந்த பொதுமக்கள் மற்றும் மதிப்பிற்குரிய நண்பர்களே!
இன்று சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. தற்போது ருத்ராக்ஷ் மாநாட்டு மையம்! காசி நகரின் பழமையான பிரம்மாண்டம், நவீன வடிவத்தில் மீண்டும் உருவாகியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் உலக நாடுகள் ஸ்தம்பித்த நிலையில், காசி நகரம் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, ஒழுக்கத்தைக் கடைப்பிடித்த போதும், இங்கு படைப்பாற்றலும் வளர்ச்சியும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இந்த படைப்புத்திறன், ஆற்றலின் விளைவுதான் “சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையம்- ருத்ராக்ஷ்”. இந்த சாதனை நிகழ காரணமாக இருந்த அனைவருக்கும், காசி நகரத்தின் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியாவின் சிறந்த நட்பு நாடான ஜப்பான், குறிப்பாக அந்நாட்டு மக்கள், பிரதமர் திரு சுகா யோஷிஹிடே மற்றும் தூதர் திரு சுசுகி சதோஷி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். தற்போது தான் அந்நாட்டு பிரதமரின் காணொளி செய்தியை நாம் பார்த்தோம். அவரது நட்பு ரீதியான நடவடிக்கைகளால் காசி நகருக்கு இந்தப் பரிசு கிடைத்துள்ளது. பிரதமர் திரு சுகா யோஷிஹிடே அவர்கள், அப்போது முதன்மை அமைச்சரவை செயலாளராக பொறுப்பு வகித்தார். அப்போது முதல் பிரதமர் வரை இந்தத் திட்டத்தில் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் அவர் பங்கேற்றுள்ளார். இந்தியா மீதான அவரது அன்பிற்கு நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நன்றி கடன்பட்டுள்ளனர்.
நண்பர்களே,
இன்றைய நிகழ்வுடன் தொடர்புடைய மேலும் ஒருவரும் இருக்கிறார், அவரது பெயரையும் குறிப்பிட மறக்க இயலாது. ஜப்பானைச் சேர்ந்த எனது மற்றொரு நண்பர்- திரு ஷின்சோ அபே. பிரதமராக திரு ஷின்சோ அபே அவர்கள் காசிக்கு வந்திருந்தபோது, ருத்ராக்ஷ் பற்றிய எண்ணம் குறித்து நான் மேற்கொண்ட நெடிய விவாதத்தை நினைவுக்கூர்கிறேன். இந்த எண்ணத்தை செயல்படுத்துவது தொடர்பாக அவர் உடனடியாக தமது அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். ஜப்பான் நாட்டின் கலாச்சாரம் பற்றி நாம் நன்கு அறிந்துள்ளோம். துல்லியமான செயல்பாடு மற்றும் திட்டத்தை வகுப்பதே அவர்களது சிறப்பம்சம். அதன்பிறகு பணிகள் தொடங்கி இன்று இந்த மாபெரும் கட்டிடம் காசி நகருக்கு அழகு சேர்க்கிறது. நவீன வடிவமைப்புடன் கலாச்சார ஒளியையும் இந்தக் கட்டிடம் பெற்றுள்ளது. இந்திய- ஜப்பான் உறவுகளை இணைப்பதுடன், இது, வருங்கால சாத்தியக்கூறுகளுக்கான வாய்ப்புகளையும் வழங்கும். இரு நாடுகளின் உறவுகளுக்கு இடையேயான ஒற்றுமை, மக்களிடையேயான இணைப்பு குறித்து எனது ஜப்பான் பயணத்தின் போது நாங்கள் பேசினோம். இரு நாடுகளின் நடவடிக்கைகளின் காரணமாக வளர்ச்சியுடன் இந்த உறவில் இன்று ஒரு புதிய அத்தியாயம் உருவாவதை எண்ணிக் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். காசியின் ருத்ராக்ஷைப் போல ஜப்பானின் ஜென் தோட்டம் மற்றும் கைசன் அகாடமி ஆகியவை குஜராத்தில் ஒரு சில வாரங்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டன. இந்தியாவிற்கு ஜப்பான் அளிக்கும் மலர் மாலையாக ருத்ராக்ஷ் திகழ்வதை போல ஜென் தோட்டமும் இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர அன்பை பரப்புகிறது. அதேபோல கேந்திர துறை அல்லது பொருளாதார துறைகளிலும் இந்தியாவின் மிகுந்த நம்பகத்தன்மை வாய்ந்த நட்பு நாடுகளுள் ஒன்றாக ஜப்பான் விளங்குகிறது. இந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தில் நமது நட்புறவு இயற்கையான கூட்டணியாக கருதப்படுகிறது. நவீன உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த பல்வேறு முக்கியமான மற்றும் மிகப்பெரும் திட்டங்களுக்கு ஜப்பான் நமது கூட்டாளியாக செயல்படுகிறது. ஜப்பான் நாட்டின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் மும்பை-அகமதாபாத் அதிவிரைவு ரயில், தில்லி-மும்பை தொழில் வழித்தடம், பிரத்தியேக சரக்கு வழித்தடம் உள்ளிட்ட திட்டங்கள் புதிய இந்தியாவிற்கு மேலும் வலு சேர்க்க உள்ளன.
நமது வளர்ச்சி, நம் மகிழ்ச்சியுடன் இணைந்ததாக இருக்க வேண்டும் என்று இந்தியாவும் ஜப்பானும் கருதுகிறது. அனைத்தையும் உள்ளடக்கியதாக, அனைவருக்குமானதாக இது அமைய வேண்டும்.
பரஸ்பர அன்பு, கலை மற்றும் கலாச்சாரத்தின் வாயிலாக உலக நாடுகளை இணைக்கும் பாலமாக இந்த சர்வதேச மாநாட்டு மையம்- ருத்ராக்ஷ் செயல்படும். சிவன் முதல் சாரநாத்தில் உள்ள பகவான் புத்தர் வரை பல நூற்றாண்டுகளாக ஆன்மீகத்தையும் கலை மற்றும் கலாச்சாரத்தையும் ஒரு பொக்கிஷமாக காசி போற்றி வருகிறது. பாடல்கள், இசை மற்றும் கலை ஆகியவை எனது நகரமான வாரணாசியில் நிரம்பியுள்ளன. கங்கை படித்துறைகளில் ஏராளமான கலை வடிவங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன, அறிவுசார் திறன் உச்சத்தை எட்டியுள்ளது, மனித சமூகம் சம்பந்தமான ஏராளமான தீவிர சிந்தனைகளும் எண்ணங்களும் இந்த மண்ணில் தோன்றியுள்ளன. அதனால் தான் பாடல்- இசை, மதம்-ஆன்மீகம் மற்றும் அறிவு- அறிவியலின் மிகப்பெரிய சர்வதேச முனையமாக வாரணாசி மாறியுள்ளது.
நண்பர்களே,
அறிவு சார்ந்த விவாதங்கள், மிகப்பெரிய கருத்தரங்கங்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு வாரணாசி மிகச் சரியான இடமாகும். உலகம் முழுவதும் உள்ள மக்கள் இங்கு வரவும், இந்தப்பகுதியில் தங்கவும் ஆர்வமாக உள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் இவ்வாறான நிகழ்வுகளுக்கு ஏற்ற வசதிகள் அமைந்தால், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால், இயற்கையாகவே உலகம் முழுவதும் உள்ள கலைத் துறையைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வாரணாசிக்கு முன்னுரிமை வழங்குவார்கள். வரும் நாட்களில் இந்த எண்ணத்தை ருத்ராக்ஷ் நிறைவேற்றுவதோடு, கலாச்சார பரிமாற்றத்திற்கான மிகப்பெரிய மையமாக நாடு முன்னேறும். 1200 பேர் அமரும் வகையில் ஓர் மாநாட்டு மையமும், கூட்ட அரங்கும் இதில் இடம்பெற்றுள்ளன. வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளுடன் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான சிறப்பு ஏற்பாடுகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன. கடந்த 6-7 ஆண்டுகளில் வாரணாசியின் கைவினை மற்றும் கலைப்பொருட்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் வாரணாசி பட்டு மற்றும் வாரணாசி கலைப் பொருட்கள் புதிய அடையாளத்தை பெற்று வருவதுடன் இந்தப்பகுதியில் வர்த்தகமும் வளர்ச்சியடைந்து வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு ருத்ராக்ஷ் உதவிகரமாக இருக்கும். வர்த்தக நடவடிக்கைகளிலும் இதன் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தலாம்.
நண்பர்களே,
காசி என்பது சிவன்தான். கடந்த ஏழு ஆண்டுகளில் காசியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகையில் ருத்ராக்ஷ் இல்லாமல் இந்தப் பணிகள் எவ்வாறு நிறைவடையும்? தற்போது இந்த ருத்ராக்ஷை காசி நகரம் அணிந்திருப்பதால், காசியின் வளர்ச்சிப்பணிகள் மேலும் விரிவடைந்து அதன் அழகும் மிளிரும். இனி இது காசி மக்களின் பொறுப்பு. ருத்ராக்ஷின் ஆற்றலை முழுவதும் பயன்படுத்திக் கொள்ளுமாறு குறிப்பாக உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
காசி நகரின் கலாச்சார அழகு இந்தப் பகுதியின் திறமைகளுடன் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு நடைபெறும்போது நாடு முழுவதையும், ஒட்டுமொத்த உலகையும் காசியுடன் நீங்கள் இணைப்பீர்கள்.
இந்த மையம் முழு பயன்பாட்டிற்கு வந்த பிறகு இதன் உதவியால் இந்திய- ஜப்பான் உறவும் புதிய அடையாளத்தைப் பெறும். மகாதேவரின் ஆசியுடன் இந்த மையம் வரும் நாட்களில் காசி நகரின் புதிய அடையாளமாக உருவாகும் என்பதிலும் காசியின் வளர்ச்சிக்கு புதிய உந்துசக்தியாக திகழும் என்பதிலும் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். ஜப்பான் அரசு மற்றும் அந்நாட்டு பிரதமருக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். கொரோனா நெறிமுறைகள் அனைத்தையும் தொடர்ந்து கடைப்பிடியுங்கள்.
மிக்க நன்றி! ஹர ஹர மகாதேவா!