ராஜஸ்தான் ஆளுநர் திரு கல்ராஜ் மிஸ்ரா அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு நிதின் கட்காரி அவர்களே, திரு அர்ஜுன் மேக்வால் அவர்களே, திரு கஜேந்திர ஷெகாவத் அவர்களே, திரு கைலாஷ் சவுத்ரி அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர சகோதரிகளே!
இன்று 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் பிகானேரிலும், ராஜஸ்தானிலும் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாதங்களிலேயே நவீன ஆறு வழி விரைவுச் சாலை இந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி முன்னேற்றுவதற்காக பசுமை எரிசக்தி வழித்தடமும் இன்று திறக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு மாநிலத்தின் திறன்களும், திறமைகளும் முறையாக அங்கீகரிக்கப்படும் போது அதன் வளர்ச்சி வேகம் அதிகரிக்கிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் அபரிமிதமான திறன்கள் மற்றும் திறமைகளின் மையமாக விளங்குகிறது. இங்கு தொழில்துறை வளர்ச்சிக்கு பெருமளவு வாய்ப்பு இருப்பதால்தான் உயர் ரக உள்கட்டமைப்பு இணைப்பை நாங்கள் இங்கு உருவாக்குகிறோம். விரைவுச் சாலைகள் மற்றும் ரயில் வழித்தடங்களின் மேம்பாட்டால் ராஜஸ்தான் முழுவதும் சுற்றுலா சம்பந்தமான வாய்ப்புகள் பெருகும். இதனால் இளைஞர்கள் பெருமளவு பயனடைவார்கள்.
நண்பர்களே,
இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள பசுமை விரைவு வழிச்சாலை, ராஜஸ்தானை ஹரியானா, பஞ்சாப், குஜராத் மற்றும் ஜம்மு காஷ்மீர் உடன் இணைக்கும். இந்த வழித்தடத்தால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகளும் வர்த்தகர்களும் பயனடைவார்கள். குறிப்பாக நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவித்து விநியோக சங்கிலிகளை வலுப்படுத்தும் வகையில் இந்த வழித்தடத்தின் வாயிலாக எண்ணெய் சுத்திகரிப்பாலைகள் இணைக்கப்படும்.
உள்கட்டமைப்பு மேம்பாடு, சிறிய வர்த்தகர்களுக்கும் குடிசை தொழில்களுக்கும் பேருதவியாக இருக்கும். ஊறுகாய், அப்பளம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு பிகானேர் பெயர் பெற்றுள்ளது. மேம்படுத்தப்பட்ட இணைப்பினால் இத்தகைய குடிசைத் தொழில்துறையினர் நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் தங்களது பொருட்களை குறைந்த செலவில் கொண்டு செல்ல முடியும். கடந்த 9 ஆண்டுகளில் ராஜஸ்தானின் வளர்ச்சிக்காக ஏராளமான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த முன்னேற்றத்தை மேலும் துரிதப்படுத்துவோம். மீண்டும் ஒரு முறை உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி!
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.