மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் பெக்ரியால் நிஷாங்க்ஜி, அசாம் முதலமைச்சர் திரு. சர்பானந்த் சோனோவால்ஜி, மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு. சஞ்சய் தோத்ரேஜி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு வணக்கம்!
குவகாத்தி ஐஐடியின் 22-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். பட்டமளிப்பு விழா என்பது மாணவர்களின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க தருணமாகும். ஆனால், இந்த பட்டமளிப்பு விழா மாணவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கிறது. இந்த பெருந்தொற்று காலத்தில், பட்டமளிப்பு விழாவும் மாறிவிட்டது. வழக்கமான முறையில் இது நடைபெற்றிருந்தால், நான் உங்களிடையே நேரடியாக வந்து கலந்து கொண்டிருப்பேன். இருப்பினும் இதுவும் முக்கியமான நாள்தான். உங்கள் அனைவரையும், உங்களது எதிர்கால முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
நண்பர்களே, அறிவியலை உள்ளடக்கிய அறிவு, அனைத்து சிக்கல்களையும் தீர்த்து விடும். இந்த எழுச்சி, மக்களுக்கு தொண்டாற்றுவதற்கான பயணத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும். ஐஐடி போன்ற நிறுவனங்கள் இதனை முன்னெடுத்து செல்வது குறித்து நாம் பெருமையடைகிறோம். இங்கு வந்த பின்னர் உங்களது சிந்தனைகள் மாறியிருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஐஐடியில் நீங்கள் பயணித்தது முதல், உங்களிடத்தில் புதிய ஆளுமையை கண்டிருக்கலாம். இதுதான், உங்கள் பேராசிரியர்கள் வழங்கிய மதிப்பு மிக்க பரிசாகும்.
இளைஞர்கள் இன்று என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே நாட்டின் வளர்ச்சி அமையும் என நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் கனவுகள் இந்தியாவின் உண்மையான வடிவத்தை உருவாக்கப்போகிறது. எனவே, வருங்காலத்திற்காக தயாராகவும், தகுதியை வளர்த்துக் கொள்ளவும் இதுவே சரியான தருணமாகும். பொருளாதாரமும், சமுதாயமும் நவீனமயமாக மாறி வரும் இந்த நிலையில், இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்ப கட்டமைப்பில், பல முக்கிய மாற்றங்கள் அவசியமாகிறது. இந்த முயற்சியை கவுகாத்தி ஐஐடி ஏற்கனவே தொடங்கிவிட்டதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். எதிர்காலத்தை நோக்கிய முன்னெடுப்புகள் நிச்சயம் நல்ல பலனை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. ஆர்டி-பிசிஆர் கருவிகள், ஆர்என்ஏ கருவிகள் போன்ற கோவிட்-19 தொடர்பான உபகரணங்களை உருவாக்கி ஐஐடி கவுகாத்தி தனது திறனை நிரூபித்துள்ளது. இந்த பெருந்தொற்று காலத்திலும், நீங்கள் இதனைச் சாதித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றுவதை நோக்கிய உங்களது முயற்சிகளுக்கு எனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தன்னிறைவு இந்தியாவை உருவாக்குவதில் கல்வி முறை முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். தேசிய கல்வி கொள்கையை நீங்கள் படித்து தெரிந்து கொண்டிருக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கை உங்களைப் போன்ற 21-ம் நூற்றாண்டின் இளைஞர்களுக்கானது மட்டுமே. இந்தியாவை அறிவியல் தொழில்நுட்பத்தில் உலகிலேயே முன்னணி நாடாக மாற்றுவதில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும். உங்களைப் போன்ற மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாடங்களைக் கற்பதற்கு தேசிய கல்வி கொள்கை வழி வகுக்கிறது.
நண்பர்களே, உங்களது கல்விப் பயணத்தில், படிப்பும், தேர்வுகளும் மாணவர்களுக்கு ஒரு சுமையாக இருக்கக்கூடாது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடத்தைப் படிப்பதற்கு சுதந்திரம் வேண்டும். அதனால்தான், தேசிய கல்வி கொள்கையில் பல வழிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன. நீக்குப்போக்கான முறையில், பாடங்களைக் கற்க வழி உள்ளது. நாட்டின் புதிய கல்வி கொள்கை கல்வியை தொழில்நுட்பத்துடன் இணைக்கிறது. மாணவர்களின் சிந்தனையில், தொழில்நுட்பம் ஒரு பிரிக்கமுடியாத அம்சமாக மாற்றப்படும். மாணவர்கள் தொழில்நுட்பம் பற்றி மட்டும் படிக்காமல், தொழில்நுட்பம் மூலம் படிக்கும் நிலையை இது உருவாக்கும். இது உங்களுக்கு ஒரு வாய்ப்பாகும். நீங்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நம் நாட்டில் ஆராய்ச்சி கலாச்சாரத்தை செழுமைப்படுத்த தேசிய கல்வி கொள்கையில், தேசிய ஆராய்ச்சி பவுண்டேசன் என்பதை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்கு தேவைப்படும் நிதியை ஒருங்கிணைப்பதில் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்கும். இந்தப் பட்டமளிப்பு விழாவில், 300 பேருக்கு பிஎச்டி பட்டம் வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இது ஆக்கபூர்வமான போக்காகும். நீங்கள் அனைவரும் இத்துடன் நின்று விடாமல், ஆராய்ச்சியில் பங்கெடுக்க வேண்டும்.
நண்பர்களே, அறிவுக்கு எல்லை இல்லை என்பதை நாமனைவரும் அறிவோம். தேசிய கல்வி கொள்கை, கல்வித் துறையை திறந்து வைக்க உத்தேசித்துள்ளது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் தங்கள் வளாகங்களை இங்கு அமைக்க இதன் மூலம் வழிஏற்படும். இதன் மூலம், அந்த நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கும். இதே போல, ஆராய்ச்சியில், இந்திய –வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடையே ஆராய்ச்சி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வழி ஏற்படும். இந்தியாவை உலக கல்வி மையமாக மாற்றுவது, தேசிய கல்விக் கொள்கையின் நோக்கமாகும். நமது செயல்திறன் மிக்க கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் தங்கள் வளாகங்களை அமைக்க ஊக்கமளிக்கப்படும். ஐஐடி கவுகாத்தி இந்த வகையில் முக்கிய பங்காற்ற வேண்டும். வடகிழக்கு பிராந்தியம் இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் முக்கிய மையமாகும். தென்கிழக்கு ஆசியாவுடனான இணைப்புக்கு இந்தப் பிராந்தியம் நுழைவாயிலாக உள்ளது. தென்கிழக்காசிய நாடுகளின் கலாச்சாரம், வணிகம், இணைப்பு தொடர்புகளில் ஐஐடி கவுகாத்தி முக்கிய மையமாக உருவெடுக்கும். இந்தப் பிராந்தியத்தின் மேம்பாட்டுக்கும், புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், ரயில்வே, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் போன்ற கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் ஐஐடி கவுகாத்திக்கு முக்கிய பங்கு உள்ளது.
இந்தச் சிறப்பான தருணத்தில் உங்களுக்கு சில ஆலோசனைகளை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். நண்பர்களே, இந்தப் பிராந்தியம் உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பகுதியின் சவால்கள், பிரச்சினைகளை நீங்கள் உணரவேண்டும். உங்களது ஆராய்ச்சிகள் இந்தப் பகுதிக்கு பயனளிப்பதாக இருக்க வேண்டும். சூரிய சக்தி, காற்றாலை, உயிரி எரிபொருள், புனல் மின்சாரம் ஆகியவற்றை உற்பத்தி செய்ய மகத்தான வாய்ப்புகள் இங்கு உள்ளன. அரிசி, தேயிலை, மூங்கில் வளமும் நிறைந்துள்ளது. அதேபோல , இங்கு பல்லுயிர் பெருக்கத்துக்கும், பாரம்பரிய திறனுக்கும் குறைவில்லை. இவற்றில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செழுமைப்படுத்த வேண்டும். இதில் ஐஐடி கவுகாத்தி முக்கிய பங்காற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்திய அறிவு முறை மையத்தை உருவாக்கி, வடகிழக்குப் பிராந்தியத்துக்கு மட்டுமல்லாமல், நாட்டுக்கும், உலகிற்கும் மதிப்புமிக்க வகையில் நாம் பங்களிக்க முடியும்.
அசாமும், வடகிழக்குப் பகுதியும் பொதுவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ள பகுதியாகும். வெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவுகள், தொழில் குறைபாடுகள் என பிரச்சினைகள் அதிகம் உள்ள பகுதியாகவும் இது உள்ளது. இந்தப் பிரச்சினைகளைச் சமாளிப்பதிலேயே. இந்த மாநிலங்களின் ஆற்றலும், முயற்சிகளும் வீணாகின்றன. இந்தப் பிரச்சினைகளை திறமையுடன் சமாளிக்க, உயரிய தொழில்நுட்ப ஆதரவு அவசியமாகிறது. இதற்காக, பேரிடர் மேலாண்மை மற்றும் அபாயக் குறைப்பு மையத்தை ஐஐடி கவுகாத்தி அமைக்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன். இந்தப் பிராந்தியத்தில், இப்பிரச்சினைகளைச் சமாளிக்க நிபுணத்துவத்தை இந்த மையம் அளிக்கக்கூடும். இதன் மூலம், பேரிடர்களை வாய்ப்புகளாக மாற்ற வழி ஏற்படும். ஐஐடி கவுகாத்தியும், அதன் அனைத்து மாணவர்களும் இதனை செயல்படுத்த உறுதி மேற்கொள்ள வேண்டும். உள்ளூர் பிரச்சினைகளுடன், உலக அளவிலும் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் நாம் ஈடுபட வேண்டும்.
நணபர்களே, உலகில் எந்தப் பகுதிக்கு சென்றாலும், நீங்கள் ஐஐடி மாணவர் என்பதில் பெருமை கொள்ள முடியும். ஆனால், உங்களது வெற்றியும், உங்களது ஆராய்ச்சி பங்களிப்பும் , நீங்கள் இந்த ஐஐடி கவுகாத்தியின் மாணவர்கள் என்பதைப் பெருமையுடன் கூறுமளவுக்கு இருக்க வேண்டும் என உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கிறேன். ஐஐடி கவுகாத்தி ஆசிரியர்களுக்கு இந்த குருதட்சனையை நீங்கள் அளிப்பீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். நாடு முழுமையும், 130 கோடி மக்களும் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இதே வழியில் வெற்றியைத் தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். தன்னிறைவு இந்தியாவை உருவாக்க நீங்கள் முன்வரவேண்டும். பல புதிய உச்சங்களை நீங்கள் தொட வேண்டும். உங்களது அனைத்து கனவுகளும் நனவாக உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். கடின உழைப்பின் மூலம் அவை நிறைவேறும் வகையில் செயல்பாடுகளை வளர்த்துக் கொண்டு, வெற்றிகளைக் குவிக்க வேண்டும். இதுபோன்ற பல வாழ்த்துகளுடன், உங்கள் குடும்பம் நல்ல ஆரோக்கியத்துடன் திகழவும் வாழ்த்துகிறேன். மிக முக்கியமாக, இந்தக் கொரோனா காலத்தில், உங்களையும், குடும்பத்தினரையும், உங்களை சுற்றியிருப்பவர்களையும், நண்பர்களையும் நலத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்க உதவுவதுடன், நீங்களும் உங்கள் நலத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி. வணக்கம்.