வேத வியாசரின் பிறப்பிடமும், மகாராணி லட்சுமிபாயின் ஊருமான பண்டல்கண்டிற்கு வருகை தருவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். வணக்கம்!
உத்தரப்பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர்கள் திரு கேசவ் பிரசாத் மவுரியா, திரு பிரஜேஷ் பதக் அவர்களே, அமைச்சரவையில் எனது நண்பரான திரு பானுபிரதாப் சிங் அவர்களே, உத்திரப்பிரதேச அரசின் அமைச்சர்களே, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!
பண்டல்கண்ட் பகுதியின் ஒளிமயமான பாரம்பரியத்திற்கு இந்த விரைவுச்சாலை அர்ப்பணிக்கப்படுகிறது. திரு யோகி ஆதித்யநாத் அவர்களின் தலைமையின் கீழ் உத்தரப்பிரதேசத்தின் முழு உருவத்தையும் இம்மாநில மக்கள் மாற்றியுள்ளனர். அவரது அரசால், சட்டம் ஒழுங்கு மேம்பட்டிருப்பதுடன், இணைப்பும் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. பண்டல்கண்ட் விரைவுச்சாலை, இங்குள்ள வாகனங்களை வேகப்படுத்துவதுடன், இந்தப் பகுதியில் உள்ள அனைத்து தொழில்துறைகளின் முன்னேற்றத்தையும் வேகப்படுத்த உள்ளது. இந்த விரைவுச்சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான சேமிப்புக் கிடங்குகள், குளிர்சாதன வசதிகள் போன்ற தொழில்துறைகள் உருவாக்கப்பட உள்ளன. இதன் காரணமாக இப்பகுதியில் வேளாண் அடிப்படையிலான தொழில்களை எளிதாக அமைக்க முடியும். பண்ணைப் பொருட்களை சந்தைகளுக்கு சுலபமாக எடுத்துச் செல்ல முடியும். பண்டல்கண்டில் உருவாகி வரும் ராணுவ வழிதடத்திற்கும் இச்சாலை உதவிகரமாக இருக்கும்.
நண்பர்களே,
உத்தரப்பிரதேசத்தின் சிறிய நகரங்களில் விமான சேவையை அளிக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. பண்டல்கண்ட் விரைவுச்சாலை, பயன்பாட்டிற்கு வந்த பிறகு இங்குள்ள கோட்டைகளுக்கு சுற்றுலாவை உருவாக்குமாறு திரு யோகி அவர்களின் அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகள் பண்டல்கண்டின் வளத்தைக் கண்டு களிக்க முடியும். இரட்டை எஞ்ஜின் அரசின் தலைமையின் கீழ் முன் எப்போதும் இல்லாத வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. வளர்ந்த மாநிலங்களும் பின் தங்கும் வகையில் உத்தரப்பிரதேசத்தில் தற்போது உள்கட்டமைப்பு பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. இம்மாநிலத்தின் அடையாளம் நாடு முழுவதும் மாறி வருகிறது.
நண்பர்களே,
நெடுஞ்சாலைகள் அல்லது வான்வழி மட்டுமல்லாமல், கல்வி, உற்பத்தி, வேளாண்மை என ஒவ்வொரு துறையிலும் உத்தரப்பிரதேசம் முன்னேறி வருகிறது. ஒரு காலத்தில் இந்த மாநிலத்தில் 12 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. தற்போது இங்கு 35-க்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் செயல்படுவதுடன், புதிதாக 14 கல்லூரிகளை அமைப்பதற்கான வேலைகளும் நடைபெறுகிறது.
நடப்பு காலத்திற்கான புதிய வசதிகளை நாம் உருவாக்குவதோடு, நாட்டின் எதிர்காலத்திற்குத் தேவையான கட்டமைப்பையும் அமைத்து வருகிறோம். பிரதமரின் தேசிய விரைவு சக்தி திட்டத்தின் வாயிலாக 21-ஆம் நூற்றாண்டிற்குத் தேவையான உள்கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறோம். நல்ல ஆளுகையின் புதிய அடையாளத்தோடு உத்தரப்பிரதேசம் தொடர்ந்து வலிமை பெறட்டும். ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை ஒவ்வொரு கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் விடுதலையின் 75 ஆண்டு அமிர்தப் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
மிக்க நன்றி.