வணக்கம்!
மத்திய அமைச்சர் திரு அமித் ஷா அவர்களே, குஜராத் முதல்வர் திரு பூபேந்திர பட்டேல் அவர்களே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.ஆர். பாட்டில் அவர்களே, இன்-ஸ்பேஸ் தலைவர் திரு பவன் கோயங்கா அவர்களே, விண்வெளித் துறை செயலாளர் திரு எஸ். சோமநாத் அவர்களே, இந்திய விண்வெளி துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் இதர பிரமுகர்களே.
பல தசாப்தங்களாக இந்திய விண்வெளித்துறையில் தனியாரின் பங்களிப்பு விற்பனையாளர் என்ற அளவில் மட்டுமே இருந்து வந்தது. விஞ்ஞானிகளும் இளைஞர்களும் அரசு அமைப்புமுறையில் அங்கம் வகிக்காத காரணத்தால் விண்வெளித்துறையில் அவர்களது சிந்தனைகள் வழி அவர்களால் பணியாற்ற இயலாமல் இருந்தது. விண்வெளித்துறையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்தி, இன்-ஸ்பேஸ் வாயிலாக தனியார் துறையினருக்கு ஆதரவளித்து, அனைத்து விதமான கட்டுப்பாடுகளிலிருந்தும் அவர்களை விடுவிக்கும் இயக்கத்தை நாடு அறிமுகப்படுத்துகிறது. இனி, தனியார் துறையினர் வியாபாரிகளாக மட்டும் செயல்படாமல், விண்வெளித்துறையில் மிகப்பெரிய வெற்றியாளர்களாகவும் பணியாற்றுவார்கள். இஸ்ரோவின் வளங்களை தனியார் துறையினரும் பயன்படுத்தி, இஸ்ரோ அமைப்புடன் இணைந்து பணியாற்றவும் வழிவகை செய்யப்படும்.
நண்பர்களே,
முந்தைய காலத்தில் விண்வெளித் துறையில் இந்திய இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இன்று இந்திய இளைஞர்கள் தேசிய கட்டமைப்பில் பங்கேற்க விரும்புகிறார்கள், ஆனால் அது அரசின் வழியில் மட்டுமே சாத்தியமாகும் என்று நம்மால் நிபந்தனை விதிக்க முடியாது. அத்தகைய யுகம் மாறிவிட்டது. இளைஞர்கள் சந்திக்கும் அனைத்து இடர்ப்பாடுகளையும் நமது அரசு நீக்கி வருவதோடு, தொடர்ந்து சீர்திருத்தங்களை மேற்கொள்கிறது. வாழ்க்கையை எளிதாக்கும் வழிகளை மக்களுக்கு ஏற்படுத்தித் தருவதில் தனியார் துறையினரும் உதவும் வகையில், அவர்களுக்கு எளிதான வர்த்தகம் மேற்கொள்ளும் சூழலை உருவாக்க முயல்கிறோம்.
நண்பர்களே,
‘தற்சார்பு இந்தியாவின்' மிகப்பெரிய அடையாளமாக இந்தியாவின் விண்வெளி இயக்கம் செயல்படுகிறது. இந்திய தனியார் துறையினரிடமிருந்து இந்த இயக்கத்திற்கு ஆதரவு கிடைக்கும்போது இதன் ஆற்றல் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்கலாம். 21-வது நூற்றாண்டில் நம் வாழ்க்கையில் விண்வெளித் தொழில்நுட்பத்தின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய புரட்சியின் அடித்தளமாக விண்வெளி தொழில்நுட்பம் மாற உள்ளது. சாலைகள், பாலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளின் கட்டமைப்பு, நிலத்தடி நீர் அளவை கண்காணித்தல், உள்கட்டமைப்பு திட்டங்கள் முதலியவை செயற்கைக்கோள்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றன.
விண்வெளி தொழில்நுட்பத்தை சாமானியர்களும் அணுகக் கூடியதாக எப்படி மாற்றுவது, விண்வெளி தொழில்நுட்பம் எவ்வாறு வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒரு ஊடகமாக மாறுவது மற்றும் இந்த தொழில்நுட்பத்தை நாம் எவ்வாறு வளர்ச்சி மற்றும் திறனுக்காகப் பயன்படுத்தலாம் என்பதை இன்-ஸ்பேஸ் மற்றும் தனியார் துறையினர் உறுதி செய்ய வேண்டும். தனியார் துறையில் பெரும் வெற்றி ஆளுமையாக இருக்கும் திரு கோயங்கா தலைமையில், இன்-ஸ்பேஸ், நமது கனவுகளை நனவாக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த எதிர்பார்ப்புகளுடன் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் மற்றும் நன்றி.