நண்பர்களே,
இந்த அமிர்த காலத்தில் திறனும், கல்வியும் நாட்டின் இரண்டு மிக முக்கிய கருவிகள். வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையுடன் நாட்டின் அமிர்த யாத்திரையை நமது இளைஞர்கள் வழி நடத்திச் செல்கின்றனர். எனவே அமிர்த காலத்தின் முதல் நிதிநிலை அறிக்கையில் இளைஞர்களுக்கும் அவர்களது எதிர்காலத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை, கற்றல் மற்றும் திறன் இரண்டிற்கும் சம அளவு முக்கியத்துவம் அளிக்கிறது.
நண்பர்களே,
புது விதமான வகுப்பறைகளை உருவாக்குவதில் புதிய தொழில்நுட்பங்களும் உதவி வருகின்றன. கொவிட் காலத்தில் இதை நாம் உணர்ந்துள்ளோம். அதனால் தான் அதுபோன்ற சாதனங்களில் அரசு தற்போது கவனம் செலுத்தி வருவதுடன் அதன் மூலம் 'எங்கிருந்தும் அறிவை அணுகுவது' என்பதை உறுதி செய்ய முடியும். இளைஞர்களுக்கு வகுப்பறைக்கு வெளியே அனுபவம் கிடைப்பதற்காக நேரடி நிறுவன அனுபவப் பயிற்சி மற்றும் தொழில் பயிற்சியில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. தேசிய நேரடி நிறுவன அனுபவப் பயிற்சி தளத்தில் 75,000 பணி வழங்குவோர் பதிவு செய்துள்ளனர். இந்த தளத்தை அதிகம் பயன்படுத்துமாறு தொழில்துறையினர் மற்றும் கல்வி நிறுவனங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர்களே,
தொழில் பயிற்சி, நமது இளைஞர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்த உதவுவதாக நான் நம்புகிறேன். இந்தியாவில் இந்த பயிற்சியையும் நாம் ஊக்குவிக்கிறோம். சரியான திறன் கொண்ட பணியாளர்களை கண்டறிவதற்கு தொழில்துறையினருக்கு இது உதவியளிக்கும். எனவே தேசிய தொழில் பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் சுமார் 50 லட்சம் இளைஞர்களுக்கு ஊதியத்துடன் கூடிய வேலை அளிக்க இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இன்று இந்தியாவை உற்பத்தி முனையமாக உலகம் நோக்குகிறது. அதனால்தான் இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளன. இத்தகைய தருணத்தில் திறன் வாய்ந்த பணியாளர்கள் மிகவும் அவசியம். பிரதமரின் கௌசல் விகாஸ் திட்டம் 4.0, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வரும் ஆண்டுகளில் திறன் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கும். இது தவிர செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், ட்ரோன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நான்காவது கட்ட தொழிற்புரட்சியின் கீழ் பணியாளர் திறன் மேம்படுத்தப்படுகிறது.
இந்தக் கருத்தரங்கில் ஆக்கபூர்வமான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு, நல்ல தீர்வுகளும், கருத்துகளும் முன்வைக்கப்படும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். உங்களுடன் இணைந்து பணியாற்ற அரசு தயாராக உள்ளது. உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
நன்றி!