வணக்கம்!
இந்த ஆண்டுக்கான பட்ஜெட், 21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் வளர்ச்சிக்கான வேகத்தை நிர்ணயித்துள்ளது. "உள்கட்டமைப்பு அடிப்படையிலான வளர்ச்சி"யின் இந்த திசை நமது பொருளாதாரத்தின் திறனை அபரிமிதமாக அதிகரிக்கும். இதன் மூலம் நாட்டில் பல புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
நண்பர்களே,
தேவைக்கேற்ப உள்கட்டமைப்பை உருவாக்குவதே இதுவரை நாட்டின் அனுபவமாக இருந்தது. தேவைக்கேற்ப துண்டு துண்டாகச் செய்து வந்தனர். இதன் விளைவாக, மத்திய, மாநிலங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் துறையின் ஒருங்கிணைப்பு இல்லாததால் நாடு மிகவும் பாதிக்கப்பட்டது. உதாரணமாக, முரண்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமையை நாம் அடிக்கடி காணும் ரயில் அல்லது சாலைத் திட்டங்களை எடுத்துக் கொள்ளுங்கள். எங்காவது ஒரு சாலை அமைக்கப்பட்டு, மறுநாளே தண்ணீர் குழாய்கள் போடுவதற்காக தோண்டப்பட்டது. சாலை புனரமைக்கப்பட்டதும், பாதாள சாக்கடை பணியாளர்கள் மீண்டும் தோண்டினர். பல்வேறு துறைகளிடம் தெளிவான தகவல்கள் இல்லாததால் இப்படி நடக்கிறது. இப்போது பிரதமரின் கதிசக்தி (திட்டம்) காரணமாக அனைவரும் தங்கள் திட்டங்களை முன்கூட்டியே முழுமையான தகவல்களுடன் உருவாக்க முடியும். நாட்டின் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கும் இது வழிவகுக்கும்.
நண்பர்களே,
அரசு கவனம் செலுத்தி வரும் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பிரதமரின் கதிசக்தி மிகவும் அவசியமானது. 2013-14-ல் இந்திய அரசின் நேரடி மூலதனச் செலவு சுமார் 1.75 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, 2022-23-ல் இது 7.50 லட்சம் கோடி ரூபாயாக நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமானப் பாதைகள், நீர்வழிகள், கண்ணாடி இழை இணைப்பு, எரிவாயு அல்லது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என அனைத்து துறைகளிலும் அரசு முதலீட்டை அதிகரித்துள்ளது. இந்தத் துறைகளில் எங்கள் அரசு லட்சியமிக்க இலக்குகளை நிர்ணயித்துள்ளது. உள்கட்டமைப்புத் திட்டமிடல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றை மிகவும் ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல முடிவதோடு, பிரதமரின் கதிசக்தி மூலம் புதிய திசையில் செயல்பட முடியும். திட்டங்களின் நேரத்தையும் செலவையும் இது குறைக்கும்.
நண்பர்களே,
முதலீட்டை ஈர்க்கும் பெருக்க விளைவை உள்கட்டமைப்பு கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். வாழ்க்கையை எளிதாக்குவதுடன், வணிகம் செய்வதையும் இது எளிதாக்குகிறது. அனைத்து துறைகளின் பொருளாதார உற்பத்தித்திறனையும் இது ஊக்குவிக்கிறது. உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நாடு இதற்கு முன் இல்லாத வேகத்தை கொடுக்கும்போது, பொருளாதாரச் செயல்பாடுகள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் அதிகரிக்கும்.
நண்பர்களே,
கூட்டாட்சிக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் மாநிலங்களுக்கு உதவுவதற்காக ஒரு லட்சம் கோடி ரூபாயை இந்த ஆண்டு பட்ஜெட்டில் எங்கள் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மாநில அரசுகள் இந்தத் தொகையை பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்திதிறன் மிக்க சொத்துகளுக்கு பயன்படுத்த முடியும். நாட்டின் அணுக முடியாத மலைப்பாங்கான பகுதிகளில் இணைப்பை மேம்படுத்த தேசிய ரோப்வே மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படுகிறது. வடகிழக்கின் சமச்சீர் வளர்ச்சியிலும் எங்கள் அரசு அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது. இந்த மாநிலங்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, பிரதமரின்-டிவைன் (PM-DevINE) திட்டமும் ரூ.1500 கோடியில் அறிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் திட்டத்துடன் உள்கட்டமைப்புத் துறையில் அரசு செய்து வரும் முதலீடு, வரும் ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியைப் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்லும். இந்த முயற்சிகள் அனைத்தும் உள்கட்டமைப்பு உருவாக்கத்தின் இந்த புதிய சகாப்தத்தில் புதிய பொருளாதார வாய்ப்புகளின் கதவுகளை உங்களுக்கு திறக்கும். அரசுடன் இணைந்து படிப்படியாகச் செயல்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்குப் பெருமையான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று கார்ப்பரேட் உலகத்தை, நாட்டின் தனியார் துறையை நான் கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர்களே,
பிரதமரின் கதிசக்தி தேசிய மாபெரும் திட்டத்தில் இப்போது 400-க்கும் மேற்பட்ட தரவு அடுக்குகள் உள்ளன என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஏற்கனவே உள்ள மற்றும் திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்பு பற்றிய தகவல்களை இது வழங்குவதோடு மட்டுமல்லாமல், வன நிலம், கிடைக்கக்கூடிய தொழில்துறை நிலம் போன்ற தகவல்களையும் கொண்டுள்ளது. தனியார் துறையினர் அதைத் தங்கள் திட்டமிடலுக்கு முடிந்தவரை பயன்படுத்த வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். தேவையான அனைத்து தகவல்களும் தேசிய மாஸ்டர் திட்டத்தில் ஒரே தளத்தில் கிடைக்கின்றன, இது விரிவான திட்ட அறிக்கை நிலையிலேயே திட்ட சீரமைப்பு மற்றும் பல்வேறு வகையான அனுமதிகளைப் பெறுவதைச் சாத்தியமாக்கும். உங்கள் இணக்கச் சுமையைக் குறைக்கவும் இது உதவியாக இருக்கும். மாநில அரசுகள் தங்கள் திட்டங்கள் மற்றும் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான அடிப்படையாக பிரதமர்-கதி சக்தி தேசிய மாபெரும் செயல்திட்டத்தை மாற்ற வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகிறேன்.
நண்பர்களே,
இன்றும் கூட, இந்தியாவில் சரக்குப் போக்குவரத்து செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 முதல் 14 சதவீதம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது அதிகம். உள்கட்டமைப்புத் திறனை மேம்படுத்துவதில் பிரதமர் கதிசக்திக்கு பெரும் பங்கு உள்ளது. நாட்டில் சரக்குப் போக்குவரத்துச் செலவைக் குறைப்பதற்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் யூனிஃபைட் லாஜிஸ்டிக் இன்டர்ஃபேஸ் பிளாட்ஃபார்ம் (யுலிப்) எனும் ஒருங்கிணைந்த சரக்குப் போக்குவரத்து இடைமுக மேடையை உருவாக்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு அமைச்சகங்களின் டிஜிட்டல் அமைப்புகள் அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப செயல்படுகின்றன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். யுலிப் மூலம் ஆறு அமைச்சகங்களின் இருபத்தி நான்கு டிஜிட்டல் அமைப்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. தேசிய ஒற்றைச் சாளரச் சரக்குப் போக்குவரத்துத் தளத்தை இது உருவாக்கும், சரக்குப் போக்குவரத்து செலவைக் குறைக்க உதவும். பிரதமரின் கதி-சக்தி நமது ஏற்றுமதிகளுக்கும் உதவும், மேலும் நமது சிறு, குறு, நடுத்தர தொழில்கள் உலக அளவில் போட்டித்தன்மையுடன் இருக்கவும் உதவும். சரக்குப் போக்குவரத்துத் திறனை மேம்படுத்துவதற்காக அரசின் அனைத்துத் துறைகளிலும் சிறந்த ஒருங்கிணைப்பிற்காக சரக்குப் போக்குவரத்துப் பிரிவு மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழுவையும் எங்கள் அரசு அமைத்துள்ளது. பிரதமரின் கதிசக்தியில் தொழில்நுட்பத்தின் பெரிய பங்கை நீங்கள் பார்க்கலாம். நமது உள்கட்டமைப்புத திட்டங்களுக்கு நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவதற்கு அரசுகள் மற்றும் தனியார் துறைகள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தரம், குறைந்த செலவு மற்றும் நேரத்தின் அடிப்படையில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மனிதர்களால் ஏற்படும் இழப்பை விட இயற்கைப் பேரழிவுகள் உள்கட்டமைப்பிற்கு அதிக அழிவை ஏற்படுத்துகின்றன என்பது உலகம் முழுவதும் கண்டறியப்பட்டுள்ளது. பல பாலங்கள் இடிந்து, அவற்றை மீண்டும் கட்ட 20 ஆண்டுகள் ஆகும். எனவே, பேரிடரை தாங்கும் உள்கட்டமைப்பு இன்று மிகவும் இன்றியமையாததாகிவிட்டது. தொழில்நுட்பம் இல்லாவிட்டால், அந்தத் திசையில் நாம் செயல்பட முடியாது. எனவே, தொழில்நுட்பத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்த வேண்டும். சரக்குப் போக்குவரத்து துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் உலகத்தரம் வாய்ந்த அறிவு மற்றும் கருவிகளைக் கொண்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி, நாட்டில் கிடைக்கும் தரவுகள் சிறப்பாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
நண்பர்களே,
திட்டமிடல் முதல் மேம்பாடு மற்றும் பயன்பாட்டு நிலை வரை உள்கட்டமைப்பு உருவாக்கத்தில் உண்மையான பொது-தனியார் கூட்டை கதிசக்தி உறுதி செய்யும். அரசு நிறுவனங்களுடன் இணைந்து தனியார் துறை எவ்வாறு சிறந்த விளைவுகளை அடைய முடியும் என்பது குறித்தும் இந்த வலையரங்கில் விவாதிக்கப்பட வேண்டும். அனைத்துப் விஷயங்களையும் நீங்கள் ஆழமாக விவாதிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். உள்கட்டமைப்பு தவிர, விதிகள் மற்றும் கொள்கைகளில் தேவையான மாற்றங்கள் தொடர்பான உங்கள் பரிந்துரைகளும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவது இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்தும். பிரதமரின் கதிசக்தி தேசிய மாபெரும் செயல்திட்டம் இதில் ஒரு முக்கிய பங்காற்றும். இந்த வலையரங்கு வெற்றியடைய வாழ்த்துகிறேன், உங்கள் அனுபவங்களிலிருந்து நாம் அனைவரும் பயனடைவோம் என்று நம்புகிறேன்.
இன்றைய வலையரங்கம் நமது அரசின் உரைகளை வழங்குவதற்கானது அல்ல என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். நாங்கள் உங்களிடமிருந்து கேட்க விரும்புகிறோம். பட்ஜெட் அறிவிப்புகளைக் கருத்தில் கொண்டு நீங்கள் ஆலோசனைகளை வழங்கினால் நன்று. அடுத்த ஆண்டு பட்ஜெட்டை உருவாக்கும் போது உங்களின் பரிந்துரைகளைப் பற்றி நாங்கள் சிந்திப்போம். அந்த நேரத்தில் எனக்கு எழுதுங்கள். நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை நாம் எந்தளவுக்கு சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும் என்பதை இப்போதே வலியுறுத்த வேண்டும். ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய பட்ஜெட் அமலுக்கு வருகிறது. இந்த மார்ச் மாதத்தை அதிகபட்சமாக பயன்படுத்திக்கொண்டு ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்தே பட்ஜெட் திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்குவோம். இதை நம்மால் செய்ய முடியுமா?
முன்பெல்லாம் உலக மக்கள் அனைவரும் ஆறுகளுக்கு அருகிலேயே வாழ்ந்து வந்தனர். ஆறுகள் மற்றும் கடல்களுக்கு அருகில் பெரிய நகரங்கள் உருவாக்கப்பட்டன. அமைப்புகள் உருவாகின. மெல்ல மெல்ல, அங்கிருந்து நகர்ந்து நெடுஞ்சாலைகளுக்கு அருகில் செல்வதன் மூலம் உலகம் செழித்தது. கண்ணாடி இழை இருக்கும் இடத்தில் உலகம் செழிக்கும் என்று இப்போது தெரிகிறது. காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. தனிமைப்படுத்தப்பட்ட உள்கட்டமைப்புக்கு இடமில்லை என்பதே இதன் பொருள். அதைச் சுற்றி ஒரு புதிய சுற்றுச்சூழல் உருவாகிறது. கதிசக்தி மாபெரும் செயல்திட்டம் இந்த விஷயத்திலும் நமக்கு நிறைய பயனளிக்கும். எனவே, பட்ஜெட்டை முறையாக அமல்படுத்த வேண்டும். ஆறு மாதங்களாக கோப்புகள் நகர்ந்து கொண்டேயிருப்பதிலும், பின்னர் புதிய பட்ஜெட் தயாராவதாலும் அரசு இயந்திரத்திலும் சில குறைபாடுகள் உள்ளன. உங்களிடம் முன்கூட்டியே பேசுவதன் நன்மை என்னவென்றால், ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அரசு அமைப்புகள் சாதகமாகவும் உடனடியாகவும் பதிலளிக்கும். எனவே, நீங்கள் ஆழமாக பங்களிக்க வேண்டும். இதுவே எனது எதிர்பார்ப்பு. உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்! மிக்க நன்றி!