மாண்புமிகு மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல் அவர்களே, பிரபலமான முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் அவர்களே, சிந்தியா பள்ளி வாரியத்தின் இயக்குநரும் அமைச்சரவையில் எனது நண்பருமான திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு நரேந்திர சிங் தோமர் அவர்களே, டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, பள்ளி நிர்வாகிகளே, அனைத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அன்பான இளம் நண்பர்களே!
சிந்தியா பள்ளியின் 125-வது ஆண்டு விழாவில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ரிஷி குவாலிபா முதல் இசை மேதை டான்சென், ஸ்ரீமந்த் மகாத்ஜி சிந்தியா, ராஜ்மாதா விஜயராஜே, அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் உஸ்தாத் அம்ஜத் அலி கான் வரை, குவாலியரின் இந்த நிலம் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது.
இந்த நிலம், பெண் சக்தி மற்றும் துணிச்சலான பெண்களின் இருப்பிடமாகும். மகாராணி கங்காபாய், சுதந்திரப் போருக்கு ராணுவத்திற்கு நிதியளிக்க தனது நகைகளை விற்றார். எனவே, குவாலியருக்கு விஜயம் செய்யும் போது இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நண்பர்களே,
மனசாட்சியுள்ள ஒருவர் உடனடி நன்மைகளுக்காக மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தை ஒளிரச் செய்வதற்காகவும் செயல்படுகிறார். ஒரு பழமொழியும் உண்டு. நீங்கள் ஒரு வருடம் யோசிக்கிறீர்கள் என்றால், விதைகளை விதைக்கிறீர்கள், ஒரு தசாப்தமாக யோசிக்கிறீர்கள் என்றால், மரங்களை நடுங்கள், நீங்கள் ஒரு நூற்றாண்டு சிந்திக்கிறீர்கள் என்றால், கல்வி தொடர்பான நிறுவனங்களை நிறுவுங்கள்.
சிந்தியா பள்ளி, மகாராஜா மாதோ ராவ் சிந்தியாவின் தொலைநோக்கு சிந்தனையின் விளைவாகும். மனித வளத்தின் சக்தியை அவர் அறிந்திருந்தார். மாதோ ராவ் அவர்களால் நிறுவப்பட்ட இந்திய போக்குவரத்து நிறுவனம் இன்னும் தில்லியில் டி.டி.சி.யாக செயல்படுகிறது என்பது சிலருக்குத் தெரிந்திருக்கலாம். எதிர்கால சந்ததியினருக்கான நீர் சேமிப்பிலும் அவர் கவனம் செலுத்தினார். அந்த சகாப்தத்தில், அவர் நீர் மற்றும் பாசனத்திற்கான ஒரு குறிப்பிடத்தக்க அமைப்பை நிறுவினார். 150 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆசியாவிலேயே மிகப்பெரிய மண் அணையாக 'ஹர்சி அணை' திகழ்கிறது. இந்த அணை இன்னும் மக்களுக்கு சேவை செய்து வருகிறது. மாதோ ராவ் அவர்களின் ஆளுமை நம் அனைவருக்கும் ஆழமான பாடங்களை வழங்குகிறது. கல்வி, தொழில், வாழ்க்கை அல்லது அரசியல் எதுவாக இருந்தாலும், நீண்ட கால கண்ணோட்டத்துடன் செயல்படுவது முக்கியம். குறுகிய காலங்கள் உங்களுக்கு உடனடி ஆதாயங்களைத் தரக்கூடும். ஆனால் சமூகத்திலோ அல்லது அரசியலிலோ உடனடி சுயநலத்திற்காக வேலை செய்பவர்கள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் தீங்கு விளைவிக்கிறார்கள்.
நண்பர்களே,
2014-ஆம் ஆண்டில், பிரதமர் பொறுப்பை நாடு என்னிடம் ஒப்படைத்தபோது, என் முன் இரண்டு விருப்பங்கள் இருந்தன. ஒன்று உடனடி ஆதாயங்களுக்காக மட்டுமே வேலை செய்யுங்கள் அல்லது நீண்ட கால அணுகுமுறையைப் பின்பற்றுங்கள். 2 ஆண்டுகள், 5 ஆண்டுகள், 8 ஆண்டுகள், 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் என வெவ்வேறு காலக் குழுக்களுடன் பணியாற்ற முடிவு செய்தோம். இன்று எங்கள் அரசு 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. இந்த 10 ஆண்டுகளில், நீண்ட கால திட்டமிடலுடன் நாடு எடுத்த முடிவுகள் முன்னெப்போதும் இல்லாதவை. நிலுவையில் உள்ள பல முடிவுகளின் சுமையிலிருந்து நாட்டை விடுவித்துள்ளோம். ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை 60 ஆண்டுகளாக இருந்து வந்தது. எங்கள் அரசு இதைச் செய்தது. முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை 40 ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்த கோரிக்கையை எங்கள் அரசு நிறைவேற்றியது. ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்த வேண்டும் என, 40 ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அதையும் எங்கள் அரசு செய்தது.
பல தசாப்தங்களாக, இஸ்லாமிய பெண்கள் முத்தலாக்கிற்கு எதிரான சட்டங்களை கோரி வந்தனர். முத்தலாக்கிற்கு எதிரான சட்டமும் எங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. சில வாரங்களுக்கு முன்புதான் மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதுவும் பல தசாப்தங்களாக நிலுவையில் இருந்தது.
இன்றைய இளைய தலைமுறையினருக்கு நாட்டில் மிகவும் சாதகமான சூழலை உருவாக்குவதே எனது முயற்சி. பெரிய கனவு கண்டு பெரிய சாதனைகளை படையுங்கள். அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை வளர்ச்சி அடையச் செய்ய உறுதி பூண்டுள்ளோம். இதை நீங்கள்தான் செய்ய வேண்டும், பாரதத்தின் இளைய தலைமுறையினர் இதைச் செய்ய வேண்டும். என் நம்பிக்கை உங்கள் மீது உள்ளது, எனது நம்பிக்கை இளைஞர்களின் திறன்களில் உள்ளது. இந்தக் கனவுகளைப் போற்றுவதன் மூலமும், கனவுகளை தீர்மானங்களாக மாற்றுவதன் மூலமும், தீர்வு அடையும் வரை நீங்கள் ஓய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
அடுத்த 25 ஆண்டுகளில், உங்கள் வாழ்க்கைக்கு எது இன்றியமையாததோ, அது பாரதத்திற்கும் மிகவும் முக்கியமானது.
நண்பர்களே,
இன்று பாரதத்தின் வெற்றி முன்னெப்போதும் இல்லாத உச்சத்தில் உள்ளது. பாரதத்தின் கொடி உலகம் முழுவதும் உயரமாக பறக்கிறது. ஆகஸ்ட் 23 அன்று, வேறு எந்த நாடும் அடையாத நிலவின் தென் துருவத்தை பாரதம் அடைந்தது. ஜி20 மாநாட்டின் போது இந்தியாவின் வெற்றியையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். இன்று, இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. உலகளாவிய நிதிநுட்ப தகவமைப்பு விகிதத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலகிலேயே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. திறன்பேசி தரவு நுகர்விலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இன்று இந்தியா உலகின் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. இன்று, பாரதம், உலகின் இரண்டாவது பெரிய திறன்பேசி உற்பத்தியாளராக உள்ளது. இன்று, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழலியலைக் கொண்டுள்ளது. இன்று, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய எரிசக்தி நுகர்வோராக உள்ளது. இன்று, பாரதம் தனது விண்வெளி நிலையத்தை விண்வெளியில் நிறுவ தயாராகி வருகிறது. இன்று காலை, ககன்யானின் வெற்றிகரமான சோதனை ஓட்டம் மற்றும் 'க்ரூ எஸ்கேப் சிஸ்டம்' வெற்றிகரமான சோதனையை நீங்கள் பார்த்தீர்கள். இன்று பாரதத்தால் முடியாதது எதுவுமில்லை. பாரதத்தின் வளர்ந்து வரும் திறன்கள் ஒவ்வொரு துறையிலும் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
2014-க்கு முன்பு நம் நாட்டில் சில நூறு புத்தொழில் நிறுவனங்கள் இருந்தன. இன்று, இந்தியாவில் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்தை எட்டுகிறது. கடந்த சில ஆண்டுகளில், பாரதம், 100 க்கும் மேற்பட்ட அதிக முதலீட்டு நிறுவனங்களை உற்பத்தி செய்துள்ளது.
முன்பெல்லாம் அரசு மட்டுமே செயற்கைக் கோள்களை உருவாக்குவதோ அல்லது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதோ வழக்கம். இளைஞர்களாகிய உங்களுக்காக விண்வெளித் துறையில் வாய்ப்புகளை வழங்கியுள்ளோம். முன்பெல்லாம் ராணுவ தளவாடங்கள் அரசால் மட்டுமே தயாரிக்கப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இளைஞர்களாகிய உங்களுக்காக பாதுகாப்புத் துறையையும் திறந்து விட்டுள்ளோம். இந்தியாவில் இப்போது உங்களுக்காக பல துறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
'மேக் இன் இந்தியா' திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ‘தற்சார்பு இந்தியா' என்ற தீர்மானத்தை நீங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
நவராத்திரியின் இந்த புனித சந்தர்ப்பத்தில், நான் உங்களுக்கு ஒன்பது பணிகளைக் கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
முதலாவதாக - நீங்கள் அனைவரும் இங்கே நீர் சேமிப்பில் மிகவும் உழைக்கிறீர்கள். நீர் பாதுகாப்பு என்பது 21 ஆம் நூற்றாண்டின் ஒரு பெரிய சவாலாகும். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பிரச்சாரத்தை நடத்துங்கள்.
இரண்டாவது - சிந்தியா பள்ளியில் கிராமங்களை தத்தெடுக்கும் பாரம்பரியம் உள்ளது. கிராமங்களுக்குச் சென்று டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
மூன்றாவது - தூய்மையின் பணி. உங்கள் நகரத்தை தூய்மையில் முன்னிலைபடுத்துவதற்கான சவாலை எடுத்துக் கொள்ளுங்கள்.
நான்காவதாக – உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுத்தல்... முடிந்தவரை, உள்ளூர் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள்.
ஐந்தாவது - முதலில் பாரதப் பயணம்... முடிந்தவரை, முதலில் உங்கள் சொந்த நாட்டைப் பாருங்கள், உங்கள் நாட்டில் பயணம் செய்யுங்கள், பின்னர் வெளிநாடுகளை நோக்கித் திரும்புங்கள்.
ஆறாவது - இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல். பூமித் தாயைக் காப்பாற்ற இது மிகவும் அவசியமான பிரச்சாரமாகும்.
ஏழாவதாக - சிறுதானியங்களான 'ஸ்ரீ அண்ணா'வை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
எட்டாவது - உடற்பயிற்சி, அது யோகாவாக இருந்தாலும் சரி அல்லது விளையாட்டாக இருந்தாலும் சரி, அதை உங்கள் வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக ஆக்குங்கள்.
ஒன்பதாவது - குறைந்தபட்சம் ஒரு ஏழைக் குடும்பத்தையாவது உயர்த்த வேண்டும்.
மீண்டும் ஒரு முறை சிந்தியா பள்ளிக்கும், அனைத்து இளம் நண்பர்களுக்கும் சிறந்த எதிர்காலத்திற்காக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
அனைவருக்கும் நன்றி. வணக்கம்!