உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் திருமிகு ஆனந்திபென் பட்டேல் அவர்களே, முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, எனது அமைச்சரவை நண்பர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, பல்வேறு திட்டங்களின் பயனாளிகளே, காசி நகரைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளே.
நாடு மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான சிவ பக்தர்கள் இந்தக் காலகட்டத்தில் காசி நகருக்கு நாள்தோறும் திரண்டு வருகிறார்கள். ஜி 20 உச்சிமாநாட்டின் போது ஏராளமான நாடுகளைச் சேர்ந்த மக்கள் பனாரஸிற்கு வந்திருந்தனர். நீங்கள் அவர்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இன்று காசி உள்பட உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் ரூ. 12,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, நிறைவடைந்த திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. ரயில்வே, சாலைகள், தண்ணீர், கல்வி மற்றும் சுற்றுலா சம்பந்தமான திட்டங்கள் இதில் அடங்கும்.
நண்பர்களே,
சற்று முன்புதான் பிரதமரின் வீட்டு வசதி மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடினேன். முந்தைய அரசுகள் குளிரூட்டப்பட்ட அறைகளில் உட்கார்ந்து கொண்டு திட்டங்களை வகுத்தது தான் மிகப்பெரிய பிரச்சினையாக அவர்கள் கருதினார்கள். இத்தகைய திட்டங்கள் சமூகத்தின் அடித்தட்டு அளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அந்த அரசுகள் அப்போது அறியவில்லை. ஆனால் பாஜக அரசு பயனாளிகளுடன் கூட்டங்களை நடத்தி, அவர்களுடன் ஆலோசித்து, திட்டங்களை வகுப்பதை புதிய வழக்கமாகக் கொண்டுள்ளது. திட்டங்களின் உண்மையான பயனாளிகளைக் கண்டறிந்து, திட்டங்கள் அவர்களை முறையாகச் சென்றடைவதை உறுதி செய்து, அதன் முழு பயன்கள் அவர்களை எட்டுவதற்காக அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்கிறோம்.
நண்பர்களே,
எதிர்கால சூழ்நிலைகளை மேம்படுத்துவதற்காகவும், வருங்கால சந்ததியினரின் நலனுக்காகவும் கடந்த 9 ஆண்டுகளில் நாங்கள் திட்டங்களை வகுத்து வருகிறோம். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை நான்கு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் உறுதியான வீடுகளை பெற்றுள்ளனர். இது போன்ற வீடுகளை பெரும்போது ஏழைப் பயனாளிகளின் பெரும்பாலான கவலைகள் தீர்க்கப்படுவதோடு, பாதுகாப்பு உணர்வு மேலோங்குகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்பது, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிகிச்சையை இலவசமாக வழங்குவது மட்டுமல்ல. பல தலைமுறையினரின் ஏராளமான பிரச்சனைகளை இத்திட்டம் போக்குகிறது. அதனால்தான் இதன் பயன்கள் உரியவர்களை முறைப்படி சென்றடைய தேவையான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன.
உங்களது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஹர ஹர மகாதேவா.