குஜராத் மாநில ஆளுநர் திரு ஆச்சாரிய தேவ்ரத் அவர்களே, முதலமைச்சர் திரு புபேந்திர பாய் படேல் அவர்களே, குஜராத் மாநில அமைச்சர்களே, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சூரத் நகரின் மேயர் அவர்களே, வேளாண் துறையைச் சேர்ந்த வல்லுநர்களே, குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு சி. ஆர். பாட்டில் அவர்களே, எனதருமை சகோதர சகோதரிகளே!
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 75 விவசாயிகளை இயற்கை விவசாயத்துடன் இணைப்பதில் சூரத் அடைந்துள்ள வெற்றி, ஒட்டுமொத்த நாட்டிற்கும் முன்மாதிரியாகத் திகழவுள்ளது. நமது வேளாண் அமைப்புமுறைதான் நம் வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் சமூகத்தின் முதுகெலும்பு. இயற்கையாகவும், கலாச்சார ரீதியாகவும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. எனவே நமது விவசாயிகள் வளர்ச்சி அடையும் போது, நமது விவசாயமும், நாடும் முன்னேறி, வளமடையும். இயற்கை விவசாயம் என்பது பொருளாதார ரீதியான வெற்றி மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக, நமது பூமி அன்னைக்கான சேவையின் மிகச்சிறந்த ஊடகமும் ஆகும். இயற்கை விவசாயத்தில் ஈடுபடும்போது நீங்கள் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் சேவை புரிகிறீர்கள்.
நண்பர்களே,
இன்று, ஒட்டுமொத்த உலகமும் நிலையான வாழ்க்கைமுறை மற்றும் சுகாதாரமான உணவு பழக்கவழக்கங்கள் பற்றி பேசி வருகின்றது. இந்தத் துறையில் இந்தியாவிற்கு ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அறிவும், அனுபவமும் உள்ளது. பல நூற்றாண்டுகளாக இந்தப் பாதையில் உலகை நாம் வழி நடத்தி வருகிறோம். எனவே இயற்கை விவசாயம் போன்ற பிரச்சாரங்களை முன்னெடுத்துச் சென்று, வேளாண்மை சம்பந்தமான சர்வதேச பயன்களை அனைவருக்கும் வழங்கும் வாய்ப்பை நாம் பெற்றுள்ளோம். இந்த விஷயத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக நாடு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
வேளாண்மையை எவ்வாறு மேம்படுத்துவது, இருப்பில் உள்ள வளங்களைக் கொண்டு விவசாயிகளுக்கு எவ்வாறு அதிகாரமளிப்பது, நமது பூமி அன்னையை எவ்வாறு பாதுகாப்பது போன்ற விஷயங்கள் குறித்து புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுமாறு விஞ்ஞானிகளுக்கு சிறப்பு கோரிக்கையை முன்வைக்கிறேன். ஒவ்வொரு கிராமத்திலும் 75 விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் இணையும் இந்த பிரச்சாரத்தில், வெகுவிரைவில் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் சுமார் 750 விவசாயிகள் இணைவார்கள் என்று நான் நம்புகிறேன். முழு மாவட்டமும் இணைந்த பிறகு, உலகம் முழுவதிலும் இருந்து இந்தப் பொருட்களுக்கான தேவை பெருமளவு அதிகரிக்கும். பிறகு இந்தத் திட்டத்தை அனைவரும் பின்பற்றுவார்கள். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.
மனமார்ந்த வாழ்த்துகள்!