கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் அவர்களே, முதலமைச்சர் திரு பினராயி விஜயன் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே!
ஸ்ரீ சர்பானந்த சோனாவால் அவர்களின் குழுவினர், திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் மற்றும் நமது சக ஊழியர்கள் திரு வி. முரளீதரன் மற்றும் திரு. சாந்தனு தாக்கூர் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காலையில் குருவாயூர் கோவிலில் குருவாயூரப்பனின் ஆசீர்வாதத்தைப் பெறும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இப்போது, கேரள வளர்ச்சியின் கொண்டாட்டத்தில் பங்கேற்க எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதால், கேரளத்தின் கடவுள் போன்ற பொதுமக்களுக்கு மத்தியில் நான் நின்றிருக்கிறேன்.
நண்பர்களே,
சில நாட்கள் முன்பாக, அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தைத் திறந்து வைத்தபோது, கேரளாவில் அமைந்துள்ள ராமாயணத்துடன் தொடர்புடைய நான்கு புனித கோவில்களான நாலம்பலம் பற்றி நான் பேசினேன். இந்தக் கோயில்கள் தசரத மன்னனின் நான்கு மகன்களுடன் தொடர்புடையவை என்பது கேரளாவுக்கு வெளியே உள்ள பலருக்குத் தெரியாது. அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, திரிப்பிரயாரின் ஸ்ரீ ராமசுவாமி கோயிலுக்கு வருகை தரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது உண்மையில் அதிர்ஷ்டவசமானது. எழுத்தச்சன் என்ற மலையாள ராமாயணத்தின் வரிகளைக் கேட்பது ஆனந்தமாக இருக்கிறது. கூடுதலாக, கேரளாவைச் சேர்ந்த பல திறமையான கலைஞர்களின் வசீகரிக்கும் நிகழ்ச்சிகள் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கேரள மக்கள் கலை, கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் சூழ்நிலையை வளர்த்து, அவத்புரியை நினைவூட்டும் சூழலை உருவாக்கியுள்ளனர்.
நண்பர்களே,
இன்று நாடு அதன் மிகப்பெரிய உலர் துறைமுகத்தை இங்கு பெற்றுள்ளது. இது தவிர, கப்பல் கட்டுதல், கப்பல் பழுதுபார்த்தல் மற்றும் சமையல் எரிவாயு இறக்குமதி முனையம் தொடர்பான உள்கட்டமைப்பும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த முன்னேற்றங்கள் கேரளா மற்றும் இந்தியாவின் தெற்கு பிராந்தியத்தின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தத் தயாராக உள்ளன. கொச்சிக் கப்பல் கட்டும் தளம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை உருவாக்கிய வரலாற்று சிறப்பைக் கொண்டுள்ளது. இந்தப் புதிய வசதிகளுடன், கப்பல் கட்டும் தளத்தின் திறன் பல மடங்கு அதிகரிக்கும். இந்த வசதிகளுக்காகக் கேரள மக்களை நான் பாராட்டுகிறேன்.
நண்பர்களே,
நீலப் பொருளாதாரம் மற்றும் துறைமுகம் சார்ந்த வளர்ச்சியில் நமது மீனவர்கள் முக்கியமானவர்கள். பிரதமரின் மத்ஸ்ய சம்படா திட்டம் மீன்பிடிப்பதற்கான நவீன உள்கட்டமைப்பை தீவிரமாக உருவாக்கி வருகிறது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்குத் தேவையான நவீனப் படகுகளை வழங்க மீனவர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. விவசாயிகளைப் போலவே மீனவர்களுக்கும் கிசான் கடன் அட்டை வசதி வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய முயற்சிகளால், கடந்த 10 ஆண்டுகளில் மீன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடல் உணவு பதப்படுத்துதலில் இந்தியாவின் பங்கை அதிகரிப்பதில் மத்திய அரசு இப்போது கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் நமது மீனவர்களின் வருமானமும் கணிசமாக உயர்ந்து, அவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும். கேரளாவின் விரைவான வளர்ச்சி தொடர வாழ்த்துகிறேன். இந்தப் புதிய திட்டங்களுக்காக உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
நன்றி!