உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
100 ஆண்டுகளுக்கு முன்பு, இந்துஸ்தான் டைம்ஸ் வணக்கத்திற்குரிய பாபுவால் தொடங்கப்பட்டது . அவர் குஜராத்தி மொழி பேசுபவர். 100 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு குஜராத்தியை நீங்கள் அழைத்திருக்கிறீர்கள். நான், ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் கடந்த 100 ஆண்டுகளாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்துடன் தொடர்புடைய அனைவருக்கும், இதை வளர்ப்பதற்கு பங்களிப்பு செய்தவர்களுக்கும், போராடியவர்களுக்கும், சவால்களை எதிர்கொண்டவர்களுக்கும், உறுதியாக நின்றவர்களுக்கும் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் இன்று பாராட்டுக்கு உரியவர்கள், மரியாதைக்குரியவர்கள். 100 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்தது உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் அனைவரும் இந்த அங்கீகாரத்திற்கு தகுதியானவர்கள், எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 100 ஆண்டு பயணத்தை காண்பிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க கண்காட்சியைக் காண வாய்ப்பு கிடைத்தது. உங்களுக்கு நேரம் இருந்தால் புறப்படுவதற்கு முன்பு சிறிது நேரம் அங்கு செலவிடுமாறு உங்கள் அனைவரையும் நான் ஊக்குவிக்கிறேன். இது வெறும் கண்காட்சி அல்ல, ஒரு அனுபவம். 100 வருட வரலாறு என் கண் முன்னே கடந்து போனது போல் உணர்ந்தேன். நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து, அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் முதல் செய்தித்தாள்களைப் பார்த்தேன். மார்ட்டின் லூதர் கிங், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற புகழ்பெற்றவர்கள் ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுதி வந்தனர். அவர்களின் எழுத்துக்கள் செய்தித்தாளை மிகவும் வளப்படுத்தின. உண்மையிலேயே, நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். சுதந்திரத்திற்காக போராடுவது முதல் சுதந்திரத்திற்குப் பிறகு எல்லையற்ற நம்பிக்கையின் அலைகளில் சவாரி செய்வது வரை, இந்தப் பயணம் அசாதாரணமானது மற்றும் நம்பமுடியாதது. 1947 அக்டோபரில் காஷ்மீரை இணைத்த பிறகு ஒவ்வொரு குடிமகனும் அடைந்த உற்சாகத்தை உங்கள் பத்திரிகையில் நான் உணர்ந்தேன். ஏழு தசாப்தங்களாக காஷ்மீர் எவ்வாறு வன்முறையில் மூழ்கியிருந்தது, முடிவெடுக்க முடியாத தன்மை எவ்வாறு இருந்தது என்பதையும் அந்தத் தருணத்தில் நான் உணர்ந்தேன். இன்று உங்கள் செய்தித்தாள் ஜம்மு-காஷ்மீரில் சாதனை வாக்குப்பதிவு பற்றிய செய்திகளை வெளியிடுகிறது, இது கடந்த காலத்திலிருந்து கடுமையாக வேறுபடுகிறது.
நேற்றுதான், போடோ பகுதியைச் சேர்ந்த மக்களுடன் ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன், இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை தில்லியில் உள்ள ஊடகங்கள் தவறவிட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு, வன்முறையையும், வெடிகுண்டுகளையும், துப்பாக்கிகளையும் விட்டுவிட்டு, போடோக்கள் இளைஞர்கள் இப்போது டெல்லியில் ஒரு கலாச்சார விழாவைக் கொண்டாடுகிறார்கள் என்பதை அவர்கள் உணரவில்லை. இது ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வு. நான் நேற்று அங்கு இருந்தேன், அதை ஆழமாக உணர்ந்தேன். போடோ அமைதி ஒப்பந்தம் இந்த மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. கண்காட்சியின் போது, மும்பை தாக்குதல் பற்றிய செய்திகளையும் பார்த்தேன். அண்டை நாட்டின் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக நமது மக்கள் தங்கள் சொந்த வீடுகள் மற்றும் நகரங்களில் கூட பாதுகாப்பற்றதாக உணர்ந்த நேரம் அது. ஆனால் இப்போது, நிலைமை மாறிவிட்டது, அந்த நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகள் வீட்டில் பாதுகாப்பாக உணரவில்லை.
நண்பர்களே,
ஹிந்துஸ்தான் டைம்ஸ் தனது 100 ஆண்டுகால பயணத்தில் 25 ஆண்டுகால காலனி ஆதிக்கத்தையும், 75 ஆண்டு சுதந்திரத்தையும் கண்டது. இந்த 100 ஆண்டுகளில் பாரதத்தின் தலைவிதியை வடிவமைத்து, வழிகாட்டுதலை வழங்கிய சக்தி சாமானிய இந்தியனின் ஞானமும் திறனும் ஆகும். பல நிபுணர்கள் பெரும்பாலும் சாமானிய இந்தியரின் வலிமையைக் குறைத்து மதிப்பிட்டுள்ளனர். ஆங்கிலேயர்கள் பாரதத்தை விட்டு வெளியேறியபோது, நாடு சிதறிவிடும், அதற்கு எதிர்காலம் இல்லை என்று கூறப்பட்டது. நெருக்கடி நிலையின் போது, அது நிரந்தரமாகிவிடும், ஜனநாயகம் இழக்கப்படும் என்று சிலர் நம்பினர். சில நபர்களும் நிறுவனங்களும் நெருக்கடி நிலையை அமல்படுத்தியவர்களுக்கு ஆதரவாகவும் நின்றன. ஆனாலும் பாரதத்தின் குடிமக்கள் எழுந்து நின்றனர், நெருக்கடி நிலை தூக்கியெறியப்படுவதற்கு அதிக காலம் எடுக்கவில்லை. கொரோனாவின் சவாலான காலங்களை நினைத்துப் பாருங்கள், அப்போது பாரதம் உலக சமூகத்திற்கு ஒரு சுமையாக மாறும் என்று உலகம் எதிர்பார்த்தது. ஆனால் பாரத மக்கள் எதிர்த்துப் போராடி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
1990 களில் பாரதம் 10 ஆண்டுகளில் ஐந்து தேர்தல்களைச் சந்தித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இவ்வளவு பெரிய நாட்டில் 10 ஆண்டுகளில் ஐந்து தேர்தல்கள்! இத்தகைய நிலையற்ற தன்மை பல நிபுணர்களையும் செய்தித்தாள் பத்தி எழுத்தாளர்களையும், பாரதம் எப்போதும் இப்படித்தான் இருக்கும் என்று கணிக்க வழிவகுத்தது. ஆனால், பாரதவாசிகள் அந்த நிபுணர்கள் கூறியது தவறு என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். இன்று, உலகம் நிச்சயமற்ற தன்மை மற்றும் நிலையற்ற தன்மையை எதிர்கொள்கிறது. உலகில் பல நாடுகளில் ஒவ்வொரு தேர்தலிலும் அரசுகள் மாறி வருகின்றன, அதேசமயம், பாரதம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரே அரசைத் தேர்ந்தெடுத்து தனித்துவத்துடன் நிற்கிறது.
நண்பர்களே,
உங்களில் பலர் பாரதத்தின் அரசியலையும் கொள்கைகளையும் நீண்ட காலமாகக் கவனித்து வருகிறீர்கள். "நல்ல பொருளாதாரம் மோசமான அரசியல்" என்று ஒரு சொற்றொடர் அடிக்கடி கேட்கப்பட்டது. வல்லுனர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் இந்த யோசனையை ஊக்குவித்து, முந்தைய அரசுகள் எதுவும் செய்யாமல் இருப்பதற்கு ஒரு சாக்குப்போக்கை வழங்கினர். ஒரு வகையில், இது திறமையின்மை மற்றும் மோசமான நிர்வாகத்தை மறைப்பதற்கான ஒரு வழியாக மாறியது. முன்பெல்லாம் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே அரசுகள் ஓடின. வாக்கு வங்கிகள் உருவாக்கப்பட்டு, அந்த வாக்கு வங்கிகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க கொள்கைகள் வகுக்கப்பட்டன. இந்த வகை அரசியலால் ஏற்பட்ட மிகப்பெரிய தீங்கு என்னவென்றால், இது நாட்டில் சமத்துவமின்மை மற்றும் ஏற்றத்தாழ்வை பெரிதும் அதிகரித்தது. வளர்ச்சி அறிவிக்கப்பட்டது, ஆனால் அரிதாகவே காணப்பட்டது. இந்த மாதிரி அரசின் மீதான நம்பிக்கையை குறைத்தது. வாக்கு வங்கி அரசியலில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தெளிவான நோக்கத்துடன் இந்த நம்பிக்கையை நாங்கள் மீட்டெடுத்துள்ளோம். எங்கள் அரசின் நோக்கம் மகத்தானது, விரிவானது: 'மக்களின் முன்னேற்றம், மக்களால் முன்னேற்றம், மக்களுக்கான முன்னேற்றம்' என்ற தாரக மந்திரத்தை நாங்கள் பின்பற்றி வருகிறோம். புதிய பாரதத்தை, வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதே எங்கள் நோக்கம். இந்த மாபெரும் இலக்குடன் நாம் புறப்பட்டிருக்கும் போது, பாரதவாசிகளும் தங்கள் நம்பிக்கை என்ற மூலதனத்தை நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
பொதுமக்களின் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் வளரும்போது, அது நாட்டின் வளர்ச்சியில் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பண்டைய வளர்ந்த நாகரிகங்கள் முதல் இன்றைய வளர்ந்த நாடுகள் வரை, ரிஸ்க் எடுக்கும் கலாச்சாரம் ஒரு பொதுவான குணாம்சமாக உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு காலத்தில் நமது நாடு வர்த்தகம் மற்றும் கலாச்சாரத்தின் மையமாக இருந்தது. ஒருபுறம், நமது வர்த்தகர்களும் விற்பனையாளர்களும் தென்கிழக்கு ஆசியாவில் தீவிரமாக இருந்தனர், மறுபுறம், அவர்களுக்கு அரபு உலகம், ஆப்பிரிக்கா மற்றும் ரோமானிய சாம்ராஜ்யத்துடனும் ஆழமான உறவுகள் இருந்தன. அவர்கள் ரிஸ்க் எடுத்து பாரதத்தின் தயாரிப்புகளையும் சேவைகளையும் தொலைதூர கரைகளை அடைய உதவியதால் இது சாத்தியமானது. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த ஆபத்தை எதிர்கொள்ளும் மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, ஆனால் முந்தைய அரசுகள் குடிமக்களிடையே அந்த நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. இதன் விளைவாக, தலைமுறைகள் ஒரு அடி முன்னோக்கி மற்றும் இரண்டு அடிகள் பின்னால் எடுத்து நேரத்தை செலவிட்டன. கடந்த பத்தாண்டுகளில், நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்தியர்களிடையே இந்த ஆபத்தை எதிர்கொள்ளும் உணர்வை மீண்டும் தூண்டியுள்ளன. இன்று நமது இளைஞர்கள் பல்வேறு துறைகளில் ரிஸ்க் எடுப்பவர்களாக உள்ளனர். ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது ஒரு காலத்தில் ஆபத்தானதாகக் கருதப்பட்டது. இப்போது, நாட்டில் 125,000 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்-அப்கள் உள்ளன. ஒரு காலத்தில் விளையாட்டை ஒரு தொழிலாக ஏற்றுக்கொள்வது ஆபத்தான தொழில் தேர்வுகளாக பார்க்கப்பட்டது, ஆனால் இன்று நமது சிறிய நகரங்களில் உள்ள இளைஞர்கள் கூட இந்த ரிஸ்க் எடுத்துக்கொண்டு நாட்டிற்கு பெருமை சேர்க்கிறார்கள். சுய உதவிக் குழுக்களில் ஈடுபட்டுள்ள பெண்கள் மற்றொரு உதாரணம். இன்று, சுமார் ஒரு கோடி பெண்கள் லட்சாதிபதி சகோதரிகளாக மாறியிருக்கிறார்கள், கிராமங்களில் தங்கள் தொழில்களை நடத்துகிறார்கள், தொழில்முனைவோரை ஊக்குவித்திருக்கிறார்கள். நான் சமீபத்தில் ஒரு கிராமப்புற பெண்ணுடன் பேசினேன், அவர் எப்படி ஒரு டிராக்டர் வாங்கி தனது குடும்பத்தின் வருமானத்தை அதிகரித்தார் என்பதைப் பகிர்ந்து கொண்டார். ஒரு பெண் ரிஸ்க் எடுத்து தனது குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றினார். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ரிஸ்க் எடுக்கத் தொடங்கும் போது, உண்மையான மாற்றம் தெரியும். இதைத்தான் நாம் இன்று பாரதத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நண்பர்களே,
பாரதத்தின் சமூகம் இப்போது முன்னெப்போதும் இல்லாத விருப்பங்களால் நிரம்பியுள்ளது, அவற்றை நாங்கள் எங்கள் கொள்கைகளின் அடித்தளமாக மாற்றியுள்ளோம். வேலைவாய்ப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் முதலீடுகளின் தனித்துவமான கலவையை எங்கள் அரசு வழங்கியுள்ளது. முதலீடுகளை உருவாக்கும், வேலைவாய்ப்பை உருவாக்கும், இந்திய குடிமக்களின் கண்ணியத்தை உயர்த்தும் வளர்ச்சி மாதிரியை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம்.
மற்றொரு உதாரணம் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள். கடந்த காலத்தில், ஒருவரின் வீட்டில் எரிவாயு சிலிண்டர் வைத்திருப்பது ஒரு அந்தஸ்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது. அண்டை வீட்டுக்காரர்கள் அப்படிப்பட்டவர்களை செல்வாக்கு மிக்கவராக, அந்தஸ்துள்ள ஒருவராக பார்ப்பார்கள், ஏனென்றால் அவர்கள் ஒரு எரிவாயு அடுப்பு வைத்திருந்தார்கள். எரிவாயு இணைப்பு இல்லாதவர்கள் தங்கள் உணவை எரிவாயு அடுப்பில் தயாரிக்கக்கூடிய நாளுக்காக ஏங்குவார்கள். எரிவாயு இணைப்பைப் பெறுவதற்கு மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து பரிந்துரைக் கடிதங்களைப் பெற வேண்டிய அளவுக்கு நிலைமை இருந்தது. நான் 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைப் பற்றி பேசுகிறேன், 18 ஆம் நூற்றாண்டைப் பற்றி அல்ல. 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு, ஆண்டுதோறும் ஆறு அல்லது ஒன்பது சிலிண்டர்களை வழங்கலாமா என்று அரசாங்கங்கள் விவாதித்தன. சிலிண்டர்களின் எண்ணிக்கையைப் பற்றி விவாதிப்பதில் இருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் எரிவாயு இணைப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்கு நாங்கள் கவனத்தை மாற்றினோம். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில் வழங்கப்பட்டதை விட கடந்த 10 ஆண்டுகளில் அதிக சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கியுள்ளோம். 2014-ல் நாட்டில் 14 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் இருந்தன. இன்று 30 கோடிக்கும் அதிகமான எரிவாயு இணைப்புகள் உள்ளன. நுகர்வோரின் இந்த அதிகரிப்பு இருந்தபோதிலும், எரிவாயு பற்றாக்குறை பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை. ஏனென்றால், நாங்கள் ஒரு துணை உள்கட்டமைப்பை உருவாக்க முதலீடு செய்தோம். நாங்கள் நாடு முழுவதும் பாட்டிலிங் ஆலைகள் மற்றும் விநியோக மையங்களை நிறுவினோம். பாட்டிலிங் ஆலைகள் முதல் சிலிண்டர் விநியோகம் வரை அனைத்து இடங்களிலும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
நண்பர்களே,
இதுபோன்ற எண்ணற்ற உதாரணங்களை என்னால் உங்களுக்கு வழங்க முடியும். உதாரணமாக மொபைல் போன்கள் அல்லது ரூபே அட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். முன்பெல்லாம், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு வைத்திருப்பது சிலருக்கு பெருமை உணர்வைக் கொடுத்தது, அவர்கள் அதை ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாகக் காட்டுவார்கள். இந்த அட்டைகளைப் பார்க்கும் ஏழைகள், என்றாவது ஒரு நாள் சொந்தமாக ஒரு அட்டைகளை வைத்திருக்க விரும்புவார்கள். ஆனால் ரூபே அட்டையின் வருகைக்குப் பிறகு, நமது நாட்டின் பரம ஏழைகளிடமும் கூட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் உள்ளன. இந்த புதிய அணுகல் அவர்களை சமமாக உணர வைக்கிறது. அவர்களின் சுய மரியாதையை அதிகரிக்கிறது. இன்று பரம ஏழைகள் கூட ஆன்லைன் பரிவர்த்தனை செய்கிறார்கள்.
பாரதத்தின் தற்போதைய வளர்ச்சிப் பாதையைப் புரிந்து கொள்ள, நமது அரசின் அணுகுமுறையைப் பார்ப்பது அவசியம். ஒரு அணுகுமுறை 'மக்களுக்காக பெரிய அளவில் செலவழிப்பது', ஆனால் எங்களிடம் மற்றொரு அணுகுமுறையும் உள்ளது: 'மக்களுக்காக பெரிய அளவில் சேமிப்பது'. இதை நாங்கள் எப்படி செய்கிறோம் என்பதை அறிய நீங்கள் ஆர்வமாக இருக்கலாம். 2014 ஆம் ஆண்டில், எங்கள் பட்ஜெட் சுமார் 16 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இன்று இந்த பட்ஜெட் 48 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. 2013-14 ஆம் ஆண்டில், மூலதன செலவினங்களுக்காக சுமார் 2.25 லட்சம் கோடி ரூபாய் செலவிட்டோம். இன்று, நமது மூலதன செலவு 11 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்த 11 லட்சம் கோடி ரூபாய் புதிய மருத்துவமனைகள், பள்ளிகள், சாலைகள், ரயில்வே, ஆராய்ச்சி வசதிகள் மற்றும் பல்வேறு பொது உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. நாங்கள் பொதுச் செலவினங்களை அதிகரிக்கும் அதே வேளையில், பொதுமக்களின் பணத்தையும் மிச்சப்படுத்துகிறோம்.
உதாரணமாக, நேரடி பலன் பரிமாற்றம், கசிவுகளை தடுத்ததன் மூலம் நாட்டிற்கு 3.5 லட்சம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் இலவச மருத்துவ சிகிச்சை மூலம் ஏழை மக்களுக்கு 1.1 லட்சம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது. 80% தள்ளுபடியில் மருந்துகளை வழங்கும் ஜன் அவுஷாதி மையங்கள் மூலம் மக்கள் 30,000 கோடி ரூபாயை சேமித்துள்ளனர். ஸ்டென்ட் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான விலைக் கட்டுப்பாடு மக்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை மிச்சப்படுத்தியுள்ளது. எல்இடி பல்புகளை ஊக்குவிப்பதன் மூலம் உஜாலா திட்டம் மின்சாரக் கட்டணத்தை ரூ.20,000 கோடி குறைத்துள்ளது. தூய்மை இந்தியா திட்டம் நோயைக் குறைத்து, ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் சுமார் 50,000 ரூபாய் மிச்சப்படுத்தியுள்ளது. சொந்த கழிப்பறைகளைக் கொண்ட குடும்பங்கள் ஒவ்வொன்றும் சுமார் 70,000 ரூபாயை மிச்சப்படுத்துகின்றன என்று யுனிசெஃப் தெரிவிக்கிறது.
முதன்முறையாக குழாய் நீரைப் பெற்ற 12 கோடி வீடுகள் குறித்த உலக சுகாதார அமைப்பின் ஆய்வு, இந்த குடும்பங்கள் சுத்தமான தண்ணீரை அணுகுவதால் ஆண்டுதோறும் 80,000 ரூபாய்க்கு மேல் சேமிக்கின்றன என்பதைக் காட்டுகிறது.
இந்த வளர்ச்சியின் வேகத்தை நாம் தக்க வைத்துக் கொண்டு, விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவோம் என்று நான் நம்புகிறேன். பாரதம் அதன் சுதந்திரத்தின் 100 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் போது, இந்துஸ்தான் டைம்ஸும் சுமார் 125 ஆண்டுகள் பழமையானதாக, முதன்மை செய்தித்தாளாக அங்கீகரிக்கப்படும். இந்த பயணத்திற்கு நீங்கள் சாட்சிகளாக இருப்பீர்கள்.
நமது சிறந்த இலக்கியவாதிகள் தங்கள் படைப்புகளைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சிக்காக பிஎச்.டி.க்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹிந்துஸ்தான் டைம்ஸின் 100 ஆண்டுகால பயணத்தில் பி.எச்.டி நடத்தினால் என்ன? இந்திய இதழியலின் பயணம், காலனித்துவ மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலங்கள், பற்றாக்குறை நாட்கள் மற்றும் செல்வாக்கு நாட்கள் ஆகியவற்றைக் கண்ட ஒரு பயணத்தை முன்னிலைப்படுத்தும் ஆராய்ச்சியை வெளிக்கொணரும் ஒரு பெரிய சேவையாக இது இருக்கும். இது ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். பிர்லா குடும்பம் எப்போதும் அதன் தொண்டு நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றது. பாரதத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்துஸ்தான் டைம்ஸ் இருக்கையை ஏன் நிறுவக்கூடாது, இது உலகளாவிய சூழலில் பாரதத்தின் உண்மையான அடையாளத்தை வெளிக்கொணரும் ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது? உங்கள் செய்தித்தாள் மகத்தான விஷயங்களைச் சாதித்துள்ளது, ஆனால் கடந்த 100 ஆண்டுகளாக நீங்கள் சம்பாதித்த மரியாதையும் நம்பிக்கையும் ஹிந்துஸ்தான் டைம்ஸின் எல்லைக்கு அப்பாற்பட்ட தலைமுறைகளுக்கு சேவை செய்யும். இந்த நூற்றாண்டு கருத்தரங்கு இத்துடன் முடிந்துவிடாமல், மேலும் பல முயற்சிகளுக்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
100 ஆண்டுகள் என்பது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். நான் தனிப்பட்ட முறையில் இங்கு வர விரும்பினேன். ஏனெனில், 100 ஆண்டுகால பயணத்தை முடிப்பதே ஒரு பெரிய சாதனை. எனவே, உங்களுக்கும், உங்கள் சக ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் நன்றி!