கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட் அவர்களே, முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை அவர்களே, எனது அமைச்சரவை நண்பரான திரு பிரல்ஹாத் ஜோஷி அவர்களே, கர்நாடக மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே!
நமது பாரம்பரிய கலாச்சாரத்தை வளப்படுத்தி, 21-ஆம் நூற்றாண்டின் உறுதிப்பாடுகளை நாம் எவ்வாறு நிறைவேற்றுவது என்பதற்கு கர்நாடகா ஒரு சிறந்த உதாரணம்; மேலும் இத்தகைய வரலாறு, கலாச்சாரம் மற்றும் நவீனத்துவத்தின் கலவையை மைசூரில் எங்கும் காண முடிகிறது.
சகோதர, சகோதரிகளே,
‘அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை மற்றும் அனைவரின் முயற்சி' என்ற தாரக மந்திரத்தை இன்று மைசூரில் நாம் காண்கிறோம். பேச்சுத் திறன் இல்லாத மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான ஓர் முன்முயற்சியை நாம் தொடங்கியுள்ளோம்; இதுபோன்ற மக்களின் சிகிச்சைக்காக மேம்பட்ட ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான மையம் இன்று திறக்கப்பட்டுள்ளது. மேலும், மைசூர் பயிற்சி முனைய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதன் மூலம், மைசூர் ரயில் நிலையம் நவீனப்படுத்தப்படும், ரயில் இணைப்பும் வலுப்பெறும்.
சகோதர, சகோதரிகளே,
கடந்த எட்டு ஆண்டுகளில் ஏழைகளுக்கான நலத்திட்டங்களை நாங்கள் விரிவுபடுத்தியுள்ளோம். முன்னர், ஒரே ஒரு மாநிலத்திற்கு மட்டுமே இதுபோன்ற திட்டங்கள் வரையறுக்கப்பட்டிருந்த நிலையில், ‘ஒரு நாடு, ஒரு ரேஷன் அட்டை' திட்டம் உள்ளிட்டவை தற்போது நாடு முழுவதும் அனைவராலும் அணுகப்படுகிறது. அதேபோல, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் உதவியுடன் கர்நாடகாவில் 29 லட்சம் ஏழை நோயாளிகள் இலவச மருத்துவ சிகிச்சையைப் பெற்றுள்ளனர்.
நண்பர்களே,
கடந்த எட்டு ஆண்டுகளில் எங்களது அரசு கொண்டு வந்த திட்டங்கள் அனைத்திலும், சமூகத்தின் அனைத்து பிரிவினரையும், அனைத்து பகுதிகளையும் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடைய வேண்டும் என்ற உணர்விற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கடைசி மைல் வரை தரமான சேவைகளை வழங்குவதன் வாயிலாக கடந்த 8 ஆண்டுகளில் சமூக நீதியை நாங்கள் உறுதி செய்துள்ளோம். அடிப்படை வசதிகள் என்ற பிரச்சினையிலிருந்து ஏழைகளுக்கு நிவாரணம் அளிக்கப்படும் போது, அதிக உற்சாகத்துடன் நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் பங்களிப்பாளர்கள்.
சகோதர, சகோதரிகளே,
‘விடுதலையின் அமிர்த காலத்தில்’, இந்தியாவின் வளர்ச்சியில் ஒவ்வொருவரும் பங்களிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகள், பிறரை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எங்கள் அரசு தொடர்ந்து மேற்கொள்கிறது. எனவே, நமது நாணயங்களில், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்கான புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த கல்வி முறைகள் நாடுமுழுவதும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. பொது இடங்கள், பேருந்துகள், ரயில்கள் மற்றும் இதர அலுவலகங்களை மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியானதாக மாற்ற முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
புத்தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த இளைஞர்களாகிய உங்களிடம் புதிய சிந்தனைகளும், எண்ணங்களும் மேலோங்கியிருப்பதால், மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளுக்கு உங்கள் நிறுவனங்களால் ஏராளமான உதவிகளை செய்ய முன்வருமாறு சிறப்பு கோரிக்கையை முன்வைக்கிறேன்.
இதுபோன்ற பல்வேறு திட்டங்களுக்காக எனது ஆழ்மனதில் இருந்து மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். மிக்க நன்றி.