வணக்கம் !
மத்தியப்பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல் அவர்களே, முதலமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் அவர்களே, மத்திய அமைச்சரவையின் எனது சகாக்களான திரு ஹர்தீப் சிங் பூரி அவர்களே, டாக்டர் வீரேந்திர குமார் அவர்களே, கவுஷல் கிஷோர் அவர்களே, மத்தியப்பிரதேச அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, இந்தூரையும், மத்தியப்பிரதேசத்தின் பல நகரங்களையும் சேர்ந்த அன்பு சகோதர, சகோதரிகளே இங்கு வருகை தந்துள்ள இதர பிரமுகர்களே,
நாம் இளமைக்காலத்தில், படித்துக் கொண்டிருந்தபோது, இந்தூர் என்று குறிப்பிட்டதும், முதலில் நமது நினைவுக்கு வந்தது மகேஷ்வரின் தேவி அஹில்யாபாய் ஹோல்கரும் அவரது சேவை உணர்வும்தான். காலப்போக்கில், இந்தூர், மேலும் மேலும் சிறந்த மாற்றங்களைக் கண்டுள்ளது. ஆனால், தேவி அஹில்யா அவர்களின் உந்துதலை ஒரு போதும் இந்தூர் கைவிட்டதில்லை. தேவி அஹில்யாவுடனான இந்தூரின் பெயர் தூய்மை என்பதை வெளிப்படுத்தும்.
கோபர்-தான் திட்டம் மிகக்குறுகிய காலத்தில் சாத்தியமாவதற்கு காரணமான சிவ்ராஜ் அவர்களையும், அவரது அணியையும் நான் பாராட்டுகிறேன். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்தூரின் அடையாளத்தை புதிய உச்சங்களுக்கு கொண்டு சென்ற சுமித்ரா தாய்க்கு எனது நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன். எனது சகாவும், இந்தூர் மக்களவை தொகுதியின் இப்போதைய உறுப்பினருமான சங்கர் லால்வான் அவர்களும், சுமித்ராவின் பாதையைப் பின்பற்றி இந்தூரை சிறப்பானதாக்க தொடர்ந்து பாடுபடுகிறார்.
நண்பர்களே,
இந்தூரை நான் இவ்வளவு பாராட்டுகிறபோது எனது நாடாளுமன்ற தொகுதியான வாரணாசி பற்றியும் நான் குறிப்பிட வேண்டும். தேவி அஹில்யா பாய் ஹோல்கர் அவர்களின் மிக அழகான சிலை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நிறுவப்பட்டிருப்பதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர்களே,
நமது நகரங்களை மாசு இல்லாமலும், ஈரமான கழிவுகள் இல்லாமலும் பாதுகாப்பதற்கு இன்றைய முயற்சி மிகவும் முக்கியமானது. இந்தூரின் தூய்மைக்கான பிரச்சாரத்திற்கு இன்று புதிய பலம் கிடைத்துள்ளது. ஈரமான நகர்ப்புற வீட்டுக் கழிவுகள், கால்நடைகள் மற்றும் பண்ணையில் இருந்து வரும் கழிவுகள் கோபர்-தான் எனப்படுகிறது. கோபர்தானில் இருந்து சுத்தமான எரிபொருள், சுத்தமான எரிபொருளில் இருந்து எரிசக்தி ஆகியவை வாழ்க்கைக்கு வலுசேர்க்கும் சங்கிலியாகும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், 75 பெரிய மாநகராட்சிகளில் கோபர்தான் உயிரி அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு ஆலைகள் நிறுவப்படும். இந்திய நகரங்களை தூய்மையானவையாக, மாசு இல்லாதவையாக ஆக்குவதிலும், தூய்மையான எரிசக்தியின் திசையில் மாற்றுவதிலும் இந்த இயக்கம் முக்கிய பங்காற்றும். நகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களிலும் கோபர்தான் ஆலைகள் அமைக்கப்படும் போது விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கும். இந்தியாவின் பருவநிலை உறுதிமொழிகளை இது நிறைவேற்றுவதோடு, சுற்றித்திரியும் மற்றும் ஆதரவற்ற கால்நடைகளால் ஏற்படும் பிரச்சனையை சமாளிக்க உதவும்.
நண்பர்களே,
கழிவுகளை சொத்தாக மாற்றுகின்ற நமது இயக்கத்தின் தாக்கம் பற்றி கூடுதலான மக்கள் அறிய வேண்டும். கோபர்-தான் உயிரி-அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு ஆலையிலிருந்து நாளொன்றுக்கு 17,000 முதல் 18,000 கிலோ கிராம் எடையுள்ள உயிரி-அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவை மட்டும் இந்தூர் பெறவில்லை. 100 டன் அளவுக்கு இயற்கை உரங்களும் உருவாக்கப்படுகின்றன. அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவை (சிஎன்ஜி) பயன்படுத்துவதால் மாசு குறைகிறது. மக்களுக்கு வாழ்க்கை எளிதாவதும் வேகமடைகிறது. இந்த ஆலையில் தயாரிக்கப்படும் சிஎன்ஜி இந்தூர் நகரில் தினந்தோறும் 400 பேருந்துகளை இயக்குவதற்கு பயன்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆலையின் மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர்களும் வேலைவாய்ப்பை பெறவுள்ளனர்.
நண்பர்களே,
நாடு முழுவதும் உள்ள நகரங்களில் குவியும் லட்சக்கணக்கான டன் குப்பைகள் பல பத்தாண்டுகளாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை ஆக்ரமித்துள்ளன. இத்தகைய நகரங்களில் காற்று மற்றும் தண்ணீர் மாசு காரணமாக பல நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மலைபோல் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதும் இதன் மூலம் அடுத்த இரண்டு – மூன்று ஆண்டுகளில் இவற்றை பசுமை மண்டலங்களாக மாற்றுவதும் இலக்காக உள்ளது. இதற்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும்.
நண்பர்களே,
தூய்மையான நகரம் மற்றொரு புதிய வாய்ப்புக்கும் வழி வகுக்கிறது, அதாவது சுற்றுலா, நமது நாட்டில் எந்தவொரு நகரமும், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களோ, புனித இடங்களோ இடம் பெறாமல் இல்லை. தூய்மையில்தான் பின்தங்கியிருக்கின்றன. நகரங்கள் தூய்மையாக இருக்கும் போது, மற்ற இடங்களிலிருந்து கூடுதலான மக்கள் அங்கே பயணம் செய்ய விரும்புகிறார்கள். இந்தூரில் தூய்மைப்பணிகளை பார்ப்பதற்காக மட்டுமே ஏராளமான மக்கள் வருகிறார்கள். எங்கே தூய்மை இருக்கிறதோ அங்கே சுற்றுலா இருக்கும். இதன் மூலம் அந்த இடத்தில் புதிய பொருளாதாரம் தொடங்குகிறது.
சகோதர சகோதரிகளே,
பிரச்சனைகளை ஆராய்ந்து தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டால் மாற்றம் என்பது சாத்தியமே. நம்மிடம் எண்ணெய் கிணறுகள் இல்லை, இதனால் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிக்கு மற்றவர்களை சார்ந்திருக்கிறோம். இருப்பினும், எத்தனால் மற்றும் உயிரி எரிபொருள் தயாரிப்பதற்கான ஆதார வளங்கள் பல ஆண்டுகளாக நம்மிடம் உள்ளன. பெட்ரோலியப் பொருட்களுடன் எத்தனாலை கலப்பது ஒருசதவீதம், 1.5 சதவீதம், 2 சதவீதம் என வளர்ச்சியடைந்து இப்போது இது 8 சதவீதத்தை எட்டியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் எத்தனால் விநியோகமும் அதிகரித்துள்ளது.
நண்பர்களே,
இந்தூரில் துப்புரவு செய்யும் எனது சகோதர சகோதரிகளுக்கு தில்லியிலிருந்து எனது மதிப்புமிக்க வணக்கங்களை நான் தெரிவிக்கிறேன். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். கொரோனா காலத்தில் தூய்மை இயக்கத்தை நாம் தொடராமல் இருந்திருந்தால் பல பிரச்சினைகளை நாம் சந்திக்க வேண்டியிருந்திருக்கும். நாட்டின் சமானிய மக்களைக் காப்பாற்றியதற்காக உங்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறன்.
சகோதர சகோதரிகளே,
நாடு முழுவதும் உள்ள பாலர்சேனா (சிறார் ராணுவம்) வீடுகளில் குப்பைகள் வீசப்படுவதை அனுமதிப்பதில்லை. இது தூய்மை இயக்கம் வெற்றியடைய பெருமளவு உதவி செய்துள்ளது. மூன்று முதல் நான்கு வயது வரையுள்ள சிறார்கள், குப்பைகளை எல்லா இடங்களிலும், எறியாதீர்கள் என்று தங்களின் தாத்தா, பாட்டிகளிடம் கூறுகிறார்கள். நீங்கள் ஒரு சாக்லேட் சாப்பிட்டால் அதனை சுற்றியிருக்கும் காகிதத்தைக் கண்ட இடத்தில் எறியாதீர்கள் என்று கூறுகிறார்கள். இத்தகைய பாலர்சேனாவின் முயற்சிகள் இந்திய எதிர்காலத்தின் அடித்தளத்தை வலுவாக்கும். எனது இதயத்திலிருந்து அவர்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்.
உங்கள் அனைவருக்கும் நன்றி,! வணக்கம்!