மத்திய அமைச்சரவையில் எனது சகாவான டாக்டர் ஜிதேந்திரசிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவல், மத்திய அமைச்சரவை செயலர், சிபிஐ இயக்குனர், மற்ற அதிகாரிகள், பெண்களே மற்றும் தாய்மார்களே! சிபிஐயின் 60 ஆண்டுகளை நிறைவு செய்யும் அதாவது சிபிஐயின் வைர விழாவை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இன்று சில நகரங்களில் தொடங்கப்பட்டுள்ள சிபிஐயின் புதிய அலுவலகங்கள், ட்விட்டர் பக்கங்கள் மற்றும் பிற அமைப்புகள் சிபிஐயை மேலும் வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். சிபிஐ தனது சேவை மற்றும் திறமை மூலம் பொதுமக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இன்றும் கூட, ஒரு வழக்கை தீர்க்க முடியாது என்று யாராவது நினைக்கும்போது, அதை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகின்றனர்.
சாமானியர்களின் இந்த நம்பிக்கையை வெல்வது என்பது எளிதான காரியம் அல்ல. இந்த அமைப்பில் கடந்த 60 ஆண்டுகளாக பங்காற்றிய அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். விருது பெற்றவர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது தரப்பிலிருந்து வாழ்த்துகள்.
நண்பர்களே,
நாடு ‘அமிர்த கால’ பயணத்தை தொடங்கியிருக்கும் நேரத்தில் இந்த விழா நடக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சியடையச் செய்ய வேண்டுமென கோடிக்கணக்கான இந்தியர்கள் தீர்மானித்துள்ளனர். தொழில்முறை மற்றும் திறமையான நிறுவனங்கள் இல்லாமல் வளர்ந்த இந்தியா சாத்தியமில்லை. எனவே, சிபிஐக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது.
நண்பர்களே,
சிபிஐ கடந்த 60 ஆண்டுகளில் பல பரிமாண புலனாய்வு அமைப்பாக சிபிஐ தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இன்று சி.பி.ஐ.யின் நோக்கம் பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. வங்கி மோசடிகள் முதல் வனவிலங்குகள் தொடர்பான குற்றங்கள் வரை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் முதல் சைபர் கிரைம் வரையிலான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது.
ஆனால் ஊழலில் இருந்து நாட்டை விடுவிப்பதே சிபிஐயின் முக்கியப் பொறுப்பு. ஊழல் என்பது சாதாரண குற்றம் அல்ல. ஊழல் ஏழைகளின் உரிமைகளைப் பறிக்கிறது; ஊழல் தொடர் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது. ஜனநாயகம் மற்றும் நீதியின் வழியில் ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளது. குறிப்பாக, அரசு இயந்திரத்தில் ஊழல் மேலோங்கும் போது, அது ஜனநாயகத்தை தழைக்க அனுமதிக்காது. எங்கே ஊழல் இருக்கிறதோ, அங்கு இளைஞர்களின் கனவுகளே முதலில் பலியாகி, இளைஞர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
நண்பர்களே,
10 ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் பொன்விழா கொண்டாடும்போது நாட்டின் நிலைமை எப்படி இருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அப்போது பல பெரிய மோசடிகள் நடந்தன. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். அன்றைய அமைப்பு தங்களிடம் இருப்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அதன் விளைவு என்ன? ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக, ஒட்டுமொத்த அமைப்பும் சிதையத் தொடங்கியது, மக்கள் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கத் தொடங்கினர். மேலும் கொள்கை முடங்கும் சூழல் ஏற்பட்டது. இது நாட்டின் வளர்ச்சியை முடக்கியது.
நண்பர்களே,
2014-ம் ஆண்டிலிருந்து எங்களின் முதல் பொறுப்பு, இந்த அமைப்பின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதாகும். எனவே கருப்புப் பணம் மற்றும் பினாமி சொத்துக்களுக்கு எதிரான போர்க்கால முறையில் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினோம். ஊழலை ஊக்குவிக்கும் வேர்களைத் தாக்க ஆரம்பித்தோம். அரசாங்க டெண்டர் நடைமுறைகள் மற்றும் அரசாங்க ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்தோம். இன்று ஒவ்வொரு துறையும் இந்த டிஜிட்டல் தளத்தில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
நண்பர்களே,
சைபர் கிரைம் போன்ற சவால்களை சமாளிக்க புதுமையான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். தொழில்நுட்பம் சார்ந்த தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்கள் அரசுடன் இணைய வேண்டும். நிறுத்தப்பட வேண்டிய 75 நடைமுறைகளை சிபிஐ தொகுத்துள்ளதாக எனக்குச் சொல்லப்படுகிறது. அதற்கான காலக்கெடுவுடன் நாம் செயல்பட வேண்டும்.
நண்பர்களே,
இந்த வைர விழாவின் முக்கியமான சந்தர்ப்பத்தில் உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த 15 ஆண்டுகள் மிகவும் முக்கியம், ஏனென்றால் அது உங்கள் திறன், அர்ப்பணிப்பு மற்றும் தீர்மானத்தை அது தீர்மானிக்கும். சிபிஐ தனது 75 ஆண்டுகளை நிறைவு செய்யும். 2047-ம் ஆண்டு சிபிஐ தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் போது மக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உங்கள் எழுச்சியை நாடு காண விரும்புகிறது.
உங்களுக்கு நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொல்கீன்
நன்றி!
இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.