அஸ்ஸாமின் துடிப்பு மிக்க முதல்வர் திரு.ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா அவர்களே, அமைச்சர்கள் அதுல் போரா அவர்களே, கேசப் மஹந்தா அவர்களே, பிஜுஷ் ஹசாரிகா அவர்களே, பொன்விழாக் கொண்டாட்டக் குழுவின் தலைவர் டாக்டர். தயானந்த் பதக் அவர்களே, ஆக்ராதூத் செய்தித்தாளின் தலைமை செய்தி ஆசிரியர் கனக் சென் தேகா அவர்களே, மற்ற பிரமுகர்களே, சகோதர, சகோதரிகளே..
கடந்த 50 ஆண்டுகளாக, அஸ்ஸாம் மொழியில் வடகிழக்கின் சக்தி வாய்ந்த குரலாக இருக்கும் ஆக்ராதூத்-வுடன் தொடர்புடைய செய்தியாளர்கள், பணியாளர்கள், வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.. நல்வாழ்த்துகள்.. வரும் நாட்களில் 'ஆக்ராதூத்' புதிய உயரங்களுக்கு செல்லும் என்று நம்புகிறேன். பிரஞ்சாலுக்கும், அவரது இளைய குழுவைச் சேர்ந்தவர்களுக்கும் எனது வாழ்த்துகள்..
தேகா அவர்களின் வழிகாட்டுலின்கீழ், தைனிக் ஆக்ராதூத் தேச நலனை முதன்மையாக கொண்டுள்ளது. அவசரநிலைப் பிரகடன காலத்தில், நமது ஜனநாயகத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டபோதும், ஆக்ராதூத் நாளிதழும், தேகா அவர்களும், ஊடக தர்மத்தில் சமரசம் எதையும் செய்து கொள்ளவில்லை. மதிப்புமிக்க நாளிதழுக்கான புதிய தலைமுறையை அவர் உருவாக்கினார்.
சுதந்திரத்தின் 75-வது ஆண்டில், தைனிக் ஆக்ராதூத்தின் பொன்விழாக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுவது, ஒரு மைல்கல்லாக மட்டுமின்றி, 'சுதந்திர தின அமிர்தப் பெருவிழா" நேரத்தில், ஊடகம் மற்றும் தேசத்தின் கடமையாகவும் அமைந்துள்ளது.
நண்பர்களே,
கடந்த சில தினங்களாக அஸ்ஸாம் மாநிலம் வெள்ளத்தால் பெரும் துயரங்களையும், சவால்களையும் சந்தித்து வருகிறது. பல மாவட்டங்களிலும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. முதல்வர் ஹிமந்த மற்றும் அவரது குழுவினர் இரவு, பகல் பாராமல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நானும் அவ்வப்போது அங்குள்ள மக்களை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டு வருகிறேன். அஸ்ஸாம் மக்களை துயரங்களிலிருந்து மீட்க மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து பணியாற்றும் என்று ஆக்ராதூத் வாசகர்களுக்கும், அஸ்ஸாம் மக்களுக்கும் நான் உறுதி அளிக்கிறேன்.
நண்பர்களே,
இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், சுதந்திரப் போராட்டம், வளர்ச்சி ஆகியவற்றில் இந்திய மொழி நாளிதழ்கள் முக்கியமான பங்களிப்பை ஆற்றியுள்ளன. அஸ்ஸாமில், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் இதழியல் தொடங்கப்பட்டு, தொடர்ந்து வலிமைப் பெற்று வந்துள்ளது. வடமொழியில் இதழியலுக்கு புதிய பரிமாணங்களை அளித்துள்ள இதுபோன்ற நாளிதழ்களையும், செய்தி ஆசிரியர்களை அஸ்ஸாம் மாநிலம் நாட்டுக்கு அளித்துள்ளது. இதுபோன்ற நாளிதழ்கள், சாமானிய மக்களுடன் அரசை இணைப்பதில் இன்றளவும் சேவை புரிந்து வருகின்றன.