ஆற்றல் மிக்க மற்றும் பிரபலமான கோவா முதல்வர் திரு பிரமோத் சாவந்த் அவர்களே, என்னுடன் பணியாற்றும் மத்திய அமைச்சரும், கோவாவின் புதல்வருமான ஸ்ரீபத் நாயக் அவர்களே, மத்திய அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் அவர்களே, கோவா அமைச்சர்களே, எம்.பி.க்களே மற்றும் எம்.எல்ஏ.க்களே, சகோதர, சகோதரிகளே!
உங்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்! நாளை ஆனந்த் சதுர்தஸி கொண்டாடப்படுகிறது. விநாயகருக்கு பிரியாவிடை அளிக்கவுள்ளோம்.
இந்த புனித தினத்தை முன்னிட்டு,கோவா மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக கோவா மக்கள் அனைவருக்கும் வாழ்ததுகள்.
நண்பர்களே,
இந்தியாவின் பன்முகத்தன்மையின் பலத்தை பார்க்க கூடிய மாநிலம் கோவா. கிழக்கு மற்றும் மேற்கு பகுதியின் கலாச்சாரம், வாழ்க்கை மற்றும் உணவு பழக்கம் இங்கே காணப்படுகிறது. கோவாவின் ஒவ்வொரு சாதனையும், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை வலுப்படுத்துகிறது.
சகோதர, சகோதரிகளே,
இந்த நேரத்தில் எனது நண்பரும், உண்மையான கர்மயோகியுமான மறைந்த மனோகர் பாரிக்கரின் நினைவு வருவது மிகவும் இயற்கையானது. அவர் இன்று நம்மிடையே இருந்திருந்தால், உங்கள் சாதனையை பார்த்து பெருமிதம் அடைந்திருப்பார்.
உலகின் மிகப் பெரிய இலவச தடுப்பூசி பிரச்சாரத்தின் வெற்றியில் கோவா முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த சில மாதங்களாக, இயற்கை பேரிடர்களை கோவா சந்தித்தாலும், கொரோனா தடுப்பூசியின் வேகத்தை பராமரித்ததற்காக அனைவருக்கும் பாராட்டுக்கள்.
நம்மிடையே பகிரப்பட்ட அனுபவங்கள், இந்த பணி எவ்வளவு சிக்கலானது என்பதை காட்டுகிறது. மனித நேயத்துக்காக நீங்கள் அனைவரும் அயராது சேவை செய்துள்ளீர்கள். அது எப்போதும் நினைவு கூரப்படும்.
நண்பர்களே,
மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளிலும், தடுப்பூசி பணி விரைவாக முடிக்கப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது. 2வது டோஸ் தடுப்பூசிக்கான, தடுப்பூசி திருவிழா மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு மட்டும் இல்லாமல், சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கும் கோவா தடுப்பூசி செலுத்துகிறது.
நண்பர்களே,
இந்நேரத்தில், அனைத்து மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை பாராட்ட விரும்புகிறேன். உங்கள் அனைவரின் முயற்சியால், இந்தியா நேற்று ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசிகளை, மக்களுக்கு செலுத்தி சாதனை படைத்துள்ளது. பணக்கார நாடுகள் மற்றும் சக்திவாய்நத நாடுகளால் கூட இதை செய்ய முடியவில்லை. நேற்று ஒவ்வொரு மணி நேரத்திலும், 15 லட்சத்துக்கு மேற்பட்ட தடுப்பூசிகள், ஒவ்வொரு நிமிடத்திலும் 26,000க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள், ஒவ்வொரு விநாடியிலும் 425க்கு மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
நண்பர்களே,
நேற்றைய சாதனை வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல, இந்தியாவிடம் உள்ள திறன்களை உலகம் அங்கீகரிக்கப் போகிறது.
நண்பர்களே,
எனக்கு பல பிறந்தநாட்கள் வந்து போயுள்ளன. நான் எப்போதும் கொண்டாட்டங்களில் இருந்து விலகியிருக்கிறேன். ஆனால், இந்த வயதில், நேற்று எனக்கு உணர்ச்சிவசப்பட்ட நிலையாக இருந்தது. பிறந்தநாளை கொண்டாட பல வழிகள் உள்ளன. மக்களும் பல விதத்தில் கொண்டாடுகின்றனர். உங்களின் முயற்சியால், நேற்று எனக்கு மிகவும் சிறப்பான நாள். மருத்துவ துறையில் நேற்று செலுத்தப்பட்ட தடுப்பூசி சாதனை, கொரோனாவுக்கு எதிரான பேராட்டத்தில் மக்களுக்கு உதவுகிறது. இதற்காக ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர். குறுகிய நேரத்தில் 2.5 கோடி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது மிகப் பெரிய திருப்தி அளித்துள்ளது. பிறந்த நாட்கள் வந்து போகலம், ஆனால், நேற்றைய சம்பவம் எனது மனதை தொட்டுவிட்டது. இதற்காக நாட்டு மக்கள் அனைவரையும் வணங்கி நன்றி தெரிவிக்கிறேன்.
சகோதார, சகோதரிகளே,
கோவா, சண்டிகர், லட்சத்தீவைப் போல், இமாச்சலப் பிரதேமும் 100 சதவீத அளவுக்கு முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளது. சிக்கிம் மாநிலமும், விரைவில் 100 சதவீத தடுப்பூசியை செலுத்தவுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், கேரளா, லடாக், உத்தரகாண்ட், தத்ரா மற்றும் நகர் ஹவேலி போன்றவையும், இந்த சாதனையை படைப்பதில் வெகு தூரத்தில் இல்லை.
நண்பர்களே,
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தியா வரும் 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா துறையைச் சேர்ந்தவர்களுக்கு, அரசின் 100 சதவீத உத்தரவாதத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ரூ. ஒரு லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
நண்பர்களே,
இன்று கோவா, தடுப்பூசி செலுத்துவதில் மட்டும் முன்னணியில் இல்லை. வளர்ச்சியின் பல அளவுருக்களில் கோவா முன்னணியில் உள்ளது. திறந்தவெளி கழிப்பிடம் இல்லா பகுதியாக கோவா உருவாகியுள்ளது. இங்கு 100 சதவீத மின் வசதி செய்யப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், கடந்த 2 ஆண்டுகளில், சுமார் 5 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
சகோதர, சகோதரிகளே,
எல்லையற்ற வாய்ப்புகள் உள்ள பகுதி கோவா. கோவா மாநிலம் மட்டும் அல்ல. இந்தியாவின் வலுவான அடையாளம். கோவாவின் பங்கை விரிவுபடுத்துவது அனைவரின் பொறுப்பு. நீண்ட காலத்துக்குப்பின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் நல்ல நிர்வாகத்தின் பயன்களை கோவா பெற்றுள்ளது. மீண்டும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிரமோத் சவான் மற்றும் அவரது குழுவுக்கும் வாழ்த்துகள்.
நன்றி!