வணக்கம்,
மாண்புமிகு மேற்கு வங்க முதல்வர் திருமிகு. மம்தா அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் திரு. மன்சுக் மாண்டவியா அவர்களே, திரு. சுபாஸ் சர்க்கார் அவர்களே, திரு. சாந்தனு தாகூர் அவர்களே, திரு.ஜான் பர்லா அவர்களே மற்றும் திரு. நிசித் பிரமானிக் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் திரு. சுவேந்து அதிகாரி அவர்களே, இதர முக்கிய பிரமுகர்களே, தாய்மார்களே மற்றும் பெரியோர்களே!
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சிறந்த சுகாதார வசதிகளை வழங்குவதற்கான தேசிய உறுதியை வலுப்படுத்துவதன் மூலம் இன்று நாம் இன்னுமொரு முன்னேற்றத்தை எட்டியுள்ளோம். சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இந்த இரண்டாவது வளாகம் மேற்கு வங்கத்தில் உள்ள மக்களுக்காக குறிப்பிடத்தக்க வசதிகளுடன் அமைந்துள்ளது. குறிப்பாக புற்றுநோயுடன் போராடும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு இது பெரும் நிவாரணம் அளிக்கும். கொல்கத்தாவில் உள்ள இந்த நவீன மருத்துவமனையின் மூலம் புற்றுநோய் தொடர்பான சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் உள்ளிட்டவை இப்போது எளிதில் அணுகக்கூடியதாக இருக்கும்.
நண்பர்களே,
நாடு மற்றுமொரு முக்கிய மைல்கல்லை இன்று கடந்துள்ளது. 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் நாடு இந்த ஆண்டைத் தொடங்கியது. இன்று, ஆண்டின் முதல் மாதத்தின் முதல் வாரத்தில், 150 கோடி அல்லது 1 பில்லியன் தடுப்பூசி டோஸ்களை வழங்கும் வரலாற்று மைல்கல்லையும் இந்தியா எட்டுகிறது.
நண்பர்களே,
அடர்ந்த இருளில் ஒளி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. பெரிய சவால்கள் இருக்கும்போது மன உறுதி மிகவும் முக்கியமானது. போர் கடினமாக இருக்கும்போது ஆயுதங்கள் மிகவும் முக்கியமானதாக மாறும். இதுவரை, மேற்கு வங்காளத்திற்கு சுமார் 110 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை அரசு இலவசமாக வழங்கியுள்ளது.
நண்பர்களே,
சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவன வளாகத்தில் உள்ள தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் மற்றும் மகரிஷி சுஷ்ருதா ஆகியோரின் சிலைகள் நம் அனைவருக்கும் ஒரு சிறந்த உத்வேகத்தை அளிக்கின்றன.
நண்பர்களே,
யோகா, ஆயுர்வேதம், ஃபிட் இந்தியா இயக்கம், உலகளாவிய நோய்த்தடுப்பு முதலியவற்றின் மூலம் நோய்த்தடுப்பு சுகாதாரம் ஊக்குவிக்கப்படுகிறது. ‘தூய்மை இந்தியா இயக்கம்’ மற்றும் ‘அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர்’ போன்ற தேசிய திட்டங்கள் கிராமங்களையும் ஏழைக் குடும்பங்களையும் பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. மாசுபடுத்தப்பட்ட நீர் நாட்டின் பல மாநிலங்களில் புற்றுநோய்க்கான முக்கிய காரணமாகும். இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதில் ‘அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் நீர்’ பிரச்சாரம் பெரிதும் உதவுகிறது.
நண்பர்களே,
கேன்சர் என்ற பெயரை கேட்டாலே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் மனம் தளரத் தொடங்கும். இந்த கவலையிலிருந்து ஏழைகளை விடுவிப்பதற்காக மலிவு விலை மற்றும் அணுகக்கூடிய சிகிச்சைக்கான நடவடிக்கைகளை நாடு தொடர்ந்து எடுத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, புற்றுநோய் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
நண்பர்களே,
மலிவு விலை மற்றும் உள்ளடக்கிய சுகாதாரப் பாதுகாப்பின் உலகளாவிய அளவுகோலாக ஆயுஷ்மான் பாரத் திட்டம் மாறி வருகிறது. பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 2.6 கோடிக்கும் அதிகமான நோயாளிகள் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர்.
நண்பர்களே,
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் 17 லட்சத்திற்கும் அதிகமான புற்றுநோய் நோயாளிகள் பயனடைந்துள்ளனர். இந்த நோயாளிகளுக்கு கீமோதெரபி, ரேடியோதெரபி அல்லது அறுவை சிகிச்சை என அனைத்து வசதிகளும் மருத்துவமனையில் இலவசமாக கிடைத்துள்ளன.
நண்பர்களே,
ஆயுஷ்மான் பாரத் என்பது இலவச சிகிச்சைக்கான ஒரு வழிமுறை மட்டுமல்ல, ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சையிலும் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. புற்றுநோய் போன்ற அனைத்து தீவிர நோய்களுக்கும் இது மிகவும் அவசியம்.
நண்பர்களே,
2014 வரை நம்மிடம் ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன. இன்று 22 எய்ம்ஸ் என்ற வலுவான கட்டமைப்பை நோக்கி நாடு நகர்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுக்கான சிகிச்சைக்கான வசதிகள் இந்த அனைத்து நிறுவனங்களிலும் ஏற்படுத்தப்படுகின்றன.
நண்பர்களே,
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார இயக்கம் நாட்டு மக்களுக்கு சிகிச்சை வசதிகளை அதிகரிக்கும். மருத்துவ வரலாற்றின் டிஜிட்டல் பதிவுகள் சிகிச்சையை எளிதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும்; சிறிய நோய்களுக்கு மருத்துவமனைக்குச் செல்லும் தொந்தரவைக் குறைக்கும், மேலும் சிகிச்சைக்கான கூடுதல் செலவுகளிலிருந்து குடிமக்களைக் காப்பாற்றும்.
அதே போன்று, ஆயுஷ்மான் பாரத் உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ், சுகாதாரம் தொடர்பான முக்கியமான மருத்துவ உள்கட்டமைப்பு பெரிய நகரங்களிலும், மாவட்ட மற்றும் தொகுதி அளவிலும் அணுகக்கூடியதாக இருக்கும். இந்த திட்டத்தின் கீழ், மேற்கு வங்காளத்திற்கும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,500 கோடி ரூபாய்க்கு மேல் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான சுகாதார உதவி மையங்கள், சுமார் 1,000 நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள், டஜன் கணக்கான மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான தீவிர சிகிச்சை படுக்கைகளின் திறனை இது உருவாக்கும். மிக்க நன்றி.