எனது அமைச்சரவை நண்பர் திரு அமித் ஷா அவர்களே, இந்திய தேசிய கூட்டுறவு சங்க தலைவர் திரு திலீப் சங்கானி அவர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்டுள்ள கூட்டுறவு சங்க உறுப்பினர்களே, விவசாய சகோதர, சகோதரிகளே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே அன்பர்களே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வளர்ந்த மற்றும் தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி இன்று நமது நாடு முன்னேறி வருகிறது. நமது ஒவ்வொரு இலக்குகளை அடைவதற்கும் அனைவரின் முயற்சியும் தேவை என்றும், கூட்டுறவு உணர்வில் ஒவ்வொருவரது முயற்சியும் அடங்கியுள்ளது என்பதையும் செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன். பால் கூட்டுறவு சங்கங்களின் பங்களிப்பினால் பால் உற்பத்தியில் உலகளவில் இன்று நாம் முதலிடத்தில் இருக்கிறோம். உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாக விளங்குவதில் நமது கூட்டுறவு சங்கங்களின் பங்கு அளப்பரியது. பால் போன்ற கூட்டுறவு துறைகளில் சுமார் 60% பெண்கள் ஈடுபட்டுள்ளனர். பெருநிறுவனத் துறைக்கு வழங்கப்படும் தளங்களைப் போன்ற அதே வசதிகள் இன்று கூட்டுறவு சங்கங்களுக்கும் வழங்கப்படுகின்றன. கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தும் நோக்கத்தோடு அவர்களுக்கான வரி விகிதங்கள் மேலும் குறைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகாலமாக நிலுவையில் இருந்து வந்த கூட்டுறவு துறை சம்பந்தமான பிரச்சினைகள் விரைவாக தீர்த்து வைக்கப்படுகின்றன. நமது அரசு கூட்டுறவு வங்கிகளையும் வலுப்படுத்தி உள்ளது. புதிய கிளைகளைத் திறக்கவும், மக்களின் வீடுகளுக்கே சென்று வங்கி சேவைகளை வழங்குவதற்கும் ஏதுவாக, கூட்டுறவு வங்கிகளுக்கான கட்டுப்பாடுகளும், விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன.
நண்பர்களே,
பால்வளத் துறையிலும் கால்நடை பராமரிப்பு துறையிலும் நீங்கள் அனைவரும் மிக கடினமாக பணியாற்றுகிறீர்கள். கூட்டுறவு இயக்கத்தில் கால்நடை பராமரிப்பாளர்கள் பெருமளவில் ஈடுபட்டுள்ளனர். கோமாரி நோய் நீண்ட காலமாக விலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதுடன், கால்நடை பராமரிப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பையும் ஏற்படுத்துகிறது. எனவே, நாடு முழுவதும் இலவச தடுப்பூசி பிரச்சாரத்தை முதன் முறையாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 24 கோடி விலங்குகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோமாரி நோய், வேரிலிருந்து இன்னும் அழிக்கப்படவில்லை. தடுப்பூசி போடுவது அல்லது விலங்குகளை கண்டறிவது போன்ற பணிகளில் ஈடுபட கூட்டுறவு சங்கங்கள் முன் வரவேண்டும்.
நண்பர்களே,
சேமிப்பும் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. போதிய சேமிப்பு வசதிகள் இல்லாத நிலை பல ஆண்டுகளாக உணவு பாதுகாப்பிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. நமது மொத்த உற்பத்தியில் 50%க்கும் குறைவான தானியங்களை மட்டுமே இன்று நம்மால் சேமிக்க முடிகிறது. உலகின் மிகப்பெரிய சேமிப்பு திட்டத்தை தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. , கடந்த பல தசாப்தங்களாக சேமிக்கப்பட்ட மொத்த 1400 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில், இந்த புதிய திட்டத்தின் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 700 லட்சம் டன் புதிய சேமிப்பு திறனை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிராமங்களில் வேளாண் உள்கட்டமைப்பிற்காக முதல்முறையாக ஒரு லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை இதில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக அறிகிறேன். இதில் பெரும்பாலான முதலீடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் ஏற்பட்டுள்ளது. நேரடி சந்தை உள்கட்டமைப்பு மற்றும் குளிர்பதன சேமிப்பு முறைகள் போன்றவற்றை ஏற்படுத்துவதற்காக கூட்டுறவு சங்கங்கள் இதுபோன்ற மேலும் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
புதிய இந்தியாவில் நாட்டின் பொருளாதார ஆதாரத்தின் ஆற்றல் வாய்ந்த ஊடகமாக கூட்டுறவு சங்கங்கள் வளர்ச்சி பெறும் என்று நான் நம்புகிறேன். கூட்டுறவு மாதிரியைப் பின்பற்றி தற்சார்பு கிராமங்களை நாம் கட்டமைக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்