மராத்திய மொழியில் வாழ்த்துக் கூறி தமது உரையைத் தொடங்கிய பிரதமர், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை ‘சுதந்திரப் பெருவிழாவாக’ நாடு தற்போது கொண்டாடி வருகிறது என்றார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் புனே வரலாற்று சிறப்புமிக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. லோக்மானிய திலகர், சபேகர் சகோதரர்கள், கோபால் கணேஷ் அகர்க்கர், சேனாபதி பபட், கோபால்கிருஷ்ண தேஷ்முக், ஆர் ஜி பண்டார்க்கர், மகாதேவ் கோவிந்த் ராணடே உள்ளிட்ட இந்த மண்ணின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவருக்கும் எனது மரியாதையை செலுத்துகிறேன்.
இன்றைய தினம், மகாராஷ்ட்ராவின் வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ராம்பாவ் மால்கி-யின் நினைவு நாளாகும். பாபா சாஹேப் புரந்தரே-யையும் நான் நினைவு கூர்கிறேன். சற்றுமுன் சத்ரபதி சிவாஜி மகராஜின் பிரமாண்ட சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நம் இதயங்களில் ஆழப்பதிந்துள்ள சத்ரபதி சிவாஜி மகராஜின் இந்த சிலை, இளையதலைமுறையினர் மற்றும் வருங்கால தலைமுறையினரிடையே தேசப்பற்றை ஊக்குவிக்கும்.
இன்று, புனே நகரின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன அல்லது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. புனே மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உங்களால் அழைக்கப்பட்டதை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். தற்போது அந்தத் திட்டத்தை தொடங்கிவைக்கும் வாய்ப்பையும் நீங்கள் எனக்கு வழங்கியிருக்கிறீர்கள். முற்காலத்தில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் போது, அந்தத் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
நண்பர்களே,
திட்டப்பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றி முடிக்கப்படுகிறது என்ற செய்தியை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது. முலா – முத்தா நதிகளின் மாசு அகற்றுவதற்கான ரூ.1,100 கோடி மதிப்பிலான பணியும் இன்று தொடங்கியுள்ளது. இன்றைய தினம் புனேயில் மின்சாரப் பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பானேரில் மின்சார பேருந்து பராமரிப்பு பணிமனையும் தொடங்கப்பட்டுள்ளது. ஆர் கே லக்ஷ்மண் நினைவு கலைக்கூட அருங்காட்சியகம் ஒன்றும் புனே நகருக்கு சிறப்புப் பரிசாக கிடைத்துள்ளது.
சகோதர சகோதரிகளே,
புனே நகரம் அதன் கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தேசப்பற்றுக்கு பிரசித்திப் பெற்றதாகும். அதே நேரத்தில், கல்வி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகன தொழில்துறையில் அடையாளத்தை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இத்தகைய சூழலில், புனே மக்களுக்கு நவநாகரீக வசதிகளும் அவசியம் தேவை. இந்தத் தேவையை நிறைவேற்றுவதை மனதில் கொண்டு எங்களது அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சற்று முன்பு நான் கார்வேர் பகுதியிலிருந்து ஆனந்த் நகர் வரை புனே மெட்ரோ ரயிலில் பயணம் செய்தேன். இந்த மெட்ரோ ரயில் சேவை புனே நகரில் போக்குவரத்தை எளிதாக்குவதோடு காற்று மாசு மற்றும் போக்குவரத்து நெரிசலிலிருந்து நிவாரணம் அளிப்பதுடன், புனே நகர மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதையும் மேம்படுத்தும்.
நண்பர்களே,
நம் நாட்டில் நகரமயமாதல் எவ்வளவு வேகமாக நடைபெற்று வருகிறது என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள். 2030ஆம் ஆண்டு வாக்கில் நம்நாட்டின் நகர்ப்புற மக்கள் தொகை 60 கோடியை தாண்டும் என நம்பப்படுகிறது. நகரங்களில் மக்கள் தொகை அதிகரிப்பது அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் அதே வேளையில், சவால்களையும் ஏற்படுத்துகிறது. நகர்ப்பகுதிகளில் குறிப்பிட்ட தொலைவுக்குத்தான் மேம்பாலங்களை கட்ட முடியும். எனவே, மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பொது போக்குவரத்துகளை விரிவுப்படுத்த வேண்டியுள்ளது. தற்போது மெட்ரோ ரயில் சேவை மிக வேகமாக விரிவுப்படுத்தப்படுகிறது.
சகோதர சகோதரிகளே,
21-ஆம் நூற்றாண்டு இந்தியாவில், நம் நாட்டில் உள்ள நகரங்களை நவீனமயமாக்குவதுடன் அங்கு புதிய வசதிகளையும் ஏற்படுத்துவது அவசியம். இதை மனதில் கொண்டு இந்தியாவின் வருங்கால நகருக்குத் தேவையான பல்வேறு திட்டங்களை எங்களது அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நகரமும் மேலும் பசுமையான போக்குவரத்து வசதிகள், மின்சார பேருந்துகள், மின்சார கார்கள், மின்சார் இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய எங்களது அரசு முயற்சித்து வருகிறது.
நகர்ப்புறங்களில் குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் வசதிகளை மேம்படுத்த அம்ருத் இயக்கத்தின் கீழ், நாங்கள், பல்வேறு முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நடுத்தர குடும்பங்களுக்கு உதவும் வகையில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் போன்றவற்றையும் ஏற்படுத்தியிருக்கிறோம்.
சகோதர சகோதரிகளே,
புனே நகரத்தின் அடையாளம் பசுமை எரிபொருள் மையமாகவும், மேம்படுத்தப்பட்டு வருகிறது. காற்று மாசிலிருந்து விடுதலை பெறவும், கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளை சார்ந்திருப்பதைக் குறைத்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், எத்தனால் போன்ற உயிரி எரிபொருட்கள் பயன்பாட்டில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். புனே நகரை தூய்மையானதாகவும், அழகானதாகவும் மாற்றுவதற்காக மாநகராட்சி நிர்வாகம், இன்று பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளது. முலா – முத்தா நதியை தூய்மைப்படுத்தி அழகுப்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். இந்த நதிகள் புதுப் பொலிவு பெற்றால் நகரில் உள்ள மக்களுக்கு புதிய ஆற்றல் கிடைக்கும்.
நண்பர்களே,
எந்த ஒரு நாட்டிலும், நவீன கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு பணிகளை விரைவாகவும், குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள்ளாகவும் நிறைவேற்றுவது அவசியம். எனவே தான் எங்களது அரசு, கட்டமைப்பு வளர்ச்சிக்கான பிரதமரின் தேசிய பெருந்திட்டத்தை உருவாக்கியுள்ளது.