வேலை வாய்ப்பு விழாவில் கலந்து கொண்டுள்ள எனது இளம் நண்பர்களே, வணக்கம். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்று 71,000 இளைஞர்களுக்கு நாட்டின் 45 நகரங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான இல்லங்களில் முன்னேற்றத்தின் புதிய சகாப்தம் இன்று தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு 75,000 இளைஞர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்க இயக்கமுறையில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இன்றைய வேலைவாய்ப்பு விழா எடுத்துக்காட்டாகும்.
நண்பர்களே,
ஒரு மாதத்திற்கு முன் தொடங்கிய வேலைவாய்ப்பு விழா, மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், லடாக், அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகள், டாமன் டியூ, தாத்ரா நாகர்ஹவேலி, சண்டிகர் ஆகியவற்றின் அரசுகளால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சில நாட்களில் கோவாவும், திரிபுராவும் கூட இதே போன்ற வேலைவாய்ப்பு விழாக்களுக்கு ஏற்பாடு செய்யவிருக்கின்றன. பிரமாண்டமான இந்த முயற்சியில் இரட்டை என்ஜின் அரசுகளின் செயல்பாடு பாராட்டத்தக்கது. இத்தகைய வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இந்திய இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும்.
எனது இளம் நண்பர்களே!
நாட்டின் மிகப்பெரிய பலமாக இளைஞர்களாகிய நீங்கள் உள்ளீர்கள். தேச கட்டமைப்புக்காக இளைஞர்களின் திறமையையும், சக்தியையும் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது. மிகச்சிறப்பான காலகட்டத்தில் அதாவது அமிர்தகாலத்தில் இந்த முக்கியமான பொறுப்பை நீங்கள் ஏற்கிறீர்கள். அமிர்தகாலத்தில் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை மாற்றுவதில் உங்களது பங்கு சிறப்பானதாக இருக்கும். மத்திய அரசின் பிரதிநிதிகளாக இருக்கும் நீங்கள் உங்களது பங்கினையும், பணிகளையும் விரிவாக புரிந்துகொள்ள வேண்டும். உங்களது கடமைகளை செய்யும் போது திறன் கட்டமைப்பில் நிலையான கவனத்தை செலுத்த வேண்டும்.
நண்பர்களே,
இன்று தொடங்கப்பட்டுள்ள கர்மயோகி பாரத் தொழில்நுட்ப அமைப்பில் அரசு அலுவலர்களுக்கு ஏராளமான இணையவழி வகுப்புகள் உள்ளன. அரசு ஊழியர்களுக்காக கர்மயோகி ப்ராரம்ப் எனப்படும் தனி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன. இதனை புதிதாக நியமனம் பெற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவர்களின் திறன்மேம்பாட்டிற்கு இது மிகப்பெரும் ஆதாரமாக இருக்கும். வரும் காலங்களில் இது அவர்களுக்கு பயன்படும்.
பெருந்தொற்று மற்றும் போர் காரணமாக உலகளவில் இளைஞர்களுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இந்த சிக்கலான தருணத்திலும் கூட, இந்தியாவின் வளர்ச்சிப் பாதை மீது உலகம் முழுவதும் உள்ள நிபுணர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். நிபுணர்களின் கருத்துப்படி, சேவைத்துறையில் இந்தியா மாபெரும் சக்தியாக மாறியிருக்கிறது; விரைவில் இது உலக அளவிலும் உற்பத்தி குவி மையமாக மாறும். உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் போன்ற முன்முயற்சிகள் இதில் மாபெரும் பங்களிப்பை செய்யும். நாட்டின் முதன்மையான அடித்தளமாக இளைஞர்களும், திறன்மிக்க மனித ஆற்றலும் இருப்பதாக தெரிவித்தார். உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவில் உற்பத்தி, உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு, உள்ளூர் பொருட்களை உலக அளவில் கொண்டு செல்லுதல் போன்ற இயக்கங்கள் புதிய வேலைவாய்ப்புகளையும், சுயவேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. அரசு மற்றும் தனியார் துறையில் புதிய வேலைகளுக்கான சாத்தியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் இளைஞர்களின் சொந்த நகரங்களிலும், கிராமங்களிலும் இத்தகைய வாய்ப்புகள் உருவாகி வருவது முக்கியமானது. இது இளைஞர்கள் புலம் பெயரும் நிர்ப்பந்தத்தை குறைத்துள்ளது. மேலும் தங்கள் பகுதியில் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பை செய்ய முடிந்துள்ளது.
ஸ்டார்ட் அப் தொடங்கி சுயவேலைவாய்ப்பு வரை, விண்வெளி முதல் ட்ரோன் வரையிலான துறைகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை 80,000 ஸ்டார்ட் அப்கள் வழங்கியுள்ளன. மருத்துவம், பூச்சி மருந்து தெளித்தல், ஸ்வமித்வா திட்டத்தில் வரைபடம் தயாரித்தல், பாதுகாப்புத்துறை ஆகியவற்றில் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. ஒரு சில நாட்களுக்கு முன் இந்தியாவில் தனியார் துறை மூலம் முதலாவது ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்வெளித்துறையை தனியாருக்கு திறக்கும் முடிவு இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
நண்பர்களே!
உங்களது இந்த நியமன கடிதங்கள் வளர்ச்சியின் உலகில் அவர்களுக்கு நுழைவாயில்களை திறப்பவை மட்டுமே. அனுபவத்தில் இருந்தும் தங்களை விட மூத்தவர்களிடமிருந்தும் கற்றுக்கொண்டு தகுதிமிக்கவர்களாக மாற வேண்டும். நியமனம் பெற்றவர்கள் இணைய தளம் மூலமான பயிற்சி அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். கர்மயோகி பாரத் இணைய தளத்தை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான கருத்துகளை தெரிவிக்க வேண்டும். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பாதையில் நாம் நண்பர்களாகவும், சக பயணிகளாகவும் இருக்கிறோம். இந்த தொலைநோக்குப் பார்வையுடன் முன்நோக்கி செல்வதற்கு நாம் உறுதியேற்போம்.
நன்றி!