ஜெய் சோம்நாத்!
நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல், மாநில பிஜேபி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு சி.ஆர் பாட்டீல், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு வணக்கம்!
கடினமான காலங்களிலும் பெருமிதத்துடன் எழுந்து நின்ற இந்தியாவின் மனஉறுதியை, சோமநாதர் கோயிலின் கோபுரத்தின் மூலம் பக்தர்கள் உணர்வார்கள். சோம்நாத் கோயில் இடிக்கப்பட்ட சூழல் மற்றும் இந்த கோயில் சர்தார் பட்டேலின் முயற்சிகளால் புனரமைக்கப்பட்ட சூழல் ஆகிய இரண்டிலும் பெரும் தகவல் அடங்கியுள்ளது. தற்போது, சுதந்திரப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில், நமது கடந்த கால அனுபவங்கள், கலாச்சாரப் பெருமைமிக்க இடங்கள் மற்றும் சோம்நாத் போன்ற நம்பிக்கை சார்ந்த இடங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
நண்பர்களே, உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தில் சுற்றுலா பெரும் பங்கு வகிக்கிறது. அனைத்து மாநிலங்களிலும், அனைத்துத் துறைகளிலும் இது போன்ற எல்லையற்ற வாய்ப்புகளை நாம் பெற்றுள்ளோம். சோம்நாத், துவாரகா, கட்ச் வளைகுடா, குஜராத்தின் ஒற்றுமைச் சிலை: உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தி, மதுரா, காசி, பிரயாக், குஷிநகர்; தேவபூமியான உத்தராகண்டில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத்; இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள ஜூவாலாதேவி, நயினா தேவி: பக்தி மற்றும் இயற்கை எழில் மிகுந்த ஒட்டு மொத்த வடகிழக்கு மாநிலங்கள், தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், ஒடிசாவில் உள்ள பூரி; ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள திருப்பதி பாலாஜி, மகாராஷ்டிராவின் சித்தி விநாயகர், கேரளாவின் சபரிமலை போன்றவை புனிதத் தலங்களாகும். இந்த இடங்கள் நமது தேச ஒற்றுமை மற்றும் 'ஒன்றுபட்ட பாரதம் வலிமையான பாரதம்' என்பதைப் பிரதிபலிக்கின்றன. தற்போது இந்த இடங்களை வளமைக்கான வலிமையான ஆதாரமாக நாடு பார்க்கிறது. இவற்றை மேம்படுத்துவதன் மூலம் வளர்ச்சியை நாம் பெருமளவிற்கு ஊக்குவிக்க முடியும்.
சுற்றுலாவை முழுமையான வகையில் காண்பதை நாடு தற்போது எதிர்நோக்கியிருக்கிறது. முதலில் தூய்மை – முன்பு நமது சுற்றுலா தலங்கள், புனித யாத்திரை தலங்கள், சுகாதாரமற்றவையாக இருந்தன. தற்போது தூய்மை இந்தியா திட்டம் இந்த நிலையை மாற்றியமைத்துள்ளது. சுற்றுலாவை ஊக்குவிப்பதில் மற்றொரு முக்கிய அம்சம் பயண வசதிகள்தான். ஆனால் இந்த வசதிக்கான வாய்ப்புகளை சுற்றுலா தலங்களோடு மட்டும் நிறுத்தி விடக் கூடாது. போக்குவரத்து, இணையதள வசதி. சரியான தகவல், மருத்துவ ஏற்பாடு போன்ற அனைத்து வசதிகள் குறித்தும் பரிசீலிக்க வேண்டும். இந்த வகையில் நாட்டில் அனைத்து வகையான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுலாவை அதிகரிப்பதில் மூன்றாவது முக்கிய அம்சம் நேரம். தற்போதைய யுகத்தில், குறைந்த காலத்திற்குள் அதிக இடங்களுக்குச் செல்வதையே மக்கள் விரும்புகின்றனர். சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நான்காவது மற்றும் மிக முக்கிய அம்சம் நமது சிந்தனைதான். நமது சிந்தனை புதுமையானதாகவும், நவீனமானதாகவும் இருக்க வேண்டும். அதே வேளையில் நமது பண்டைக்காலப் பாரம்பரியம் குறித்து நாம் எவ்வாறு பெருமிதம் அடைகிறோம் என்பதும் மிக முக்கியமானதாகும்.
நாடு சுதந்திரமடைந்த பிறகு தில்லியில் உள்ள சில குடும்பங்களுக்கு மட்டுமே புதிய வளர்ச்சி ஏற்பட்டது. ஆனால் தற்போது நாடு அத்தகைய குறுகிய சிந்தனையை புறந்தள்ளி, பெருமிதத்திற்கான புதிய இடங்களை உருவாக்கி அவற்றுக்கு மேன்மை சேர்த்து வருகிறது. எங்களது அரசுதான் தில்லியில் பாபா சாகேப் நினைவிடத்தையும். ராமேஸ்வரத்தில் ஏபிஜெ அப்துல் கலாம் நினைவிடத்தையும் கட்டியது. அதே போன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஷியாம் ஜி கிருஷ்ண வர்மா ஆகியோருடன் தொடர்டைய இடங்களுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற அழைப்பை குறுகிய நோக்கமுடையதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. இந்த அழைப்பு உள்ளூர் சுற்றுலாவையும் உள்ளடக்கியதுதான். வெளிநாட்டு சுற்றுலாவை மேற்கொள்வதற்கு முன்பாக இந்தியாவில் உள்ள 15 – 20 இடங்களுக்காவது செல்ல வேண்டும்.