உத்தரப்பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் அவர்களே, எனது அமைச்சரவை நண்பர் திரு நிசித் பிரமாணிக் அவர்களே, உத்தரப்பிரதேச துணை முதல்வர் திரு பிரிஜேஷ் பதக் அவர்களே, இதர பிரமுகர்களே. விடுதலையின் அமிர்தப் பெருவிழா கொண்டாட்டங்களின் போது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளின் மூன்றாவது பதிப்பு நடைபெறுவதால் இந்த நிகழ்வு கூடுதல் சிறப்பு பெறுகிறது. நாட்டின் இளைஞர்களிடையே குழு உணர்வை மேம்படுத்துவதிலும், 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை வலுப்படுத்துவதிலும் இந்தப் போட்டி சிறந்த ஊடகமாகத் திகழ்கிறது. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், வாழ்நாள் முழுவதும் போற்றும் வகையிலான அனுபவத்தோடு திரும்புவார்கள் என்பதில் ஐயமில்லை.
நண்பர்களே,
இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் விளையாட்டுகளின் புதிய யுகம் தொடங்கியுள்ளது. இது, உலகளவில் இந்தியாவை மிகப்பெரிய விளையாட்டு சக்தியாக மாற்றுவது மட்டுமல்லாமல், விளையாட்டுகளின் வாயிலாக சமூக வளர்ச்சிக்கான புதிய காலமாகவும் இது அமைந்துள்ளது. முந்தைய அரசுகள் விளையாட்டுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. விளையாட்டு சார்ந்த உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தப்படாமல், வீரர்களின் தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருந்தது. எனவே ஊரக மற்றும் கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் விளையாட்டுகளில் வெற்றி பெற முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால் இன்று வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அனைவரையும் ஈர்க்கும் தொழிலாக விளையாட்டு மாறி உள்ளது. கேலோ இந்தியா திட்டம் இதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது.
நண்பர்களே,
காமன்வெல்த் போட்டிகளின் போது நடைபெற்ற ஊழல் சம்பவம், விளையாட்டுத் துறையில் முந்தைய அரசுகளின் செயல்பாடுகளுக்கு சிறந்த உதாரணம். நகர்ப்புற விளையாட்டு உள்கட்டமைப்பிற்காக முந்தைய அரசுகள் ஆறு ஆண்டுகளில் 300 கோடி ரூபாய் செலவு செய்தன. ஆனால் எங்களது அரசு கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் விளையாட்டு உள்கட்டமைப்பிற்காக சுமார் 3000 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. கேலோ இந்தியா போட்டிகளில் இதுவரை 30,000 வீரர்கள் பங்கேற்றிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். மிக முக்கியமாக, 1500 வீரர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நவீன விளையாட்டு அகாடமிகளிலும் அவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மூன்று மடங்கு அதிகமானத் தொகை விளையாட்டுக்காக இந்த ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேலோ இந்தியா திட்டத்தில் பெண்களும் கலந்து கொள்வது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டில் பல்வேறு நகரங்களில் கேலோ இந்தியா மகளிர் போட்டிகள் நடைபெறுகின்றன. 23,000 மகளிர் தடகள வீராங்கனைகள் இதில் கலந்து கொள்வதாக அறிகிறேன். கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளிலும் ஏராளமான வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகள்.
ஒரு வெற்றியாளர் விளையாட்டு உணர்வையும், கண்ணியத்தையும் கடைபிடிக்கும் போது தான் சிறந்த வீரராகிறார். ஒருவரது செயல்களால் சமூகம் எழுச்சி பெறும் போதுதான், வெற்றியாளர் தலைசிறந்த வீரராகிறார். எனவே விளையாடும்போது நீங்கள் அனைவரும் இந்தக் கருத்தை நினைவில் கொள்ள வேண்டும். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!