எனதருமை நண்பர்களே!
மகாத்மா காந்தியின் பூமியான காந்தி நகரில் நடைபெறும் இந்த இடம்பெயரும் உயிரினங்கள் பற்றிய உடன்படிக்கைக்கான 13-ஆவது மாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
உலகில் உள்ள பன்முகத்தன்மை மிக்க நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. உலக நிலப்பரப்பில் 2.4% நிலப்பரப்பைக் கொண்டுள்ள இந்தியா, உலக உயிரிப் பன்முகத் தன்மையில் 8% பங்களிப்பைக் கொண்ட நாடாக திகழ்கிறது. இந்தியாவில் பல்வேறுபட்ட சுற்றுச்சூழலியல் வாழ்விடங்கள் இருப்பதோடு, உயிரிப் பன்முகத்தன்மை சிறப்புமிக்க நான்கு இடங்களும் இந்தியாவில் உள்ளன. அவை- கிழக்கு இமயமலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், இந்தோ-மியான்மர் நிலப்பரப்பு மற்றும் அந்தமான் & நிகோபார் தீவுகள் ஆகும். இவை தவிர, உலகெங்கிலும் இருந்து வரும் 500 வகையான இடம்பெயரும் பறவைகளின் புகலிடமாகவும் இந்தியா திகழ்கிறது.
தாய்மார்களே, பண்பாளர்களே,
பன்நெடுங்காலமாகவே, வன உயிரினங்கள் மற்றும் வாழ்விடங்களை பாதுகாப்பது என்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக கருதப்படுவதுடன், இரக்கம் மற்றும் ஒருங்கிணைந்து வாழ்வதையும் ஊக்குவித்து வருகிறது. விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்பதை நமது வேதங்களும் எடுத்துரைக்கின்றன. காடுகள் அழிக்கப்படுவதையும், விலங்குகள் கொல்லப்படுவதையும் தடுப்பதற்கு அசோக சக்ரவர்த்தி பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டு, அஹிம்சை மற்றும் விலங்குகள் மற்றும் இயற்கையை பாதுகாப்பதை நமது அரசியல் சட்டத்திலேயே இடம்பெறச் செய்துள்ளோம். பல்வேறு சட்டங்கள் மற்றும் மசோதாக்களிலும் இந்தக் கருத்து பிரதிபலித்துள்ளது.
பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகள், நல்ல முடிவுகளை தருவதாக அமைந்துள்ளன. பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 2014-ல் 745 ஆக இருந்த நிலையில், 2019 ஆம் ஆண்டில் 870 ஆக அதிகரித்திருப்பதுடன், பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பரப்பளவும் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் சதுர கிலோமீட்டர் அளவுக்கு விரிவடைந்துள்ளது.
இந்தியாவின் வனப் பகுதிகளின் பரப்பளவும் கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போதைய மதிப்பீடுகளின்படி, நாட்டின் மொத்த புவி பரப்பில், 21.67% அளவுக்கு வனப்பகுதிகள் உள்ளன.
பாதுகாத்தல், நீடித்த வாழ்க்கை முறை மற்றும் பசுமை வளர்ச்சி மாதிரி போன்ற பண்புகளை அடிப்படையாகக் கொண்டு பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளிலும் இந்தியா முன்னோடியாக திகழ்கிறது. 450 மெகாவாட் அளவுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு இலக்கு நிர்ணயம், மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்கு முன்னுரிமை, பொலிவுறு நகரங்கள், தண்ணீர் பாதுகாப்பு போன்ற ஏராளமான முன்முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.
சர்வதேச சூரியசக்தி கூட்டணி, பேரிடர் நெகிழ்திறன் கட்டமைப்புக் கூட்டணி மற்றும் ஸ்வீடன் உடனான தொழிற்சாலை மாற்றத் தலைமை போன்றவற்றில் பல்வேறு நாடுகளும் இணைவது ஊக்கம் அளிப்பதாக உள்ளது. வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸூக்கும் குறைவாக பராமரிப்பது குறித்த பாரீஸ் உடன்பாட்டை செயல்படுத்தும் ஒரு சில நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது.
நண்பர்களே,
குறிப்பிட்ட இனங்களை பாதுகாக்கும் திட்டங்களை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இது நல்ல விளைவுகளை அளிப்பதையும் காண்கிறோம். தொடக்கத்தில் 9 இடங்களாக இருந்த புலிகள் சரணாலயங்களின் எண்ணிக்கை தற்போது 50 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவில்தான் 2970 புலிகள் வசிக்கின்றன. 2022-க்குள் புலிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது என்ற காலக்கெடுவுக்கு இரண்டாண்டுகள் முன்னதாகவே இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. புலிகள் வசிக்கும் நாடுகளிலிருந்து இங்கு வந்திருப்பவர்களையும், மற்றவர்களையும் நான் கேட்டுக் கொள்வது யாதெனில், சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் புலிகள் பாதுகாப்பை வலுப்படுத்த முன்வர வேண்டும்.
உலகில் உள்ள ஆசிய யானைகளின் மொத்த எண்ணிக்கையில் 60% க்கு மேல் இந்தியாவில் உள்ளன. நம் நாட்டில் உள்ள மாநில அரசுகளால், 30 யானைகள் காப்பகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த வகையில், ஆசிய யானைகளை பாதுகாப்பதற்கான தர நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பல்வேறு முன்முயற்சிகளையும் இந்தியா மேற்கொண்டுள்ளது.
இமயமலையின் உச்சிப்பகுதியில், பனிச்சிறுத்தைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பதற்கான, பனிச்சிறுத்தைகள் திட்டம் ஒன்றையும் நாம் தொடங்கியிருக்கிறோம். 12 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட சர்வதேச பனிச்சிறுத்தைகள் சூழல்முறைத் திட்ட நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தையும் இந்தியா அண்மையில் நடத்தியது. இதன் காரணமாக, பனிச்சிறுத்தைகள் பாதுகாப்புக்கான நாடு சார்ந்த செயல் திட்டம் மற்றும் நாடுகள் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு வகை செய்யும் புதுதில்லி பிரகடனம் வெளியிடப்பட்டது. பொதுமக்களின் பங்களிப்புடன் மலைகளின் சூழலை பாதுகாப்பது உள்ளிட்ட பசுமை பொருளாதாரத்தை ஊக்குவிப்பதிலும் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது என்பதையும் நான் உங்களிடம் மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன்.
நண்பர்களே,
குஜராத்தில் உள்ள கிர் நிலப்பரப்பு, ஆசிய சிங்கங்களின் ஒரே புகலிடமாக திகழ்வது நாட்டிற்கு பெருமிதம் அளிக்கிறது. ஆசிய சிங்கங்களை பாதுகாக்க ஜனவரி 2019 முதல் ஆசிய சிங்க பாதுகாப்புத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். தற்போது ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 523-ஆக உள்ளது என்ற தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களும், அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய இந்தியாவின் மூன்று மாநிலங்களில் காணப்படுகின்றன. “இந்திய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்கான தேசிய பாதுகாப்பு செயல்திட்டம்” 2019 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
அழிந்து வரும் அரியவகை பறவை இனமான இந்திய புஸ்டார்டு (Bustard) –களை பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இந்த வகை பறவைகளின் இனப்பெருக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக, வனப் பகுதியில் 9 முட்டைகள் வெற்றிகரமாக குஞ்சு பொறித்துள்ளன. அபுதாபியில் செயல்படும் ஹவ்பாரா பாதுகாப்புக்கான சர்வதேச நிதியத்தின் தொழில்நுட்ப உதவியுடன், இந்திய விஞ்ஞானிகள் மற்றும் வனத்துறையினர் இணைந்து இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.
எனவே, இந்திய புஸ்டார்டுகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், GIBI-The Great என்ற பெயரிலான அடையாளச் சின்னம் ஒன்றையும் நாம் உருவாக்கியிருக்கிறோம்.
நண்பர்களே,
இடம்பெயரும் பறவைகள் பற்றிய உடன்படிக்கைக்கான 13 ஆவது மாநாட்டை காந்தி நகரில் நடத்துவது இந்தியாவுக்கு கவுரவத்தை அளித்துள்ளது.
இயற்கையுடன் இணக்கமாக வாழ்கிறோம் என்பதை உணர்த்தும் விதமாக, தென்னிந்தியாவில் வரையப்படும் பாரம்பரிய கோலத்திலிருந்து (Kolam) உருவாக்கப்பட்டதுதான் இந்த மாநாட்டிற்கான அடையாளச் சின்னம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
நண்பர்களே,
நாம் பாரம்பரியமாக “அதிதி தேவோ பவா” என்ற மந்திரத்தை பின்பற்றி வருகிறோம். இதுவே, இடம்பெயரும் பறவைகளுக்கான உடன்படிக்கை தொடர்பான மாநாட்டின் மையக் கருத்தாக உள்ளது: “இடம்பெயரும் பறவைகள் கிரகங்களை இணைப்பதோடு, அவற்றை நம் வீடுகளுக்கு வரவேற்கிறோம்”. இந்த அரிய வகை பறவை இனங்கள், பாஸ்போர்ட் அல்லது விசா ஏதுமின்றி ஒருநாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சென்று வருவதுடன், அமைதி மற்றும் வளம் ஆகியவற்றின் தூதராகவும் செயல்படுவதால், அவற்றை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.
தாய்மார்களே, பண்பாளர்களே,
அடுத்த மூன்றாண்டுகளுக்கு இந்த அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகிக்கவுள்ளது. தாம் தலைமை வகிக்கும் காலத்தில், கீழ்கண்ட அம்சங்களை இந்தியா முனைப்புடன் செயல்படுத்தும்:
இடம் பெயரும் பறவைகளுக்கான மத்திய ஆசியாவின் சிறந்த வழித்தடமாக இந்தியா திகழும். இந்த பறவைகளுடன், மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தையும், அவற்றின் வாழ்விடத்தையும் பாதுகாக்கும் நோக்குடன், “மத்திய ஆசிய பறவைகள் வழித்தடம் வழியாக பறந்து செல்லும் இடம்பெயரும் பறவை இனங்களை பாதுகாப்பதற்கான தேசிய செயல் திட்டம்” ஒன்றை இந்தியா தயாரித்துள்ளது. இந்த விவகாரத்தில் மற்ற நாடுகளுக்கான செயல்திட்டத்தை தயாரிப்பதிலும் உதவி செய்ய இருப்பது, இந்தியாவுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இடம்பெயரும் பறவைகளை பாதுகாப்பதை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தில் உள்ள அனைத்து நாடுகளின் ஒத்துழைப்புடன் இதனை செயல்படுத்துவோம். மேலும், பொதுவான அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன்மூலம் ஆராய்ச்சி, படிப்பு, மதிப்பீடுகள், திறன் உருவாக்கம் மற்றும் பாதுகாப்புக்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கான அமைப்பு சார்ந்த நடைமுறை ஒன்றை உருவாக்க இருக்கிறோம் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, இந்தியா 7500 கிலோமீட்டர் தொலைவுக்கான கடற்பரப்பை கொண்டிருப்பதுடன், உயிரி பன்முகத் தன்மை மிக்கவையாகவும், எண்ணற்ற உயிரினங்களை கொண்டவையாகவும் இந்திய கடல் நீர் உள்ளது. ஆசியான் மற்றும் கிழக்காசிய நாடுகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியா தலைமைப் பொறுப்பு வகிக்கும், இந்தோ பசிபிக் பெருங்கடல் முன்முயற்சிக்கு ஏற்ப இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டில், ஆழ்கடல் ஆமை கொள்கை மற்றும் ஆழ்கடல் மேலாண்மைக் கொள்கையை வகுக்கவும், இந்தியா திட்டமிட்டுள்ளது. நுண்ணிய பிளாஸ்டிக்குகளால் ஏற்படக்கூடிய மாசுவைக் கட்டுப்படுத்தவும் இவை உதவும். ஒருமுறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக்குகள், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பெரும் சவாலாக இருப்பதால், இந்தியாவில் அதன் பயன்பாட்டைக் குறைக்க ஒரு இயக்கமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நண்பர்களே,
இந்தியாவில் உள்ள பல்வேறு பாதுகாக்கப்பட்ட பகுதிகள், அண்டை நாடுகளுடனான பாதுகாக்கப்பட்ட பகுதிகளுடன் பொதுவான எல்லைகளைக் கொண்டுள்ளது. ‘எல்லை கடந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகள்’ ஒன்றை உருவாக்குவதன் மூலம், வன உயிரினங்களை பாதுகாப்பதில் ஒன்றிணைந்து செயல்பட்டால், சாதகமான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
நண்பர்களே,
நீடித்த வளர்ச்சிப்பாதையில், எனது அரசு உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய பகுதிகளை மேம்படுத்துவதற்கான கட்டமைப்புக் கொள்கை நடைமுறை ஒன்றையும் நாங்கள் வெளியிட்டிருக்கிறோம்.
வருங்கால தலைமுறையினருக்காக இயற்கை வளங்களை பாதுகாப்பதில் பொதுமக்களுக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம்” என்ற தாரக மந்திரத்தை நோக்கி எனது அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள வனப் பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள், தற்போது கூட்டு வன மேலாண்மை குழுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் வளர்ச்சிக் குழுக்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதுடன் வனப்பகுதிகள் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்கும் பொறுப்பும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
இடம்பெயரும் பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பது தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கும், திறன் உருவாக்கத்திற்கும் இந்த மாநாடு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தியாவின் வரவேற்பு மற்றும் பன்முகத் தன்மையை நீங்கள் உணர்ந்து கொள்வதற்கும் இதுவொரு வாய்ப்பாக அமையும் என்றும் நான் நம்புகிறேன்.
நன்றி.
மிக்க நன்றி.