உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல் அவர்களே, முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, திரு கிரண் ரிஜிஜு அவர்களே, திரு ஜி கிஷண் ரெட்டி அவர்களே, ஜெனரல் வி கே சிங் அவர்களே, திரு அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, திரு ஸ்ரீபத் நாயக் அவர்களே, திருமதி மீனாட்சி லேகி அவர்களே, உத்தரப்பிரதேச அரசின் அமைச்சர் திரு நந்த கோபால் நந்தி அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சக ஊழியர் திரு விஜய்குமார் தூபே அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் திரு ரஜினிகாந்த் மணி திரிபாதி அவர்களே, பல்வேறு நாடுகளின் தூதர்களே மற்றும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளே,
சகோதர சகோதரிகளே!
உலகெங்கிலும் உள்ள பவுத்த சமுதாயத்தின் பக்தி, நம்பிக்கை மற்றும் உத்வேகத்தின் மையமாக இந்தியா உள்ளது. இன்றைக்கு நடைபெற்றுள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு ஒரு வகையில் அவர்களின் பக்திக்கான மரியாதை ஆகும். புத்தர் ஞானம் பெற்றதிலிருந்து மகாபரிநிர்வாணம் வரையிலான முழுப் பயணத்திற்கும் சாட்சியாக இருக்கும் இந்தப் பகுதி இன்று நேரடியாக உலகத்துடன் இணைக்கப்பட்டு விட்டது. குஷிநகரில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்குவது இந்த புனித பூமிக்கு அஞ்சலி செலுத்துவது போன்றது. இன்று இந்த விமானம் மூலம் இலங்கையிலிருந்து வந்திருக்கும் மரியாதைக்குரிய தூதுக்குழு மற்றும் பிற முக்கியஸ்தர்களை குஷிநகர் வரவேற்கிறது. பகவான் மகரிஷி வால்மீகி அவர்களின் பிறந்த நாள் இன்று என்பது ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வாகும். பகவான் மகரிஷி வால்மீகி அவர்களின் உத்வேகத்துடன், அனைவருடனும், அனைவரின் பங்களிப்புடனும் அனைவருக்கான வளர்ச்சியின் பாதையில் நாடு பயணிக்கிறது.
நண்பர்களே,
குஷிநகரின் இந்த சர்வதேச விமான நிலையம் பல தசாப்த கால நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் விளைவாகும். இன்று என் மகிழ்ச்சி இரண்டு மடங்காக உள்ளது. ஆன்மீகப் பயண ஆர்வலராக திருப்தி உணர்வு உள்ளது. மேலும், பூர்வாஞ்சல் பிராந்தியத்தின் பிரதிநிதியாக வாக்குறுதியை நிறைவேற்றிய சந்தர்ப்பம் இதுவாகும். குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளதற்காக குஷிநகர் மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பவுத்தர்களுக்கு வாழ்த்துகள்.
நண்பர்களே,
சிறந்த இணைப்பு மற்றும் பக்தர்களுக்கு வசதிகளை உருவாக்குவதன் மூலம் பகவான் புத்தருடன் தொடர்புடைய இடங்களை மேம்படுத்துவதில் இந்தியா சிறப்புக் கவனம் செலுத்துகிறது. உ.பி. அரசு மற்றும் மத்திய அரசின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று குஷிநகரின் வளர்ச்சி ஆகும். புத்தர் பிறந்த இடமான லும்பினி இங்கிருந்து வெகு தொலைவில் இல்லை. ஜோதிராதித்யா அவர்கள் அதை விரிவாக விவரித்தார், இருந்தபோதிலும் நான் அதை மீண்டும் சொல்ல விரும்புகிறேன், இதனால் இந்தப் பகுதி நாட்டின் மையப் புள்ளியாக எப்படி இருக்கிறது என்பதை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். கபிலவஸ்துவும் அருகில் உள்ளது. புத்தர் முதல் பிரசங்கத்தை வழங்கிய சாரநாத், 100-250 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளது. புத்தர் ஞானம் பெற்ற புத்த கயாவும் சில மணிநேரங்கள் தொலைவில் உள்ளது. எனவே, இந்தியாவில் உள்ள பவுத்தர்களுக்கு மட்டுமில்லாமல், இலங்கை, தாய்லாந்து, சிங்கப்பூர், லாவோஸ், கம்போடியா, ஜப்பான், கொரியா போன்ற பல நாடுகளின் மக்களுக்கும் ஒரு சிறந்த நம்பிக்கை மற்றும் ஈர்ப்பு மையமாக இந்தப் பகுதி மாறப்போகிறது.
சகோதர சகோதரிகளே,
குஷிநகர் சர்வதேச விமான நிலையம் விமான இணைப்புக்கான இடமாக மாறுவதோடு மட்டுமல்லாமல், இங்குள்ள விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், கடைக்காரர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு நேரடியாக பயனளிக்கும். வணிகம் மற்றும் வர்த்தகத்தின் முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பு இங்கு உருவாகும். சுற்றுலா, டாக்ஸி ஓட்டுநர்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகத் துறையில் உள்ள சிறு வணிகர்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவார்கள். இது இப்பகுதி இளைஞர்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
சகோதர சகோதரிகளே,
நவீன உள்கட்டமைப்பு சுற்றுலாவிற்கு மிகவும் முக்கியமானது. ரயில், சாலை, விமானப் போக்குவரத்து, நீர்வழிகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், இணைய இணைப்பு, சுகாதாரம், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றுடன் கூடிய நவீன உள்கட்டமைப்பு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது இன்றைய 21-ம் நூற்றாண்டு இந்தியா இந்த அணுகுமுறையுடன் முன்னேறி வருகிறது. இப்போது சுற்றுலாவில் ஒரு புதிய அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது, இந்தியாவில் தடுப்பூசி வழங்கலின் விரைவான முன்னேற்றமே அதுவாகும். இந்தியாவில் பரவலாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது நமது நாடு பாதுகாப்பானது என்ற நம்பிக்கையை வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு உருவாக்கும்.
உடான் திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளில் 900-க்கும் மேற்பட்ட புதிய வழித்தடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 350-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் அல்லது முன்பு சேவையில் இல்லாதவை செயல்படத் தொடங்கின. அடுத்த மூன்று-நான்கு ஆண்டுகளில் நாட்டில் 200-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள் மற்றும் கடல் விமானங்களின் நெட்வொர்க்கை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வசதிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து விமான நிலையங்களில் இப்போது இந்தியாவின் சாதாரண மனிதர்கள் அதிகம் காணப்படுகிறார்கள் என்பதற்கு நீங்களும் நானும் சாட்சியாக இருக்கிறோம். மேலும், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலர் இப்போது விமானச் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். உடான் திட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்தில் விமான இணைப்பு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. உ.பி.-யில் உள்ள எட்டு விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் தொடங்கியுள்ளன.
நண்பர்களே,
சுதந்திரமான இந்த நல்ல காலத்தில் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னேற்றத்தின் அடையாளமாக மாறும். மேலும், உத்தரபிரதேசத்தின் ஆற்றலும் அதில் இருக்கும். நாடு மற்றும் உலகெங்கிலும் உள்ள புத்த பிக்க்ஷகளிடம் இங்கிருந்து நான் ஆசி பெறப் போகிறேன். மேலும் உ.பி.யின் பல உள்கட்டமைப்புத் திட்டங்களை துவக்கி வைக்கும் பாக்கியத்தையும் பெறுவேன்.
மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி!