வணக்கம்,
தேசிய அறிவியல் நாள் குறித்த இன்றைய பட்ஜெட் கருத்தரங்கின் தலைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தொழில்நுட்பத்தின் உதவியுடன் மக்களை தொடர்ந்து அதிகாரப்படுத்தி 21 ஆம் நூற்றாண்டுக்கு அரசு தயார்படுத்தி வருகிறது.
நண்பர்களே,
முந்தைய அரசுகள் முன்னுரிமை அளித்த அம்சங்களில் முரண்பாடுகள் இருந்தன. குறிப்பிட்ட பிரிவினர் அரசை எப்போதும் எதிர்பார்த்து இருந்தனர். அவர்களது வாழ்க்கை முழுவதும் நவீன வசதிகள் விடுபட்டு போனது, முன்னேற விரும்பிய மற்றொரு பிரிவினர், முந்தைய அரசுகளின் அழுத்தம் மற்றும் தடைகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். தேவைப்படும் இடங்களில் அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகள் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவை வாழ்வை எளிதாக்கியிருக்கின்றன. அரசின் தலையீடுகள் தற்போது குறைந்துள்ளது. பொதுமக்கள் அரசை தடையாக நினைப்பதில்லை. மாறாக மக்கள் அரசை தற்போது ஒரு ஊக்கசக்தியாகப் பார்ப்பதுடன், இதில் தொழில்நுட்பம் மிகப் பெரிய பங்காற்றுகிறது.
நண்பர்களே,
“ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை”, ஜன் தன், ஆதார் மொபைல், ஆரோக்கிய சேது மற்றும் கொவின் செயலி, ரயில் முன்பதிவு, இ-சேவை மையங்கள் உள்ளிட்டவை மக்களின் வாழ்வை எளிதாக்கியுள்ளன.
அரசுடனான மக்களின் தகவல் தொடர்பு தற்போது எளிதாகியுள்ளது., இதன் மூலம் மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வைப் பெற்று வருகின்றனர். பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து சிந்தித்து தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு உலகளாவிய தரத்தை எட்டும் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒரு முன்னேற்றமாக அரசுடனான மக்கள் தொடர்பு அதிகம் தேவைப்படும் இடங்களைக் கண்டறிந்து தொடர்பு நடைமுறைகளை மேலும் எளிதாக்க வேண்டும்.
அரசு ஊழியர்கள் மேலும் மக்கள் நலனை மையமாகக் கொண்டவர்களாக மாறும் வகையில், பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சி முறைகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்படும் போது நல்ல முன்னேற்றம் ஏற்படும். பயிற்சிகளை மேம்படுத்தும் வகையில், பின்னூட்டக் கருத்துக்களை எளிதில் தெரிவிக்கும் வகையிலான நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.
தொழில்நுட்பத்தின் பயன்கள், அனைவரையும் சென்றடைவதுடன், தொழில்நுட்ப மேம்பாடுகளுக்காக அரசு மிகப் பெரிய அளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. நவீன டிஜிட்டல் உள்கட்டமைப்பு உருவாக்கப்படுவதுடன் இவற்றின் பலன்கள் அனைவருக்கும் சமஅளவில் சென்றடைவதை அரசு உறுதி செய்து வருகிறது. அரசு மின்சந்தை இணையதளம் மூலம் சாதாரண தொழில் நடத்துவோரும், சாலையோர வியாபாரிகளும் அரசின் கொள்முதல் நடவடிக்கைகளில் பங்கேற்க முடியும். அதே போல் இ-நாம் தளம் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களை விவசாயிகளுடன் இணைக்கிறது.
நண்பர்களே,
5-ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு, தொழில்துறை, மருத்துவம், கல்வி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் மிகப் பெரிய
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சில இலக்குகளை நிர்ணயித்து நாம் செயல்பட வேண்டும். கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகள் மற்றும் சாதாரண மக்களின் நலன்களில் தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆராயவேண்டும். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சமூகத்தில் தீர்க்கக் கூடிய 10 சிக்கல்களை அடையாளம் காணவேண்டும். அரசின் டிஜிலாக்கர் சேவை மூலம், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு துறையினர் தங்களது ஆவணங்களை இதில் சேமித்து வைத்து அவற்றை அரசுக்குப் பகிர முடியும். இந்த சேவைகளை விரிவாக்குவதற்கான வழிவகைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இதனால் மேலும் பலர் பயனடைவார்கள்.
கடந்த சில ஆண்டுகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள தடைகளைக் கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கு தீவிரமாக செயலாற்ற வேண்டும். தொழில் துறை சொற்களில் நேரத்தை மதிப்பு மிக்க செல்வம் என்று குறிப்பிடலாம். சிறு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் குறைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் நேர விரயம் தவிர்க்கப்படுகிறது. தேவையற்ற சுமைகள் குறித்த பட்டியலைத் தயாரிக்க இது சரியான நேரம். 40,000-க்கும்மேற்பட்ட சுமைகளுக்கு அரசு கடந்த காலத்தில் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நண்பர்களே,
அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான நம்பிக்கை குறைந்தால் அடிமைத்தன மனநிலை ஏற்படும். சிறு குற்றங்களை, குற்றங்களாகக் கருதாத நடைமுறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் போன்றவற்றின் மூலம் மக்களின் நம்பிக்கையை இந்த அரசு வென்றுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளில், சிறந்த நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்து அனுபவங்களை அதிகம் பெற்று அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் செயலாற்ற வேண்டும்.
நண்பர்களே,
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உலகச் சந்தைக்குக் கொண்டு செல்வதற்கு தொழில்நுட்பம் உதவிகரமாக அமையும். டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் இணையதளத்துடன் மட்டும் தங்களை சுருக்கிக் கொள்ளக் கூடாது. பட்ஜெட் அல்லது அரசின் பிற கொள்கைகளின் வெற்றி அவை எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதோடு மட்டுமல்லாமல் மக்களின் ஒத்துழைப்பையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் அறிவார்ந்த இளைஞர்கள், திறன் வாய்ந்த மனித வளம் ஆகியவை உள்ளன. இதை வைத்து, கிராமங்களில் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். பட்ஜெட்டிலிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு அம்சங்களை விவாதிக்க வேண்டும்.
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், மிக்க நன்றி