உத்திரப் பிரதேசத்தின் புகழ்பெற்ற முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, எனது மூத்த நண்பர் திரு ராஜ்நாத் சிங் அவர்களே, மத்திய அமைச்சரவையின் எனது சகாக்களே, உத்திரப் பிரதேச துணை முதல்வர் அவர்களே, மாநில அமைச்சர்களே, சட்டமன்ற, சட்ட மேலவை சபாநாயகர்களே, தொழில்துறையைச் சேர்ந்த நண்பர்களே, இதர பிரமுகர்களே!
காசியின் நாடாளுமன்ற உறுப்பினராக முதலீட்டாளர்கள் அனைவரையும் உத்தரப் பிரதேசத்திற்கு வரவேற்கிறேன். உங்களது கனவுகள் மற்றும் உறுதிப்பாடுகளுக்கு புதிய உயரத்தை வழங்கும் திறனை உத்தரப் பிரதேசத்தின் இளைஞர்கள் பெற்றுள்ளனர். புராதன செல்வாக்கை தக்க வைத்துக்கொண்டு, காசியைப் போன்ற ஒரு நகரத்தை புதிய தோற்றத்தில் அழகுபடுத்த முடியும் என்பது உத்தரப் பிரதேசத்தின் திறமைக்கான ஓர் மிகச் சிறந்த உதாரணம்.
நண்பர்களே,
உத்தரப் பிரதேசத்தில் சுமார் ரூ.80,000 கோடி மதிப்பிலான முதலீடுகள் தொடர்பான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் இந்த மாநிலத்தில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இன்றைய சர்வதேச சூழல்களும் நமக்கு பெரும் வாய்ப்புகளை வழங்கியுள்ளன. இன்று நம்பகத்தன்மைவாய்ந்த கூட்டாளி ஒருவரை உலகம் தேடிக்கொண்டிருக்கிறது, நமது ஜனநாயக இந்தியாவிற்கு மட்டுமே அந்தத் திறன் உள்ளது. இந்தியாவின் திறனை தற்போது உலக நாடுகள் கண்டு வருவதோடு, இந்தியாவின் செயல்திறனையும் பாராட்டுகின்றன.
நண்பர்களே,
ஒரு நாடாக, நமது பகிரப்பட்ட முயற்சிகளை பன்மடங்காக பெருக்குவதற்கான தருணம், இது. இந்தியாவில் ஒரு வலுவான உற்பத்தி சூழலியல், வலுவான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட மதிப்பு மற்றும் விநியோக சங்கிலியை உருவாக்க அனைவரின் பங்களிப்பும் அவசியம். அரசு தனது பங்காக தொடர்ந்து கொள்கைகளை வகுப்பதோடு, பழைய கொள்கைகளை மேம்படுத்தி வருகிறது.
நமது இரட்டை எஞ்சின் அரசு, விரைவான வளர்ச்சிக்காக, உள்கட்டமைப்பு, முதலீடு மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் ஒரே சமயத்தில் பணியாற்றி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மூலதன செலவினங்களுக்காக ரூ. 7.50 லட்சம் கோடி ஒடுக்கப்பட்டுள்ளது. உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டங்களை நாங்கள் அறிவித்துள்ளோம். உற்பத்தி மற்றும் போக்குவரத்து போன்ற பாரம்பரிய வர்த்தகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உள்கட்டமைப்பை நவீனப்படுத்துகிறோம். கடந்த ஆண்டுகளில் இந்தியா எந்த வேகத்தில் செயலாற்றியுள்ளது என்பதற்கு டிஜிட்டல் புரட்சி ஓர் எடுத்துக்காட்டு.
கடந்த எட்டு ஆண்டுகளில் டிஜிட்டல் புரட்சிக்கான எங்களது வலுவான அடித்தளத்தால் இன்று ஏராளமான துறைகளில் பல்வேறு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசம் மற்றும் தற்சார்பு இந்தியாவின் வளர்ச்சிக்காக அனைத்து துறைகளிலும் சீர்திருத்தங்களை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம் என்று நான் உறுதி அளிக்கிறேன். இந்த முதலீடுகள் அனைவருக்கும் பயனளிக்கட்டும்!
உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!
நன்றி!