பீகார் ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர் அவர்களே, இந்த மாநிலத்தின் விடாமுயற்சியுள்ள முதலமைச்சர் திரு நிதீஷ் குமார் அவர்களே, நமது வெளியுறவுத் துறை அமைச்சர் திரு எஸ் ஜெய்சங்கர் அவர்களே, வெளியுறவுத் துறை இணையமைச்சர் திரு பபித்ரா அவர்களே, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களே மற்றும் தூதர்களே, நாளந்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இந்நிகழ்ச்சியில் குழுமியிருக்கும் அனைத்து நண்பர்களே!
மூன்றாவது முறையாக பதவியேற்ற முதல் 10 நாட்களுக்குள், நாளந்தாவுக்கு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இது உண்மையில் எனக்கு கிடைத்த நல்வாய்ப்பு. பாரதத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கான ஒரு நல்ல அறிகுறியாக இதைப் பார்க்கிறேன். நாளந்தா என்பது வெறும் பெயர் மட்டுமல்ல. நாளந்தா என்பது ஒரு அடையாளம், ஒரு மரியாதை. நாளந்தா என்பது ஒரு மதிப்பு, ஒரு மந்திரம், ஒரு பெருமிதம், ஒரு கதை. புத்தகங்கள் நெருப்பில் எரிந்தாலும் அறிவை அணைக்க முடியாது என்ற உண்மையை நாளந்தா வெளிப்படுத்துகிறது. நாளந்தாவின் அழிவு பாரதத்தை இருளால் நிரப்பியது. இப்போது, அதன் மறுசீரமைப்பு பாரதத்தின் பொற்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
நண்பர்களே,
நாளந்தாவின் புராதன இடிபாடுகளுக்கு அருகில் ஏற்பட்ட மறுமலர்ச்சி, இந்த புதிய வளாகம், பாரதத்தின் திறன்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும். வலுவான மனித விழுமியங்களின் மீது கட்டப்பட்ட நாடுகளுக்கு, வரலாற்றை எவ்வாறு புதுப்பிப்பது மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பது என்று தெரியும் என்பதை நாளந்தா நிரூபிக்கும். நண்பர்களே, நாளந்தா என்பது பாரதத்தின் கடந்த காலத்தின் மறுமலர்ச்சி மட்டுமல்ல. இது உலகின் பல நாடுகளின், குறிப்பாக ஆசியாவில் உள்ள பல நாடுகளின் பாரம்பரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு பல்கலைக்கழக வளாகத்தின் திறப்பு விழாவில் பல நாடுகள் கலந்து கொண்டது முன்னெப்போதும் இல்லாதது. நாளந்தா பல்கலைக்கழகத்தின் மறுகட்டுமானத்தில் நமது பங்குதாரர் நாடுகளும் பங்கேற்றுள்ளன. இந்தத் தருணத்தில், பாரதத்தின் அனைத்து நட்பு நாடுகளுக்கும், உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பீகார் மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
நாளந்தா ஒரு காலத்தில் பாரதத்தின் பாரம்பரியம் மற்றும் அடையாளத்தின் துடிப்பான மையமாக இருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதுதான் கல்வி குறித்த பாரதத்தின் பார்வை. கல்வி என்பது எல்லைகளைக் கடந்தது மற்றும் லாபம் மற்றும் இழப்பு என்ற கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டது. கல்விதான் நம்மை வடிவமைக்கிறது, நமக்கு கருத்துக்களைத் தருகிறது, அவற்றை வடிவமைக்கிறது. பண்டைய நாளந்தாவில், குழந்தைகள் அவர்களின் அடையாளம் அல்லது தேசியத்தின் அடிப்படையில் அல்லாமல் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு நாட்டிலிருந்தும், ஒவ்வொரு வர்க்கத்திலிருந்தும் இளைஞர்கள் இங்கு வந்தனர். நாளந்தா பல்கலைக்கழகத்தின் இந்தப் புதிய வளாகத்தில் அந்தப் பண்டைய அமைப்பை நவீன வடிவில் நாம் பலப்படுத்த வேண்டும். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலிருந்து மாணவர்கள் இங்கு வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாளந்தாவில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இது 'வசுதைவ குடும்பகம்' (உலகம் ஒரே குடும்பம்) என்ற ஆன்மாவின் அழகான அடையாளமாகும்.
நண்பர்களே,
நாளந்தா பல்கலைக்கழகம் வரும் காலங்களில் நமது கலாச்சார பரிமாற்றத்திற்கான முக்கிய மையமாக மீண்டும் ஒருமுறை மாறும் என்று நான் நம்புகிறேன். பாரதம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கலைப்படைப்புகளை ஆவணப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அளவு பணிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. பொது ஆவணக்காப்பக வள மையம் ஒன்றும் இங்கு நிறுவப்பட்டுள்ளது. ஆசியான் – இந்தியா பல்கலைக்கழக வலைப்பின்னலை உருவாக்கும் முயற்சியில் நாளந்தா பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில், உலகின் பல முன்னணி நிறுவனங்கள் இங்கு ஒன்றிணைந்துள்ளன. 21 ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்று அழைக்கப்படும் இந்த நேரத்தில், இந்த கூட்டு முயற்சிகள் நமது பகிரப்பட்ட முன்னேற்றத்திற்கு புதிய சக்தியை அளிக்கும்.
நண்பர்களே,
பாரதத்தில் கல்வி என்பது மனிதகுலத்திற்கு பங்களிக்கும் ஒரு வழிமுறையாக கருதப்படுகிறது. நாம் கற்றுக்கொள்கிறோம், அதனால் நம் அறிவை மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்த முடியும். பாருங்கள், இன்னும் இரண்டு நாட்கள் கழித்து, ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று சர்வதேச யோகக்கலை தினம் வரவிருக்கிறது. இன்று பாரதத்தில் நூற்றுக்கணக்கான யோக வடிவங்கள் உள்ளன. நம் ஞானிகள் இதைப் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்திருப்பார்கள்! ஆனால், யோகா மீது தனித்தன்மை கொண்டவர்கள் என்று யாரும் உரிமை கொண்டாடவில்லை. இன்று, ஒட்டுமொத்த உலகமும் யோகாவை ஏற்றுக்கொள்கிறது, யோகா தினம் உலகளாவிய கொண்டாட்டமாக மாறியுள்ளது. நமது ஆயுர்வேதத்தை உலகம் முழுவதுடனும் பகிர்ந்து கொண்டுள்ளோம். இன்று, ஆயுர்வேதம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான ஆதாரமாகக் காணப்படுகிறது. நீடித்த வாழ்க்கை முறை மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான மற்றொரு உதாரணம் நம் முன் உள்ளது. பல நூற்றாண்டுகளாக, பாரதம் ஒரு மாதிரியாக வாழ்ந்து வருகிறது. சுற்றுச்சூழலை எங்களுடன் எடுத்துச் செல்லும்போது நாங்கள் முன்னேறியுள்ளோம். அந்த அனுபவங்களின் அடிப்படையில், மிஷன் லைஃப் போன்ற ஒரு மனிதாபிமான பார்வையை பாரதம் உலகிற்கு வழங்கியுள்ளது. இன்று, சர்வதேச சூரியசக்தி கூட்டணி போன்ற தளங்கள் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான நம்பிக்கையாக மாறி வருகின்றன. இந்த நாளந்தா பல்கலைக்கழக வளாகமும் இந்த உணர்வை முன்னெடுத்துச் செல்கிறது.
நண்பர்களே,
கல்வி வளரும் போது, பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் வேர்களும், வலுவடைகின்றன. நாம் வளர்ந்த நாடுகளைப் பார்த்தோமானால், அவை கல்வித் தலைவர்களாக மாறியபோது பொருளாதார மற்றும் கலாச்சாரத் தலைவர்களாக மாறியதைக் காணலாம். இன்று, உலகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் மற்றும் புத்திசாலித்தனமான மனங்கள் அந்த நாடுகளுக்குச் சென்று படிக்க விரும்புகின்றன. ஒரு காலத்தில் நம்ம நாளந்தாவிலும், விக்ரம்ஷீலாவிலும் இப்படித்தான் இருந்துச்சு. எனவே, பாரதம் கல்வியில் முன்னணியில் இருந்த போது, அதன் பொருளாதார சக்தியும் புதிய உயரங்களை எட்டியது தற்செயல் நிகழ்வு அல்ல. எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் இது ஒரு அடிப்படை வரைபடமாகும். அதனால்தான் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி செயல்படும் பாரத், தனது கல்வித் துறையை இந்த நோக்கத்திற்காக மாற்றி வருகிறது. பாரதம் உலகிற்கு கல்வி மற்றும் அறிவின் மையமாக மாற வேண்டும் என்பதே எனது நோக்கம். உலகளவில் மிக முக்கியமான அறிவு மையமாக பாரதம் மீண்டும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே எனது நோக்கம். இதற்காக, பாரதம் தனது மாணவர்களை மிக இளம் வயதிலிருந்தே புதுமை உணர்வுடன் இணைத்து வருகிறது. இன்று, அடல் டிங்கரிங் ஆய்வகங்களில் சமீபத்திய தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். மறுபுறம், சந்திரயான் மற்றும் ககன்யான் போன்ற திட்டங்கள் அறிவியல் மீதான மாணவர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகின்றன. புதுமைகளை ஊக்குவிப்பதற்காக ஒரு தசாப்தத்திற்கு முன்பு ஸ்டார்ட்-அப் இந்தியா இயக்கத்தை பாரதம் தொடங்கியது. அந்த நேரத்தில், நாட்டில் சில நூறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று, இந்தியாவில் 130,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. முன்பை விட இப்போது பாரதம் சாதனை எண்ணிக்கையிலான காப்புரிமைகளை தாக்கல் செய்து வருகிறது, ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முடிந்தவரை பல வாய்ப்புகளை வழங்குவதில் எங்கள் கவனம் உள்ளது. இதற்காக, ஒரு லட்சம் கோடி ரூபாய் ஆராய்ச்சி நிதியை உருவாக்குவதாக அரசு அறிவித்துள்ளது.
நண்பர்களே,
பாரதம் உலகின் மிக விரிவான மற்றும் முழுமையான திறன் அமைப்பையும், உலகின் மிக மேம்பட்ட ஆராய்ச்சி சார்ந்த உயர்கல்வி முறையையும் கொண்டிருக்க வேண்டும் என்பதே எங்கள் முயற்சியாகும். இந்த முயற்சிகளின் பலன்களும் கண்கூடாகத் தெரிகின்றன. கடந்த சில ஆண்டுகளில், இந்திய பல்கலைக்கழகங்கள் உலகளாவிய தரவரிசையில் மிகச் சிறப்பாக செயல்படத் தொடங்கியுள்ளன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கியூஎஸ் தரவரிசையில் பாரதத்திலிருந்து 9 கல்வி நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. இன்று இந்த எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, டைம்ஸ் உயர் கல்வி தாக்க தரவரிசையும் வெளியிடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்த தரவரிசையில் பாரதத்திலிருந்து 13 நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. இப்போது, பாரதத்திலிருந்து கிட்டத்தட்ட 100 கல்வி நிறுவனங்கள் இந்த உலகளாவிய தாக்க தரவரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு வாரமும் ஒரு பல்கலைக்கழகம் பாரதத்தில் நிறுவப்பட்டுள்ளது. பாரதத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஐ.டி.ஐ (தொழிற்பயிற்சி நிலையம்) நிறுவப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு, ஒரு அடல் டிங்கரிங் ஆய்வகம் திறக்கப்படுகிறது. பாரதத்தில் ஒவ்வொரு நாளும் இரண்டு புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இன்று நாட்டில் 23 ஐ.ஐ.டி. உள்ளன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, 13 ஐ.ஐ.எம். இருந்த நிலையில், இன்று இந்த எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது எய்ம்ஸ் மருத்துவமனைகள் 3 மடங்கு அதாவது, 22. 10 ஆண்டுகளில், மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. இன்று, கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் ஏற்பட்டு வருகின்றன. தேசிய கல்விக் கொள்கை நாட்டின் இளைஞர்களின் கனவுகளை விரிவுபடுத்தியுள்ளது. இந்திய பல்கலைக்கழகங்களும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைக்கத் தொடங்கியுள்ளன. கூடுதலாக, டீக்கின் மற்றும் வோலங்காங் போன்ற சர்வதேச பல்கலைக்கழகங்கள் பாரத்தில் தங்கள் வளாகங்களைத் திறக்கின்றன. இந்த முயற்சிகள் அனைத்தும் இந்திய மாணவர்களுக்கு உயர்கல்விக்கான சிறந்த கல்வி நிறுவனங்களை உள்நாட்டிலேயே கிடைக்கச் செய்கின்றன. இது நமது நடுத்தர வர்க்கத்திற்கு பணத்தை மிச்சப்படுத்துகிறது.
நண்பர்களே,
இன்று, நமது முன்னோடி நிறுவனங்கள் வெளிநாடுகளில் வளாகங்களைத் திறக்கின்றன. இந்த ஆண்டு, ஐஐடி தில்லி அபுதாபியில் ஒரு வளாகத்தைத் திறந்துள்ளது. ஐஐடி மெட்ராஸ் தான்சானியாவிலும் ஒரு வளாகத்தைத் தொடங்கியுள்ளது. இந்திய கல்வி நிறுவனங்கள் உலகளவில் செல்வதற்கான ஆரம்பம் இது. நாளந்தா பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள் உலகின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைய வேண்டும்.
நண்பர்களே,
இன்று, ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் பாரதம் மற்றும் அதன் இளைஞர்கள் மீது உள்ளது. புத்தரின் பூமியுடன், ஜனநாயகத்தின் தாயுடன் தோளோடு தோள் சேர்ந்து நடக்க உலகம் விரும்புகிறது. பாருங்கள், பாரதம் "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்று கூறும் போது, உலகம் அதனுடன் நிற்கிறது. "ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்தொகுப்பு" என்று பாரதம் கூறும்போது, உலகம் அதை எதிர்காலத்திற்கான திசையாகப் பார்க்கிறது. ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்று பாரதம் கூறும்போது, அதை உலகம் மதிக்கிறது, ஏற்றுக்கொள்கிறது. இந்த உலகளாவிய சகோதரத்துவ உணர்வுக்கு நாளந்தா மண் புதிய பரிமாணத்தை அளிக்கும். எனவே, நாளந்தா மாணவர்களின் பொறுப்பு இன்னும் அதிகம். நீங்கள்தான் பாரதம் மற்றும் முழு உலகத்தின் எதிர்காலம். அமிர்த காலத்தின் இந்த 25 ஆண்டுகள் பாரத இளைஞர்களுக்கு மிகவும் மகத்துவமானவை. நாளந்தா பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு மாணவருக்கும் இந்த 25 ஆண்டுகள் சம அளவில் முக்கியமானது. இங்கிருந்து நீங்கள் எங்கு சென்றாலும், உங்கள் பல்கலைக்கழகத்தின் மனித மதிப்புகள் தெளிவாக இருக்க வேண்டும். உங்கள் லோகோவின் செய்தியை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அதை நாளந்தா வழி என்று அழைக்கிறீர்கள், இல்லையா? தனிநபர்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் தனிநபர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கம் உங்கள் லோகோவின் அடிப்படையாகும். உங்கள் ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள், ஆனால் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளவும் முயற்சி செய்யுங்கள். ஆர்வமாக இருங்கள், தைரியமாக இருங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, அன்பாக இருங்கள். சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர உங்கள் அறிவைப் பயன்படுத்துங்கள். உங்கள் அறிவைக் கொண்டு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குங்கள். நாளந்தாவின் பெருமை, நமது பாரதத்தின் பெருமை, உங்கள் வெற்றியால் தீர்மானிக்கப்படும். உங்கள் அறிவு மனிதகுலம் முழுவதையும் வழிநடத்தும் என்று நான் நம்புகிறேன். எதிர்காலத்தில் நமது இளைஞர்கள் உலகை வழிநடத்துவார்கள் என்று நான் நம்புகிறேன், மேலும் நாளந்தா உலகளாவிய நோக்கத்திற்கான ஒரு முக்கியமான மையமாக மாறும் என்று நான் நம்புகிறேன்.
இந்த நம்பிக்கையுடன், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசின் முழு ஆதரவு தேவை என்ற நிதிஷ்ஜியின் அழைப்பை நான் வரவேற்கிறேன். இந்த சிந்தனைப் பயணத்திற்கு முடிந்தவரை உத்வேகத்தை வழங்குவதில் இந்திய அரசும் ஒருபோதும் பின்தங்காது. இந்த உணர்வுடன், உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!