பாரத் மாதா கி ஜே!
பாரத் மாதா கி ஜே!
புத்த பகவான் பரிநிர்வானம் அடைந்த குஷிநகரிலிருந்து உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்! இன்று நான் ஒரு விமான நிலையத்தை தொடங்கி வைத்து, உங்களது நீண்ட காலக்கனவான மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினேன். இப்போது, விமானங்கள் இங்கிருந்து பறக்கும். அதேபோல, தீவிர நோய்களுக்கு சிகிச்சை பெறலாம். இதன் மூலம் உங்களது பெரிய கனவு நனவாகியுள்ளது. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் அவர்களே, உ.பி. முதலமைச்சர் கர்மயோகி யோகி ஆதித்யநாத் அவர்களே, ஆற்றல் வாய்ந்த உ.பி. பிஜேபி தலைவர் திரு.சுதந்திர தேவ் அவர்களே, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, இதர மக்கள் பிரதிநிதிகளே, எனது சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம். தீபாவளி, சாத் பூஜை ஆகியவை நெருங்கி வருகின்றன. இது கொண்டாட்டத்துக்கான நேரம். இன்று, மகரிஷி வால்மீகியின் பிறந்தநாளும் ஆகும். இந்நாளில்,நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் திட்டங்களை தொடங்கி வைப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.
சகோதர, சகோதரிகளே, மகரிஷி வால்மீகி நமக்கு ராமாயணத்தின் மூலம், ராமபிரானையும், அன்னை ஜானகியையும் மாத்திரம் அறிமுகப்படுத்தவில்லை. சமுதாயித்தின் கூட்டு ஆற்றல், கூட்டு முயற்சிகளால் எவ்வாறு ஒவ்வொரு இலக்கும் எட்டப்படுகின்றன என்பது பற்றிய விழிப்புணர்வையும் அளித்துள்ளார். குஷிநகர் இத்தத்துவத்தின் மிகச் செழுமையான, புனித நகரமாகும்.
சகோதர, சகோதரிகளே, புதிய சர்வதேச விமான நிலையம், இந்தப் பிராந்தியம் முழுவதையும் வெகுவாக மாற்றப்போகிறது. மகாராஜ்கஞ்ச் –குஷிநகரை இணைக்கும் சாலை அகலப்படுத்தப்படுவதுடன், சர்வதேச விமான நிலையம் சிறந்த இணைப்பை வழங்குவதுடன், ராம் கோலா, சிஸ்வா சர்க்கரை ஆலைகளை அடைவதில் கரும்பு விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும். குஷிநகர் புதிய மருத்துவக் கல்லூரி சிறந்த மருத்துவ வசதிகளைக் கொண்டிருக்கும். பீகாரின் எல்லைப் புற பகுதிகளும் இதன் மூலம் பயனடையும். இங்குள்ள இளைஞர்களின் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவும் நனவாகும். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னர், புதிய கல்விக் கொள்கையின் கீழ், ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, குழந்தைகள் தாய்மொழியில் கல்வி கற்க முடியும். ஏழைப் பெண்களின் குழந்தைகள் மருத்துவராகவோ, பொறியாளராகவோ முடியும். மொழியால் ஏற்படும் தடங்கல்கள் இராது. இதுபோன்ற பல்வேறு முயற்சிகளால், பூர்வாஞ்சலில் மூளைக்காய்ச்சல் போன்ற உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
நண்பர்களே, அடிப்படை வசதிகள் இருக்கும் போது, பெரிய அளவில் கனவு காணும் துணிச்சலும், அதை நிறைவேற்றும் உத்வேகமும் ஏற்படும். வீடுகள் இல்லாமல், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு உறுதியான வீடு, கழிவறை, மின்சார இணைப்பு, சமையல் எரிவாயு இணைப்பு, குழாய் மூலம் குடிநீர் ஆகியவை கிடைக்கும் போது, அவர்களது நம்பிக்கை பன்மடங்கு உயரும். தற்போது இந்த வசதிகள் ஏழைகளை வெகு வேகமாக சென்றடைந்து வருகின்றன. ஏழைகளின் வலி மற்றும் பிரச்சினைகள் பற்றி உணர்ந்துள்ள அரசு முதன்முதலாக அமைந்துள்ளதால், இந்தக் கனவு நனவாகி வருகிறது. இன்று உ.பி.யின் வளர்ச்சியில் உண்மையான அக்கறையுடன் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட அரசு இரட்டை வலிமையுடன் செயல்படுகின்றன. யோகி அரசுக்கு முன்பிருந்த அரசுகள் உங்களது பிரச்சினைகளை அறிந்திருக்கவில்லை. மத்திய அரசின் திட்டங்களின் பயன்கள் ஏழைகளைச் சென்றடைய வேண்டும் என்று அந்த அரசு விரும்பவில்லை. எனவே, ஒவ்வொரு திட்டமும் தாமதமாகி வந்தது. முழுமையான கருணையுடன் செயல்பாட்டை இணைக்க வேண்டும் என்று ராம் மனோகர் லோகியா கூறுவதுண்டு. ஆனால், உ.பி.யில் முந்தைய அரசை நடத்தியவர்கள் ஏழைகளின் வலி பற்றி அக்கறை கொள்ளவில்லை. முந்தைய அரசு ஊழல்கள் மற்றும் வன்முறையில் மட்டும் தொடர்பு வைத்திருந்தது. அவர்கள் குடும்பத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தினார்களே தவிர, சமுதாயத்தைப்பற்றி கவலைப்படவில்லை என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
நண்பர்களே, பெரும் மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப்பிரதேசம் முன்பு நாட்டின் பெரும் சவாலாக விளங்கியது. ஆனால், இப்போது, நாட்டின் பெரிய திட்டங்கள் வெற்றி பெற உறுதுணையாக திகழ்கிறது. தூய்மை இந்தியா இயக்கம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதுடன், கொரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. நாட்டில் அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டதும் இங்குதான்.
நண்பர்களே, உத்தரப் பிரதேசத்தில் கர்மயோகியின் ஆட்சி அமைந்த பின்னர், பெண்கள் பெருமளவுக்கு பயன் அடைந்துள்ளனர். அதிக வீடுகள் கட்டப்பட்டு, அவற்றில் பெரும்பாலானவை பெண்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்களின் வசதிக்காக மட்டுமல்லாமல், அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இரண்டே ஆண்டுகளுக்குள், 27 லட்சம் குடும்பங்கள் சுத்தமான குடிநீர் இணைப்பைப் பெற்றுள்ளன.
நண்பர்களே, மத்திய அரசு தொடங்கியுள்ள மற்றொரு திட்டம் வருங்காலத்தில் உத்தரப்பிரதேச கிராமப்புறங்களில் முன்னேற்றத்துக்கான புதிய கதவுகளைத் திறந்து விடப் போகின்றன. இந்த திட்டத்தின் பெயர் பிரதமர் ஸ்வமித்வா திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், கிராமங்களில் உள்ள வீடுகளின் உரிமையாளர்களுக்கு ஆவணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ட்ரோன்களின் உதவியுடன், கிராம நிலங்கள் மற்றும் சொத்துக்கள் வரையப்பட்டு வருகின்றன. சட்டபூர்வமான சொத்து ஆவணங்களைப் பெறுவதால், நில அபகரிப்பு அச்சம் அடைய வாய்ப்பு இல்லாததுடன், இதை வைத்து எளிதாக கடன் பெறமுடியும்.
சகோதர, சகோதரிகளே, கடந்த நான்கரை ஆண்டுகளில் உ.பி.யில் சட்டத்தின் ஆட்சிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. 2017-க்கு முன்பு, மாபியா கும்பல்கள் வெளிப்படையாக கொள்ளையடிக்க சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. இன்று, யோகி தலைமையிலான ஆட்சியில் மாபியா கும்பல்கள் மன்னிப்புக்காக கெஞ்சிக் கொண்டிருக்கின்றன. ஏழைகள், தலித்கள், ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரின் நிலங்களைக் குறிவைத்து அபகரித்து வந்த கும்பல்களை யோகி அரசு முற்றிலுமாக அழித்துள்ளது.
சகோதர, சகோதரிகளே, இரட்டை எஞ்சின் ஆட்சி மாநிலத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதில் சாதனை படைத்துள்ளது. இதுவரை, சுமார் 80,000 கோடி ரூபாய் உ.பி. விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை கொள்முதல் செய்த வகையில், அவர்களது வங்கி கணக்குகளில் நேரடியாக சென்று சேர்ந்துள்ளது. மேலும், பிஎம் கிசான் சம்மான் நிதி மூலம், உ.பி. விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.37,000 கோடிக்கும் அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது சிறிய விவசாயிகளின் நலனை வலுப்படுத்த உதவியுள்ளது.
இந்தியாவின் எத்தனால் கொள்கை உ.பி விவசாயிகளுக்கு பெரிதும் உதவியுள்ளது. கரும்பு மற்றும் உணவு தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் உயிரி எரிபொருள், கச்சா எண்ணெய்க்கு மாற்றாக அமைவதுடன், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை குறைக்க உதவும். கடந்த சில ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு மிகச் சிறந்த பணிகளைச் செய்துள்ளது. உத்தரப் பிரதேச விவசாயிகளுக்கு கரும்புக்கான அதிக பட்ச விலை வழங்கப்படுகிறது. யோகி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ஐந்து ஆண்டுகளில், ஒரு லட்சம் கோடிக்கும் குறைவாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளை இன்னும் நிறைவு செய்யாத யோகி ஆட்சியில், 1.5 லட்சம் கோடி ரூபாய் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சகோதர, சகோதரிகளே, உ.பி.யின் விருப்பங்கள் பூர்த்தி செய்வதற்கான நேரம் வந்துள்ளது. இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒன்று சேரவேண்டியுள்ளது. அடுத்த ஐந்து மாதங்களுக்கான திட்டங்களை நாம் செயல்படுத்தவில்லை. அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை அமைத்து மாநிலத்தை முன்னெடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம். குஷிநகர், பூர்வாஞ்சல், உத்தரப் பிரதேச மக்களின் ஆசி மற்றும் ஒத்துழைப்புடன் இவை நிச்சயம் நிறைவேறும். பல புதிய வசதிகளுக்காக நான் மீண்டும் ஒரு முறை உங்களை வாழ்த்துகிறேன். தீபாவளி, சாத் பண்டிகைகளுக்கு முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளூர் பொருள்களுக்கு குரல் கொடுக்க தயங்காதீர்கள் என நான் மீண்டும் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நமது சகோதர, சகோதரிகளின் வியர்வையில் உருவான பொருட்களை தீபாவளிக்கு வாங்கி, அவர்களது வாழ்வில் ஒளியேற்றுங்கள். புதிய உதயம், புதிய ஒளி, புதிய சக்தி பிறக்கட்டும். எனவே, பண்டிகை காலங்களில் அதிக அளவு உள்ளூர் பொருட்களை நாம் வாங்க வேண்டும். இந்த வேண்டுகோளுடன், அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரத் மாதா கி ஜே!
பாரத் மாதா கி ஜே!
பாரத் மாதா கி ஜே!