வணக்கம்!
நீங்கள் எல்லோரும் நலமா?
மாண்புமிகு மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் அவர்களே, உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அவர்களே, குஜராத்தின் முதல்வர் திரு பூபேந்திர பாய் படேல் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் திரு சர்பானந்தா சோனோவால் அவர்களே, திரு மன்சுக் பாய் மாண்டவியா அவர்களே, திரு மகேந்திர பாய் முன்ஜாபரா அவர்களே, உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் நிபுணர்களே, தாய்மார்களே!
உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சி மாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்காக முதலீட்டு உச்சிமாநாடுகள் நடத்தப்பட்டதையும், குறிப்பாக குஜராத் இந்த பாரம்பரியத்தை மிகப்பெரிய அளவில் கடைப்பிடிப்பதையும் நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம். ஆனால் முதன்முறையாக ஆயுஷ் துறைக்காக பிரத்யேகமாக இத்தகைய முதலீட்டு மாநாடு நடத்தப்படுகிறது.
நண்பர்களே,
உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் சிக்கியிருந்த நேரத்தில்தான் இதுபோன்ற முதலீட்டு உச்சிமாநாட்டிற்கான யோசனை எனக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில், ஆயுர்வேத மருந்துகள், ஆயுஷ் கசாயம் மற்றும் இதுபோன்ற பல பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். இதன் விளைவாக, கொரோனா காலத்தில், இந்தியாவில் இருந்து மஞ்சள் ஏற்றுமதி பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதுவே அதன் செயல்திறனுக்கான சான்று.
இந்த காலகட்டத்தில், நவீன மருந்து நிறுவனங்களும் தடுப்பூசி உற்பத்தியாளர்களும் சரியான நேரத்தில் முதலீட்டைப் பெற்றால் பாராட்டத்தக்க வேலையைச் செய்ய முடியும் என்பதையும் நாம் பார்த்தோம். இவ்வளவு சீக்கிரம் கொரோனாவுக்கு எதிராக ‘இந்தியாவில் தயாரித்த (மேட் இன் இந்தியா)’ தடுப்பூசியை உருவாக்க முடியும் என்று யார் நினைத்திருக்க முடியும்? புதுமை மற்றும் முதலீடு எந்த ஒரு துறையின் திறனையும் அதிகரிக்கின்றன. ஆயுஷ் துறையில் முதலீட்டை முடிந்தவரை அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கு இந்த உச்சிமாநாடு ஒரு சிறந்த தொடக்கமாகும்.
ஆயுஷ் துறையில் முதலீடு மற்றும் புதுமைகளுக்கான சாத்தியங்கள் வரம்பற்றவை. ஆயுஷ் மருந்துகள், துணைப் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தியில் இதற்குமுன் இல்லாத வளர்ச்சியை எட்டிவருவதை நாம் ஏற்கனவே கண்டு வருகிறோம். 2014-க்கு முன் ஆயுஷ் துறையின் மதிப்பு 3 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருந்த போதிலும், இன்று அது 18 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.
உலகம் முழுவதும் ஆயுஷ் தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், வரும் ஆண்டுகளில் இந்த வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். ஊட்டச்சத்து பொருட்கள், மருந்துகளின் விநியோகச் சங்கிலி மேலாண்மை, ஆயுஷ் அடிப்படையிலான நோயறிதல் கருவிகள் அல்லது தொலைமருத்துவம் என எல்லா இடங்களிலும் முதலீடு மற்றும் புதுமைகளுக்கான புதிய வாய்ப்புகள் உள்ளன.
நண்பர்களே,
பாரம்பரிய மருத்துவத் துறையில் ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சில நாட்களுக்கு முன் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல் மையம் திறக்கப்பட்டது. ஸ்டார்ட்-அப் சவால் குறித்து இளைஞர்களிடையே பெரும் உற்சாகம் காணப்படுகிறது.
எனது இளம் நண்பர்களே, இந்தியாவின் ஸ்டார்ட்-அப் பொற்காலம் தொடங்கிவிட்டது என்பதை நீங்கள் அதிகம் அறிவீர்கள். ஒருவகையில், இது இந்தியாவில் யூனிகார்ன்களின் காலம். 2022-ம் ஆண்டு தொடங்கி இன்னும் 4 மாதங்கள் ஆகவில்லை; ஆனால் இந்த ஆண்டு இதுவரை இந்தியாவில் இருந்து 14 ஸ்டார்ட் அப்கள் யூனிகார்ன் கிளப்பில் இணைந்துள்ளன. ஆயுஷ் அடிப்படையிலான நமது ஸ்டார்ட்-அப்களில் இருந்தும் யூனிகார்ன்கள் விரைவில் வெளிவரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நண்பர்களே,
மூலிகை தாவரங்களின் புதையலாக இந்தியா திகழும் நிலையில், இமயமலை இதற்கு பெயர் பெற்றது. இது ஒரு வகையில் நமது 'பச்சை தங்கம்'. மூலிகைகள் மற்றும் மருத்துவ தாவரங்கள் உற்பத்தி விவசாயிகளின் வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை அதிகரிக்க ஒரு நல்ல வழியாகும். இதன் மூலம் வேலைவாய்ப்புகளும் உருவாகும்.